/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/salem ok121.jpg)
சேலம் அருகே, திருமணம் ஆன 43 நாளிலேயே மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த கணவன், மனைவியை கழுத்து அறுத்துக் கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலத்தை அடுத்த கோராத்துப்பட்டியைச் சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 33). விவசாயி. வீட்டைச் சுற்றி சொந்தமாக ஒரு ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இவருடைய மனைவி மோனிஷா (வயது 19). இவர்களுக்கு திருமணமாகி 43 நாள்கள் மட்டுமே ஆகின்றன. தங்கராஜ், பகுதி நேரமாக கேபிள் டிவி வயர் இணைப்பு கொடுக்கும் வேலையும் செய்து வந்தார்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை (ஏப். 6) இரவு வழக்கம்போல் உணவு சாப்பிட்டுவிட்டு, தூங்கச்சென்றனர். புதன்கிழமை காலையில் நீண்ட நேரமாகியும் அவர்கள் வீட்டுக்கதவு திறக்கப்படவில்லை. அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்து, கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
வீட்டுக்குள், மோனிஷா கழுத்து அறுபட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்தார். தங்கராஜ், கேபிள் டிவி வயரில் தூக்கிட்டு சடலமாகத் தொங்கினார். சடலங்களைக் கண்டு உறவினர்களும், அக்கம்பக்கத்தினரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து வீராணம் காவல்நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. அஸ்தம்பட்டி சரக காவல்துறை உதவி ஆணையர் ஆனந்தகுமார் மற்றும் காவல்துறையினர் நிகழ்விடத்திற்கு விரைந்து சென்று விசாரித்தனர்.
இருவரின் சடலங்களும் மீட்கப்பட்டு, உடற்கூராய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. திருமணம் நடந்த சில நாள்களிலேயே மோனிஷாவின் நடத்தையில் தங்கராஜூக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவர் அடிக்கடி செல்போனில் பேசிக்கொண்டிருப்பதையும் கணவர் கண்டித்துள்ளார்.
சேலம் கன்னங்குறிச்சிதான் மோனிஷாவின் சொந்த ஊராகும். அங்கு மோனிஷாவின் அத்தை மோகனா குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவருக்கு 2 மகன்கள் உள்ளனர். அவர்களில் ஒருவர், மோனிஷாவின் தங்கையிடம் நெருங்கிப் பழகி வருகிறார்.
இந்நிலையில் கடந்த மார்ச் 24- ஆம் தேதி, அவருடைய அத்தை மகனுக்கு பிறந்த நாள் வந்தது. இதையடுத்து அவர் பிறந்த நாளை கொண்டாட கோராத்துப்பட்டியில் உள்ள மோனிஷா வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அந்த வாலிபர், அவருக்கு கேக் கொடுத்துள்ளார். இதை நேரில் பார்த்த தங்கராஜூக்கு, மனைவியின் நடத்தையில் மேலும் சந்தேகம் வலுத்தது. அந்த நாளில் இருந்து தினமும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.
மனைவி தடம் மாறிவிட்டதாக கருதிய தங்கராஜ், அவரை தீர்த்துக்கட்ட தீர்மானித்துள்ளார். இதையடுத்து ஏப். 6- ஆம் தேதி மனைவியை கத்தியால் கழுத்து அறுத்துக் கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்திருக்கலாம் என்கிறது காவல்துறை தரப்பு. இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)