ADVERTISEMENT

லோயர் கேம்பில் பவதாரணியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது!

04:59 PM Jan 27, 2024 | tarivazhagan

இசைஞானி இளையராஜா மகள் பவதாரணி உடல்நலக் குறைவால் கடந்த 25ம் தேதி உயிரிழந்தார். அவரின் உடல் தேனி மாவட்டம், லோயர்கேம்ப் முல்லைப்பெரியாறு ஆற்றங்கரையோரம் இளையராஜாவுக்கு சொந்தமான இடத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

பிரபல இசையமைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜா தேனி மாவட்டம், பண்ணைபுரத்தைச் சேர்ந்தவர். சிறுவயதிலேயே இசை ஆர்வத்தால் சென்னைக்கு இடம் பெயர்ந்தார். இவருக்கு ஜீவா என்ற மனைவியும், கார்த்திக்ராஜா, பவதாரணி, யுவன்சங்கர்ராஜா ஆகிய பிள்ளைகளும் உள்ளனர். மனைவி ஜீவா 2011 ஆம் ஆண்டு உயிரிழந்தார். இளையராஜாவுடன் இணைந்து இசைத்துறையில் பவதாரணி செயல்பட்டு வந்தார். பிரபுதேவா நடித்த ராசய்யா என்ற படத்தில் இடம்பெற்ற மஸ்தானா மஸ்தானா என்ற பாடலை பாடி பின்னணிப் பாடகியாக தன் திரைப்பயணத்தைத் தொடர்ந்தார். 2001 ஆம் ஆண்டு பாரதி என்ற படத்தில் மயில் போல பொண்ணு ஒன்னு என்ற பாடல் பாடியதற்காக தேசிய விருது பெற்றார். இதனைத்தொடர்ந்து 2002 மித்ர் மை பிரண்ட் என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். பிறகு அமிர்தம், இலக்கணம், வெள்ளச்சி, மாயநதி உள்ளிட்ட 10 படங்களுக்கு இசையமைத்தார்.

ADVERTISEMENT

பாடகி மற்றும் இசையமைப்பாளரான பவதாரணிக்கு சபரிராஜ் என்பவருடன் திருமணம் முடிந்தது. இந்தத் தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. உடல்நலக்குறைவால் கடந்த 5 மாதங்களாக இலங்கையில் சிகிச்சைப் பெற்று வந்தார் பவதாரணி. இந்நிலையில் தான் கடந்த 25ம் தேதி இலங்கையில் அவர் உயிரிழந்தார். அவரின் உடல் விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டு, தி.நகரில் உள்ள இளையராஜா இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. நடிகர்கள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள், பாடகர்கள் உள்ளிட்ட திரைத்துறையினர் அஞ்சலி செலுத்தினர். ரஜினி, கமல், ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் பவதாரணியின் உடல் இளையராஜாவின் சொந்த ஊரான தேனி மாவட்டத்திற்கு கொண்டுவரப்பட்டு இறுதி சடங்குகள் நடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சென்னையில் இருந்து இன்று காலை தேனி மாவட்டம் லோயர்கேம்ப்புக்கு கொண்டு வரப்பட்டது. அப்போது தி.மு.க. தேனி வடக்கு மாவட்ட செயலாளர் தங்கத்தமிழ்ச் செல்வன், தெற்கு மாவட்ட செயலாளர் கம்பம் ராமகிருஷ்ணன், ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன், தேனி சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமார் ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்கள். அதுபோல் முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ். மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத்குமார், அ.தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் முருக்கோடைராமர், மேற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜக்கையன் உள்பட கட்சி பொறுப்பாளர்களும், முக்கிய பிரமுகர்களும் பவதாரணிக்கு மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.

தேனி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் முல்லைப்பெரியாறு தொடங்கும் இடமான லோயர்கேம்ப் பகுதியில் ஏழரை ஏக்கர் நிலத்தை இசைஞானி இளையராஜா வாங்கியிருக்கிறார். அதில் தங்குவதற்கு பங்களாவுடன் சிரி குரு கிருபா வேத பாடசாலா என்ற வளாகத்தை அமைத்திருந்தார். சொந்த ஊர் பண்ணைபுரம் என்பதால் இளையராஜாவின் தாயார் சின்னத்தாயிக்கு அங்கே நினைவிடம் அமைத்திருந்தார். கடந்த 2011-ல் அவரது மனைவிக்கும் அதே இடத்தில் நினைவிடம் அமைத்தார். ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையின்போது இளையராஜா குடும்பத்தினருடன் அஞ்சலி செலுத்துவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

இந்நிலையில் தாய் மற்றும் மனைவியின் நினைவிடத்திற்கு இடையே மகளின் உடலை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இறுதி சடங்குகள் செய்து பவதாரணியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இப்படி இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரணி திடீரென உடல்நலம் குறைவால் இறந்தததை கண்டு தேனி மாவட்டத்தில் உள்ள சொந்த ஊரான பண்ணைப்புரத்தில் உள்ள மக்களும் தேனி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் உள்ள மக்களும் சோகத்தில் இருந்து வருகிறார்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT