ADVERTISEMENT

“அ.தி.மு.க. ஆட்சியில் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை நடத்தாமல் இழுத்தடிக்கின்றன” - ஞானமூர்த்தி

03:04 PM Jan 13, 2021 | tarivazhagan

ADVERTISEMENT

மாதிரி படம்

பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் அனைத்து தொழிற்சங்கங்களும் நேற்று (12/01/2021) காலை 11 மணியிலிருந்து இரவு 7 மணிவரை உள்ளிருப்பு வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின் அதிகாரிகளுடன் நடந்த பேச்சு வார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டு போரட்டத்தைக் கைவிட்டனர். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பெரம்பலூர் கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவர் ஞானமூர்த்தி, ‘பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் அனைத்து தொழிற்சங்கங்களும் நேற்று (12-1-2021) காலை 11 மணியிலிருந்து இரவு 7 மணிவரை உள்ளிருப்பு வேலை நிறுத்தம் நடத்தியுள்ளனர்.

ADVERTISEMENT

அதிகாரிகளுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டு இரவு 7 மணிக்கு ஆலை அரவை துவங்கியிருக்கிறது. நேற்று மட்டும் சுமார் 120 டிராக்டர்கள் கரும்பு லோடோடு ஆலை முன்பாக நிறுத்தப்பட்டிருந்தது. எங்கே வேலைநிறுத்தம் தொடருமோ என்ற கவலையில் நாங்கள் இருந்தாலும் பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட உடன்பாடு மகிழ்ச்சி அளிக்கிறது.

தமிழ்நாட்டில் 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகளும், 13 கூட்டுறவு சர்க்கரை ஆலைகளும் உள்ளன. இதில் தற்போது 5 ஆலைகள் மட்டுமே இயங்கி வருகின்றன. இதில் அரசின் அலட்சியப் போக்காலும், நிர்வாக குளறுபடியாலும், தவறான சர்க்கரை கொள்கையாலும், ஆலைகளுக்கு உதிரிபாகங்கள் வாங்குவதில் நடைபெறும் முறைகேடுகளாலும் 10 சர்க்கரை ஆலைகள் மூடப்படும் அபாயம் உள்ளது.

சர்க்கரை ஆலை தொழிலாளிகளுக்கு இரு வேறு விதமான சம்பளம் வழங்கப்படுகிறது. பொதுத் தொகுப்பு பணியாளர்களுக்கு அரசுக்கு நிகரான சம்பளமும், படியும், ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் வழங்கப்படுகிறது. ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு வேஜ் போர்டு ஊதியம் வழங்கப்படுகிறது. அதிலும் 11 நாளைக்கு ஒருநாள் சம்பளத்துடன் விடுப்பு என்கிற வேஜ போர்டு ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தவில்லை.

முப்பது ஆண்டுகளாக பணிபுரியும் மூத்த தொழிலாளர்களுக்குக் கூட 22,000த்திற்கும் மேல் ஊதியம் பெற முடியவில்லை. அ.தி.மு.க. ஆட்சியில் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை நடத்தாமல் கடந்த 10 ஆண்டுகளாக இழுத்தடிக்கின்றன. இந்த பத்து ஆண்டுகளில் மூன்று ஆண்டுகளுக்கு ‌ஒருமுறை என்று மூன்று பேச்சுவார்த்தை நடத்தி ஊதிய உயர்வு வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

இடைக்கால நிவாரணம் என்று 2,000 ரூபாய் மட்டுமே வழங்கி தொழிலாளர்களை ஏமாற்றி வருகின்றனர். இதன் காரணமாகவும், தற்சமயம் ஈட்டிய விடுப்பிற்கான ஒப்படைப்பு சம்பளம் வழங்கக் கோரியும் சர்க்கரை ஆலைத் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

சம்பள உயர்வு தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத்தும் தொழிலாளர்களை அலட்சியபடுத்தி வருகிறார்கள். அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த 10 ஆண்டுகளில், சர்க்கரைத் துறை பெரும் நட்டத்திற்கு தள்ளப்பட்டு, ஆலைகளைத் தனியாருக்கு தாரைவாற்கும் நிலைக்குத் தள்ளிவிட்டனர்.

எடப்பாடி பழனிசாமி அரசு தொழிலாளர்களை அட்சியப்படுத்தாமல் அழைத்துப் பேசி, பொதுத்தொகுப்பு ஊழியர்களுக்கு வழங்கும் சம்பளம் தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT