ADVERTISEMENT

சாராய வியாபாரிகளைக் கைதுசெய்; காவல்நிலையத்தை முற்றுகையிட்ட பெண்கள்!

09:49 AM Apr 23, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

நாகை அருகே இறையான்குடி கிராமத்தைச் சேர்ந்த சாராய வியாபாரிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி வலிவலம் காவல்நிலையத்தை கிராம மக்கள் முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளை அடுத்த இறையான்குடி கிராமத்தில் சுமார் 700க்கும் மேற்பட்ட விவசாய கூலித்தொழிலாளர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கிராம மக்களின் ஒற்றுமையால் அந்த பகுதியில் கள்ளச் சாராயமே இல்லாமல் இருந்து வந்துள்ளது.


இந்நிலையில், புதுச்சேரி மாநிலம் காரைக்காலிலிருந்து சட்டவிரோதமாக கள்ளச்சாராயமும், ஸ்பிரிட் சாராயமும் கடத்தி வரப்பட்டு இறையான்குடி மற்றும் சிங்கமங்கலம் கிராமத்தின் தெருக்களிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சாராய விற்பனையில் ஈடுபட்டவர்களை கைது செய்யக் கோரி பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இது தொடர்பாக காவல் நிலையத்தில் பல முறை புகார் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கொதிப்படைந்த பொதுமக்கள், நேற்று வலிவலம் காவல் நிலையத்தில் புகாரளிக்க கிராமத்தைச் சேர்ந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் கிராம பொதுமக்கள் திரண்டனர். அப்பொழுது சாராயம் விற்பனை செய்பவர்களை உடனடியாக கைது செய்யக் கோரி கண்டன முழக்கங்களை எழுப்பியபடியே காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


காவல் நிலையத்தில் யாரும் புகார் தெரிவித்தால் அவர்களைக் கொலை செய்துவிடுவோம் என மிரட்டல் விடுப்பதாகவும், அவ்வழியே செல்லும் பள்ளி கல்லூரி மாணவர்கள் பாதிக்கப்படுவதால் அவர்களது நலன் கருதி உடனடியாக விற்பனையை தடுத்து நிறுத்தக் கோரியும் கிராம மக்கள் காவல்துறையினரிடம் முறையிட்டனர்.

பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய வலிவலம் காவல் உதவி ஆய்வாளர் சரவணன், ‘நான் நீண்ட விடுப்புக்கு பிறகு பணிக்குச் சேர்ந்து இரண்டு நாட்களே ஆகியிருக்கு; வந்ததுமே சாராய விற்பனை தொடர்பான புகார் வந்தது, இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என உறுதி அளித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். புகார் அளிக்க வந்த கிராம மக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT