ADVERTISEMENT

“கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து சிறையில் அடையுங்கள்”- சீமான் ஆவேசம்

05:57 PM Mar 29, 2023 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து சிறைப்படுத்த வேண்டுமென நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

விசாரணை கைதிகளின் பற்களைப் பிடுங்கியதாக திருநெல்வேலி மாவட்ட அம்பாசமுத்திரம் உதவி காவல்துறை கண்காணிப்பாளர் பல்வீர் சிங் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இவ்விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சட்டப்பேரவையில் முதலமைச்சர் இது குறித்து விளக்கமளித்தார்.

முதலமைச்சர் ஸ்டாலின் கூறியதாவது, “குற்றச்செயல்களில் ஈடுபட்டு விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட சிலரின் பற்களைச் சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டு வந்தவுடன் சேரன்மகாதேவி சார் ஆட்சியர் உட்கோட்ட நடுவர் தலைமையில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு விசாரணை துவங்கப்பட்டது. அந்த ஏ.எஸ்.பி. உடனடியாக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.

காவல் நிலையங்களில் மனித உரிமை மீறல்கள் தொடர்பான சம்பவங்களில் எந்த விதமான சமரசங்களையும் இந்த அரசு மேற்கொள்ளாது என்பதை இந்த அவையில் நான் ஏற்கனவே தெரிவித்திருக்கிறேன். அந்த வகையில் இந்த விரும்பத்தகாத சம்பவத்தில் ஈடுபட்ட அம்பாசமுத்திர கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளரை பணி இடைநீக்கம் செய்யவும் உத்தரவிட்டுள்ளேன் என்பதையும் இங்கே தெரிவித்துக் கொள்கிறேன். முழுமையான விசாரணை அறிக்கை வந்த பிறகு இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர் மீது உரிய மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் நான் உறுதி அளிக்கிறேன்” என்று தெரிவித்தார்.

இந்நிலையில் இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் கைது செய்யப்படுபவர்களது பற்களைப் பிடுங்கியும், பிறப்புறுப்புப் பகுதியில் கொடூரமாகத் தாக்கியுமென காவல் உதவி கண்காணிப்பாளர் பல்வீர் சிங் கொடுஞ்சித்திரவதையில் ஈடுபடும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. விசாரணை எனும் பெயரில் வரம்பு மீறி கொடூரமான மனிதவதையை அரங்கேற்றியுள்ள பல்வீர் சிங்கின் செயல் கடும் கண்டனத்திற்குரியது.

மனிதநேயம் துளியுமில்லாத பல்வீர் சிங் போன்றவர்கள் மக்கள் சேவைப்பணிகளில் இருக்கவே தகுதியற்றவர்கள். ஏற்கனவே காவல்துறைக்கும் பொதுமக்களுக்குமிடையே பிணைப்பில்லாத தற்காலச்சூழலில், இதுபோன்ற கொடும் நிகழ்வுகள் காவல்துறை மீது மக்களுக்கு பெரும் வெறுப்பை உருவாக்கிவிடும். பல்வீர் சிங்கை காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றியிருப்பது போதுமான நடவடிக்கை இல்லை. எளிய மக்களிடம் அத்துமீறித் தாக்குதலில் ஈடுபடும் காவலர்களை சடங்குக்கு ஏதாவது ஒரு துறைசார்ந்த நடவடிக்கைக்கு மட்டும் உட்படுத்திவிட்டு, அவர்கள் செய்த தவறுக்கான தண்டனையை அளிக்காது சட்டத்தின் பிடியிலிருந்து அவர்களைத் தப்பவிடும் அரசின் செயல்பாடு வெட்கக்கேடானது.

ஆகவே, காவல் உதவி கண்காணிப்பாளர் பல்வீர் சிங்கை உடனடியாக நிரந்தரப் பணிநீக்கத்திற்கு உட்படுத்த வேண்டுமெனவும், அவர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து சிறைப்படுத்த வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். இத்தோடு, தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா ஒரு இலட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமெனவும், அவர்களுக்கு தகுந்த மருத்துவ சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT