ADVERTISEMENT

“வாக்கு எண்ணும் மையத்தின் தகரச் சீட்டுகளை உடைத்தெறிவோம்”- மிரட்டல் விடுத்த அதிமுக வேட்பாளர் மீது வழக்கு!

05:33 PM Oct 11, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஒன்பது மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்று வந்தது. இதில் இரண்டாவது கட்ட தேர்தல் வாக்களிப்பு கடந்த ஒன்பதாம் தேதி நடைபெற்றது. இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டதன் பேரில் அதிமுக வேட்பாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து நாம் விசாரித்ததில், இந்த ஒன்றியத்திலுள்ள பேரங்கியூர், ஆனத்தூர், கருவேப்பிலைபாளையம், பெரியசெவலை, ஆம்பூர், கொளத்தூர், சித்தலிங்கமடம், எடப்பாளையம் உட்பட 50 ஊராட்சிகளுக்கும் அதில் அடங்கிய கிராமப்புற வார்டுகளுக்கும் ஒன்றிய, மாவட்ட குழு உறுப்பினர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடந்து முடிந்தது.

இது சம்பந்தமான வாக்குப்பெட்டிகள் அனைத்தும் திருவெண்ணெய் நல்லூரில் உள்ள காந்தி நினைவு மேல்நிலைப் பள்ளியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இதற்கு மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்பு கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டு பாதுகாப்பில் இருந்து வருகின்றது. நாளை 12ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் அதற்கான வேட்பாளர்களின் ஏஜெண்டுகளை நியமிக்கும் பணி நடந்து வருகிறது. இதில் அதிமுக சார்பில் மாவட்ட கவுன்சிலர் வேட்பாளராக வழக்கறிஞர் உதயகுமார் மற்றும் அக்கட்சியினர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்குச் சென்று தேர்தல் நடத்தும் அலுவலர் ராம்குமாரிடம் வாக்கு எண்ணிக்கையின் போது அதிகமான அளவில் முகவர்களை நியமிக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு தேர்தல் நடத்தும் அலுவலர் ராம்குமார், ஒரு அறைக்கு இரண்டு பேர் வீதம் ஆறு பேர் மாவட்ட கவுன்சிலர் வேட்பாளரையும் சேர்த்து ஏழு பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளார்.

இதைக் கேட்டு ஆத்திரமடைந்த மாவட்ட கவுன்சிலர் வேட்பாளர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் அதிகப்படியான முகவர்களை அனுப்பவேண்டும் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அதிமுக வேட்பாளர், ‘வாக்கு எண்ணும் மையத்தின் மீது தடுப்புக்காக மறைத்து வைக்கப்பட்டுள்ள தகரச் சீட்டுகளை நாங்கள் உடைத்தெறிவோம்’ என அச்சுறுத்தும் வகையில் மிரட்டல் விடுத்துள்ளனர். இவர்கள் மிரட்டல் குறித்த வீடியோ வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதுகுறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் ராம்குமார் திருவெண்ணைநல்லூர் காவல் நிலையத்திற்கு சென்று அதிமுக வேட்பாளர் உதயகுமார் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் மீது புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாலசிங்கம் பொது அமைதிக்குப் பங்கம் விளைவிப்பதாகவும் அரசுப் பணியைச் செய்யவிடாமல் அதன் ஊழியரைத் தடுத்தது உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் திருவெண்ணெய்நல்லூர் பகுதி மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தைப் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT