ADVERTISEMENT

அழகான குடும்பத்தை அழித்த 'குடி'யின் கொடூரம்!

09:29 AM Jul 07, 2020 | rajavel

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ளது திருவதிகை. இங்குள்ள எஸ்.கே.வி. நகரில் வசித்து வந்தவர் 31 வயது சிவக்குமார். இவர் கோயில்களில் சிலைகள் செய்யும் சிற்பக் கலைஞர். இவரின் மனைவி 24 வயது சரண்யா. இவர்களுக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. 5 வயதில் விக்னேஷ், மூன்று வயது தினேஷ் என்று இரண்டு மகன்கள் உள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளாகவே சிவகுமார் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார். அருமையான தொழில், நல்ல வருமானம், அதை எப்போதும் மது போதையிலேயே செலவழித்து வந்துள்ளார். இதனால் குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டது. குடியை விட்டுவிடுமாறு அவரது மனைவி சரண்யா தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். கணவன் மனைவி இருவருக்குமிடையே அடிக்கடி குடும்பப் பிரச்சனை, சண்டை சச்சரவு ஏற்பட்டுள்ளது.

இந்தச் சூழ்நிலையில் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால் சிவக்குமார் இரண்டு நாட்களுக்கும் சேர்த்து குடிப்பதற்காக மது பாட்டிலை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதைப் பார்த்த வமனைவி சரண்யா கணவரைக் கண்டித்துள்ளார். இதனால் தம்பதிகளுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கோபத்துடன் சிவகுமார் வீட்டுக்கு வெளியே வந்து அமர்ந்திருந்தார். கணவர் சம்பாதிக்கும் பணத்தைக் குடியிலே செலவழித்து வருவது சரண்யாவை மிகவும் வருத்தமடையச் செய்தது. இனி இவர் திருந்த மாட்டார் என எண்ணி மனமுடைந்த சரண்யா வீட்டுக்குள் தூக்குமாட்டி தொங்கினார்.

தற்செயலாக வீட்டுக்குள் சென்ற சிவகுமார் சரண்யாவின் நிலையைப் பார்த்து கதறி அழுதுள்ளார். இவரது அழுகுரல் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று அவர்கள் உதவியுடன் சரண்யாவை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

இந்த நிலையில் மனைவி இறந்த துக்கம் தாங்காமல் சிவகுமார் தனது குடியினால் தான் மனைவியை இழந்து விட்டோம் என்று வேதனைப்பட்ட அவர் மனைவி சரண்யாவின் சேலையை எடுத்து அதில் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கணவன் மனைவி அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை அறிந்த அந்த ஊர் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் பண்ருட்டி காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. பண்ருட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். குடிப்பழக்கத்தால் மனைவியும் கணவனும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம், அவர்களது இரு குழந்தைகளின் எதிர்காலம் கருதி அப்பகுதி மக்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். குடி குடியைக் கெடுக்கும் குடிப் பழக்கம் உடல் நலத்தைக் கெடுக்கும். அதோடு நல்ல குடும்பத்தையும் கெடுக்கும் இதை அரசாங்கம் எப்போதுதான் உணர போகிறதோ? மதுவுக்கு எப்போதுதான் தடை போடுமோ? எனக் குடும்பப் பெண்கள் ஆதங்கப்பட்டனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT