ADVERTISEMENT

மாற்றப்பட்டதா வாக்குப்பெட்டிகள்... எதிர்க்கட்சிகள் சாலைமறியல்... அதிகாரிகள் சஸ்பெண்ட்?

09:58 PM Oct 10, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக அக்டோபர் 6 ஆம் தேதி மற்றும் அக்டோபர் 9 ஆம் தேதி நடைபெற்றன. வாக்குப்பெட்டிகள் பாதுகாப்பாக அந்தந்த ஒன்றியங்களில் வைக்கப்பட்டுப் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வரும் அக்டோபர் 13ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள 6 ஒன்றியங்களில் மூன்று ஒன்றியங்களுக்கான தேர்தல் அக்டோபர் 6ஆம் தேதியும், ஆலங்காயம், மாதனூர் ஒன்றியம் உட்பட 3 ஒன்றியங்களுக்கான தேர்தல் அக்டோபர் 9ஆம் தேதியும் நடைபெற்றன. ஆலங்காயம் ஒன்றியத்தில் 161 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பெட்டிகள் ஆலங்காயம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கொண்டுவந்து பாதுகாப்பாக வைக்கப்பட்டு அனைத்து அரசியல் கட்சிகளின் தலைமை முகவர்களின் முன்னிலையில் அறைகளுக்குச் சீல் வைக்கப்பட்டது. அதற்கு இரண்டடுக்கு காவல்துறை பாதுகாப்பும், சிசிடிவி கேமரா கண்காணிப்பு பாதுகாப்பும் பலமாக வைக்கப்பட்டிருந்தது. அந்த பள்ளி வளாகத்தில் திமுக, அதிமுக, பாமக உட்பட அனைத்து அரசியல் கட்சிகளின் முகவர்களும் அதிகாரிகளோடு சேர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டிருந்தனர்.

அக்டோபர் 10 ஆம் தேதி மதியம் ஆலங்காயத்துக்கு உட்பட்ட வாணியம்பாடி தொகுதி எம்.எல்.ஏவான அதிமுகவை சேர்ந்த செந்தில்குமார், பதிவு செய்யப்பட்ட சிசிடிவி கேமரா பதிவுகளைச் சுட்டிக்காட்டி அதிகாரிகள் எதற்காக அறைக்குள் செல்கிறார்கள், வாக்குப்பெட்டி எதற்கு சம்மந்தம்மில்லாமல் கொண்டு செல்கிறார்கள் எனக்கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு அதிகாரிகள் சரியாக பதில் சொல்லவில்லையாம். அதனைத் தொடர்ந்து அதிமுக, பாமக, பாஜவினர் ஆலங்காயத்தில் அந்த பள்ளி முன் குவிந்து சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

அங்கு வந்த காவல்துறை அதிகாரிகளிடம் ஆளும்கட்சியான திமுகவுக்கு சாதகமாக அதிகாரிகள் வாக்குபெட்டிகளை மாற்றம் செய்துள்ளார்கள் எனக்குற்றம் சாட்டினார்கள் அதிமுக பிரமுகர்கள். அதோடு, வாக்கு எண்ணும் மையத்திலிருந்த நாற்காலிகள் அடித்து உடைக்கப்பட்டன. மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான அமர்குஷ்வாவிடம் புகார்கள் தெரிவித்தனர். மாநில தேர்தல் ஆணையத்துக்கும் புகார்கள் தெரிவித்தனர்.

கிரிசமுத்திரம், மிட்டூர், நெக்னாமலை புருஷோத்தமகுப்பம் கிராமங்களில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி பெட்டிகளில் சீல் வைக்கப்பட்டுக் கட்டப்பட்டிருந்த சிலிப்கள் கீழே கிடந்ததைப் புகைப்படம், வீடியோ எடுத்து மாவட்ட தேர்தல் அதிகாரிக்குப் புகார்கள் தெரிவித்தனர். இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர். தற்போது ஆலங்காயம் ஒன்றிய தேர்தல் அலுவலர்களான உமாமகேஸ்வரி, சிவக்குமார் ஆகிய இரு அதிகாரிகள் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட வேண்டும் எனக் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


ஜோலார்பேட்டை எம்.எல்.ஏவும், திருப்பத்தூர் மாவட்ட திமுக மாவட்ட பொறுப்பாளருமான தேவராஜ்யின் சொந்தவூர் செக்குமேடு. இது ஆலங்காயம் ஒன்றியத்துக்கு உட்பட்டது. வேட்புமனுதாக்கலின்போதே ஆளும்கட்சியான திமுகவினருக்கு சாதகமாக அதிகாரிகள் நடந்துகொள்ள வேண்டும், நாங்கள் ஆளும்கட்சி, எங்களை பகைச்சிக்காதே என அதிகாரிகளை மிரட்டினார். அவரது உத்தரவின்படித்தான் அதிகாரிகள் பெட்டிகளை மாற்றியுள்ளார்கள். ஆளும்கட்சி அராஜகம் இங்குத் தொடங்கியுள்ளது. வாக்கு எண்ணிக்கை நேர்மையாக நடக்கும் என்கிற நம்பிக்கையில்லை எனக் குற்றம்சாட்டுகிறார்கள் அதிமுக உட்பட எதிர்கட்சியினர்.

அதோடு திருப்பத்தூர் மாவட்ட பொறுப்பாளரும், எம்.எல்.ஏவுமான தேவராஜ் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும், அவரது எம்.எல்.ஏ பதவியை சட்டப்படி பறிக்க வேண்டும், அவரை தேர்தலில் போட்டியிடாதபடி தகுதிநீக்கம் செய்ய வேண்டுமென்ற கோரிக்கை சமூக வலைத்தளங்கள் வாயிலாக எழுப்பி வருகின்றனர் எதிர்க்கட்சியினர். இது திருப்பத்தூர் மாவட்டத்தைத் தாண்டியும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT