ADVERTISEMENT

ஐ.டி. திருநங்கைக்கு நேர்ந்த கொடூரம்; சென்னையில் பயங்கரம்

06:08 PM Feb 21, 2024 | kalaimohan

குழந்தையைக் கடத்த வந்த நபர் எனத் திருநங்கை ஒருவரை அரை நிர்வாணப்படுத்தி சிலர் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் பரவி வைரலாகி இருந்தது. இந்த சம்பவத்தில் நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ADVERTISEMENT

சென்னை துரைப்பாக்கம் பகுதியில் உள்ள ஐ.டி. நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வரும் திருநங்கை ஒருவர், பம்மல் மூங்கில் ஏரிப் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் இரவு நேர உணவு சாப்பிடுவதற்காக வந்துள்ளார். பின்னர் ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு தனியாகச் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அந்தப் பகுதியில் இருந்த நபர்கள் சிலர் திருநங்கையைப் பார்த்தவுடன் அவர் குழந்தைகளைக் கடத்த வந்தவர் எனப் பேசிக்கொண்டே அவரை நெருங்கினர். தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திருநங்கையோ 'தான் இந்த பகுதியில் தான் வசித்து வருகிறேன்' எனத் தெரிவித்தார். இருப்பினும் விடாத அந்த நபர்கள், அவரைத் தாக்கியதோடு அரை நிர்வாணப்படுத்தி அந்த பகுதியில் உள்ள மின் கம்பத்தில் கட்டி வைத்து தாக்கினர்.

ADVERTISEMENT

அந்த பகுதியில் இருந்த சில நபர்களும் திருநங்கையைக் கொடூரமாகத் தாக்கினர். இந்த தகவல் சங்கர் நகர் காவல் நிலையத்திற்குத் தெரிவிக்கப்பட்ட நிலையில், அங்கு வந்த போலீசார் மின் கம்பத்தில் கட்டப்பட்ட திருநங்கையை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். திருநங்கை ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்ட இந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி பரவிய நிலையில், வீடியோ பதிவு அடிப்படையில் முருகன், நந்தகுமார் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். மேலும் மோகன், அசோக்குமார் என்பவர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

அண்மையில், சென்னையில் குழந்தை கடத்தும் கும்பல் ஒன்று குழந்தைகளைக் கடத்தி உடல் உறுப்புகளை அறுத்து எடுப்பது போன்ற வீடியோ காட்சிகள் பரவிய நிலையில், அந்த வீடியோவில் குழந்தைகளை கடத்தும் நபர் போலவே திருநங்கை இருந்ததால் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. அவர் மீது தாக்குதல் நடத்தும் வீடியோவில், ''நீ தான இது" என நபர்கள் சிலர் மொபைலில் உள்ள வீடியோவை காட்டி கேள்வி எழுப்பினர். ஆனால் திருநங்கை 'அது நான் இல்லை' என சொல்லியும் கேட்காமல் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது போலீசார் விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT