ADVERTISEMENT

சாலையோரம் சடலமாகக் கிடந்த இளம் பெண் வழக்கில் திடீர் திருப்பம் 

10:08 AM Jun 02, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

அரியலூர் மாவட்டம், அரியலூர் - ஜெயங்கொண்டம் சாலையில் தத்தனூர் அருகே உடலில் ரத்த காயங்களுடன் ஒரு இளம் பெண் உயிரிழந்து சடலமாக கிடந்துள்ளார். அப்போது சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் இதை பார்த்துவிட்டு உடையார்பாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இதையடுத்து போலீசார் விரைந்து வந்து அந்தப் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பியதோடு அந்த இளம் பெண் யார் என்பது தீவிர விசாரணை நடத்தினர். அதில் உயிரிழந்த இளம்பெண், பெரம்பலூர் மாவட்டம் அல்லிநகரம் பகுதியைச் சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவரின் மகள் அபிநயா (வயது 23) என தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் நடத்திய தொடர் விசாரணையில் அபிநயாவின் தந்தை சண்முகசுந்தரம் இறந்துவிட்ட நிலையில் குடும்பத்தை காப்பாற்றவும், வறுமை காரணமாகவும் அபிநயா அரியலூரில் உள்ள ஒரு மளிகைக்கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் வேலைக்கு சென்ற அவர் நேற்று முன்தினம் மதியம் தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கடை உரிமையாளரிடம் கூறிவிட்டு, வீட்டுக்கு செல்வதாக புறப்பட்டுள்ளார். ஆனால் அபிநயா வீட்டுக்கு செல்லவில்லை என கூறப்படுகிறது.

மேலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அபிநயா தஞ்சாவூருக்கு வேலைக்கு சென்று வந்த போது, தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் மகன் பார்த்திபனுடன் (வயது 33) பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் காதலித்து வந்துள்ளனர். ஆனால் இரு வீட்டிலும் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி அபிநயாவை திருமணம் செய்துகொள்வதாக பார்த்திபன் உறுதி அளித்துள்ளார். இதனை நம்பிய அபிநயாவும் காதலனுடன் பல்வேறு இடங்களுக்கு அவ்வப்போது சென்று வந்துள்ளார்.

இதன் காரணமாக தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூர் சென்ற உடையார்பாளையம் போலீசார், பார்த்திபனை பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் தெரிவித்ததாக காவல்துறை தரப்பில் கூறியதாவது; பார்த்திபனும், அபிநயாவும் காதலித்து வந்துளனர். இந்நிலையில், பார்த்திபனுக்கு அவரது பெற்றோர் வேறு இடத்தில் பெண் பார்த்து திருமணமும் நிச்சயித்துள்ளனர். அதன்படி பார்த்திபனுக்கு வருகிற 6-ந்தேதி பந்தநல்லூரில் உள்ள ஒரு மண்டபத்தில் திருமணம் நடைபெறுவதாக இருந்துள்ளது.

இதனை அறிந்த அபிநயா அதிர்ச்சி அடைந்திருக்கிறார். உடனே பார்த்திபனை செல்போனில் தொடர்பு கொண்ட அவர், தன்னை ஏமாற்றி விட்டதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். நேற்று முன்தினம் இரவு உடையார்பாளையம் பகுதிக்கு தனது நண்பர்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக பார்த்திபன் வந்துள்ளார். அப்போது அவரை, அபிநயா நேரில் சென்று சந்தித்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் பார்த்திபன் தனது மோட்டார் சைக்கிளில் அபிநயாவை அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே பொட்டக்கொல்லை திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் தடுப்புக்கட்டையில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் பார்த்திபனுக்கு பின்பக்க தலையிலும், அபிநயாவுக்கு உடல் முழுவதும் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. அந்த சமயம் விபத்து நடந்த பகுதியில் பலத்த மழை பெய்துள்ளது. உதவிக்கு யாரையும் அழைக்க முடியாத நிலையில் பார்த்திபன், அபிநயாவை சாலையோரம் விட்டுவிட்டு பார்த்திபன் மட்டும் அங்கிருந்து தனது மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு பந்தநல்லூர் சென்றிருக்கிறார். அபிநயா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்துள்ளார்.

மேலும் விபத்தில் சிக்கியதாக கூறப்படும் வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்து உடையார்பாளையத்திற்கு கொண்டுவந்துள்ளனர். மேலும் உண்மையிலேயே விபத்து ஏற்பட்டு அபிநயா உயிரிழந்தாரா அல்லது தனது தன்னை ஏமாற்றி விட்டு திருமணம் செய்ய முடிவு செய்து காதலனிடம் தகராறு செய்த அபிநயா மூலம் தனது திருமணத்திற்கு பிரச்சனை வந்து விடக்கூடாது என்பதற்காக காதலியை நேரில் வரவழைத்து அவரை கொலை செய்துவிட்டு பார்த்திபன் நாடகம் ஆடுகிறாரா? என பலத்த சந்தேகம் போலீசார் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் உடையார்பாளையம் பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT