ADVERTISEMENT

திமுக கவுன்சிலர் மீது தாக்குதல்; சிதம்பரத்தில் பரபரப்பு!

05:59 PM Apr 05, 2024 | ArunPrakash

சிதம்பரத்தில் தேசிய வாக்காளர் பேரவை என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் துணை அமைப்பான சமுதாய நல்லிணக்க தொடர்பு அமைப்பு உள்ளது. இதன் தலைவரான குரு சுப்ரமணியம் தலைமையில் 3 பேர் விளங்கியம்மன் கோயில் தெருவில் பாஜகவிற்கு ஆதரவாக யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் நூற்றுக்கணக்கான நமது கோயில்களை இடித்தவர்களுக்கா? அல்லது இடிக்கப்பட்ட நமது பெருமை மிகுந்த கோயில்களை மீட்டு அற்புதமாய் கட்டியவர்களுக்கா? ஆட்சி பதவிக்காக எதை வேண்டுமானாலும் செய்பவர்களுக்கா? உங்கள் வாக்கு என 24 வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரத்தை வீடு வீடாக சென்று வழங்கினார்கள்.

ADVERTISEMENT

அப்போது விளங்கி அம்மன் கோவில் தெருவில் வசிக்கும் திமுக 10-வது வார்டு உறுப்பினர் சி .கே ராஜன் என்பவர் ஏன் மதக் கலவரத்தை தூண்டும் வகையில் துண்டு பிரசுரம் வழங்குகிறீர்கள். யாரிடம் அனுமதி பெற்றீர்கள் எனக் கேட்டுள்ளனர். அதற்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சார்ந்தவர்களும் தேசிய வாக்காளர் பேரவை நிர்வாகிகளும், திமுக வார்டு உறுப்பினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஒரு கட்டத்தில் அவரை தாக்கியுள்ளனர்.

ADVERTISEMENT

இதனைப் பார்த்த அருகில் இருந்த சிதம்பர நகராட்சி துப்புரவு பணியாளர் திலகவதி என்ற பெண் தடுத்தபோது அவரையும் தாக்கியுள்ளனர். இதனை அறிந்த திமுகவினர் சம்பவ இடத்திற்கு கூட்டமாக வந்தனர். அப்போது இவர்களிடத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் காயம் அடைந்ததாக திமுக நகர்மன்ற உறுப்பினர் சி கே ராஜன், துப்புரவு பணியாளர் திலகவதி, ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்த குரு சுப்பிரமணியன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். துண்டு பிரசுரம் வழங்கிய 3 பேரை சிதம்பரம் காவல்துறையினர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனையெடுத்து திமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஒருபுறம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு அனுமதி இன்றி துண்டு பிரசுரம் வழங்கி மதக் கலவரத்தையும் ஏற்படுத்தியவர்களையும், விளக்கம் கேட்ட நகர்மன்ற உறுப்பினர் மற்றும் துப்புரவு பணியாளரை தாக்கிய குற்றவாளிகளையும் கைது செய்யுமாறு காவல்நிலையத்தில் திரண்டனர். அதேபோன்று பாஜகவினர், பாட்டாளி மக்கள் கட்சியினர் மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் மற்றொரு பக்கம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு துண்டு பிரசுரங்கள் வழங்கியவர்களை தாக்கிய குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் காவல் நிலையம் பகுதியில் பதட்டம் ஏற்பட்டு இரு தரப்பினரும் மோதிக் கொள்ளும் சூழல் ஏற்பட்டது. அப்பொழுது காவல்துறையினர் இரு பிரிவினரையும் தடுத்து தனித்தனியே அனுப்பி வைத்தனர். இருப்பினும் சிதம்பரம் நகர காவல் நிலையம் உள்ள மேலரத வீதியில் பதற்றம் நிலவியது.

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் 6-ந் தேதி சிதம்பரம் புறவழி சாலையில் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சுதா ஆகியோரை ஆதரித்து பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் பேச உள்ளார். இந்த நிலையில் மதகலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் இது போன்ற செயலில் ஈடுபட்டுள்ளதாக திமுகவினர் கூறுகின்றனர். பாஜகவினர் அனைவரிடத்திலும் துண்டு பிரசுரம் வழங்கி வாக்கு கேட்க உரிமை உண்டு என்கின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT