ADVERTISEMENT

தொழிலதிபரை மிரட்டி வசூல் வேட்டை; பென்னாகரம் போலீஸ்காரர் உள்ளிட்ட இருவர் கைவரிசை!

03:40 PM Feb 13, 2020 | kalaimohan

ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்திருந்த பெங்களூரு தொழில் அதிபரை மிரட்டி பணம் பறித்த பென்னாகரம் காவல்நிலைய இரண்டாம்நிலைக் காவலர் உள்ளிட்ட இருவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளதோடு, காவலரின் நண்பரையும் கைது செய்துள்ளனர்.

கர்நாடகா மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி கொல்லப்பள்ளியைச் சேர்ந்தவர் மதுராஜ் ரெட்டி. தொழில் அதிபர். இவர் தனது நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து, கடந்த ஜன. 28ம் தேதி ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்திருந்தார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT


அப்போது, தேன்கனிக்கோட்டையை அடுத்துள்ள குந்துக்கோட்டை வனத்துறை சோதனைச்சாவடி அருகே, அஞ்செட்டி செல்லும் வழியில் மேடுபள்ளம் என்ற இடத்தில், மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் இருவர், மதுராஜ்ரெட்டியும் அவருடைய நண்பர்களும் வந்த காரை வழிமறித்து நிறுத்தினர். மர்ம நபர்கள் தங்களை காவல்துறையினர் என்று கூறியதுடன், ஓட்டுநர் உரிமம், பதிவுச்சான்றிதழ், காப்பீடு உள்ளிட்ட ஆவணங்களை காண்பிக்குமாறு கூறியுள்ளனர்.

அதன்படி மதுராஜ் ரெட்டி அந்த காருக்கு உண்டான பதிவு ஆவணங்கள், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்டவற்றை காண்பித்துள்ளார். ஆனாலும், அவர்களை மிரட்டி 10 ஆயிரம் ரூபாய் பறித்துக்கொண்டு மர்ம நபர்கள் இருவரும் அங்கிருந்து தப்பிச்சென்றனர். அவர்களின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த மதுராஜ், இதுகுறித்து தேன்கனிக்கோட்டை டிஎஸ்பி சங்கீதாவிடம் புகார் அளித்தார்.

காவல்துறையினர் நடத்திய விசாரணையில், மேற்படி சம்பவத்தில் ஈடுபட்டது தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள போடூரைச் சேர்ந்த மாதவன் மகன் பாரதி மோகன் (27) என்பதும், அவர் ஓசூர் நகர காவல்நிலையத்தில் இரண்டாம்நிலைக் காவலராக இருப்பதும் தெரிய வந்தது. அவருடன் வந்த மற்றொரு நபர், தர்மபுரி தடங்கம் பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் கார்த்திகேயன் (48) என்பதும் தெரிய வந்தது.

இந்நிலையில், கார்த்திகேயனை புதன்கிழமை (பிப். 12) காவல்துறையினர் கைது செய்தனர். காவல்துறை வலைவீசி தேடி வருவதை அறிந்த இரண்டாம்நிலைக் காவலர் பாரதிமோகன் தலைமறைவாகிவிட்டார். அவரை தேடி வருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT