ADVERTISEMENT

அதிமுகவிடம் பாமக வைத்துள்ள 10 கோரிக்கைகள்

12:51 PM Feb 19, 2019 | Anonymous (not verified)

ADVERTISEMENT

மக்களவை தேர்தலுக்காக அதிமுகவுடன் கூட்டணி ஒப்பந்தம் செய்துகொண்டது பாமக. இந்த கூட்டணி ஒப்பந்தத்தின்போது அதிமுகவிடம் 10 கோரிக்கைகள் வைத்துள்ளன பாமக.

ADVERTISEMENT

அதிமுகவிடம், பாமக சார்பில் வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள்:

1. காவிரி பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்.

2. தமிழ்நாட்டின் 20 பாசனத் திட்டங்கள்.
& கோதாவரி, காவிரி இணைப்புத் திட்டம்

3. இடஒதுக்கீட்டை காக்க சாதிவாரிக் கணக்கெடுப்பு.

4. ஏழு தமிழர்கள் விடுதலை.

5. படிப்படியாக மதுவிலக்கு.

6. நீர்வளம் காக்க மணல் குவாரிகள் படிப்படியாக மூடல்.

7. அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம்.

8. காவிரியில் மேகதாது அணைக்கு தடை.

9. வேளாண் கடன்கள் தள்ளுபடி
& உழவர் ஊதியக்குழு அமைத்தல்

10. நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு.

1) காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தல்

காலம் காலமாக தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழ்ந்து வந்த காவிரி பாசன மாவட்டங்கள் இப்போது படிப்படியாக ஹைட்ரோ கார்பன் மண்டலமாகவும், பெட்ரோக்கெமிக்கல் முதலீட்டு மண்டலமாகவும் மாற்றப்பட்டு வருகின்றன. அதன்படி காவிரி பாசன மாவட்டங்களுக்கு இதுவரை மொத்தம் 4 ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இவை தவிர இந்த ஆண்டு இறுதியில் மேலும் இரு ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளன. அவற்றையும் சேர்த்தால் தமிழகத்தில் 5000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
மற்றொருபுறம் ஓ.என்.ஜி.சி மூலம் இருநூறுக்கும் மேற்பட்ட எண்ணெய்க் கிணறுகள் அமைக்கப்பட்டு இருப்பதுடன், நரிமணத்தில் உள்ள சுத்திகரிப்பு ஆலை 10 மடங்கு அளவுக்கு விரிவாக்கப்படவுள்ளது. கடலூர், நாகை மாவட்டங்களில் பெட்ரோக்கெமிக்கல் மண்டல முதலீட்டு மண்டலம் அமைக்கப்பட உள்ளது. அதன்காரணமாக காவிரி பாசன மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
இதனால் உழவர்களிடையே கடுங்கோபம் நிலவுகிறது. அந்த கோபத்தை தணிக்கும் வகையில், கடலூர் மாவட்டத்தின் ஒரு பகுதியில் தொடங்கி புதுக்கோட்டை & இராமநாதபுரம் மாவட்ட எல்லை வரை உள்ள காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். அதற்கான சட்டத்தை தமிழக சட்டப்பேரவையில் மிக விரைவாக நிறைவேற்ற வேண்டும்.

2) கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டம் மற்றும் 20 நீர்ப்பாசனத் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்.

இந்தியாவில் அதிக மழை பெய்யும் மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் திகழும் போதிலும், தமிழகத்தின் பாசனப் பரப்பு ஒப்பிட்டளவில் மிகவும் குறைவாக உள்ளது. இதற்கு காரணம் தமிழகத்தில் பாசனத் திட்டங்கள் போதிய அளவில் செயல்படுத்தப்படாதது தான். தமிழகத்தின் பாசனத் தேவைகளை ஓரளவு நிறைவேற்றக்கூடிய அளவில் கோதாவரி & காவிரி இணைப்புத் திட்டத்தை மத்திய அரசுடன் இணைந்து செயல்படுத்த வேண்டும். ரூ.60,000 கோடி மதிப்பிலான இந்தத் திட்டம் தமிழகத்திற்கு வரம். இதன்மூலம் தமிழகத்துக்கு 1100 டிஎம்சி வரை தண்ணீர் கிடைக்கும். இது கர்நாடகத்திடமிருந்து நாம் பெறக்கூடிய காவிரி நீரை விட ஆறு மடங்குக்கும் அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இவை தவிர தமிழகத்தில் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள 20 பாசனத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும். அவற்றில் மிகவும் முக்கியமான சில திட்டங்கள் பின்வருமாறு:
* அத்திக்கடவு & அவினாசித் திட்டமாகும்.
* பாலாறு பாசனத் திட்டம்
* தென்பெண்ணை & பாலாறு இணைப்புத் திட்டம்
* நந்தன் கால்வாய் திட்டம் மற்றும் தென்பெண்ணை & துரிஞ்சலாறு இணைப்பு
* காவிரி-, சரபங்கா, திருமணிமுத்தாறு கால்வாய் இணைப்புத் திட்டம்
* மேட்டூர் அணை வலதுகரை கால்வாய் நீட்டிப்புத் திட்டம்
* காவிரி & குண்டாறு இணைப்புத் திட்டம்
* தாமிரபரணி & நம்பியாறு இணைப்புத் திட்டம்
* பாண்டியாறு & புன்னம்புழா திட்டம்
* தோனி மடுவு பாசனத் திட்டம்
* படேதலாவ் ஏரிக் கால்வாய்த் திட்டம்
* கொள்ளிடம் மற்றும் காவிரி ஆறுகளில் தடுப்பணை

3) தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு:

தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்ட வழக்க்கில் 2010&ஆம் ஆண்டில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், அடுத்த ஓராண்டுக்குள் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி இட ஒதுக்கீட்டின் அளவை தீர்மானிக்கும்படி ஆணையிட்டது. ஆனால், அவ்வாறு செய்யப்படாத நிலையில், 69% இட ஒதுக்கீட்டை எதிர்த்து புதிதாகத் தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினரின் அளவை நிரூபிக்க தெளிவான புள்ளி விவரங்கள் அவசியமாகும். அதற்காக சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.
அதுமட்டுமின்றி, சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பில் கிடைக்கவுள்ள புள்ளிவிவரங்களின் அடிப்படையில் தான் சமூகநீதி யாருக்கு தேவை என்பதைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க முடியும். எனவே, தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீட்டை பாதுகாத்து சமூகநீதியை நிலைநாட்ட சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். இதற்காக தனி ஆணையம் அமைக்க வேண்டும்.

4) 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும்

ராஜிவ் கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் தமிழக அரசே விடுதலை செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து அதற்கான தீர்மானத்தை கடந்த செப்டம்பர் 9&ஆம் தேதி தமிழக அமைச்சரவை நிறைவேற்றி ஆளுனருக்கு அனுப்பி வைத்தது. அதன்பின் 164 நாட்களாகியும் இதுவரை எந்த பயனும் இல்லை.
இந்த விஷயத்தில் மத்திய அரசின் மூலமாக ஆளுனருக்கு அழுத்தம் கொடுத்து 7 தமிழர்களையும் விடுதலை செய்ய வைக்க வேண்டும். இல்லாவிட்டால், அமைச்சரவையின் பரிந்துரையை ஆளுனரை திருப்பி அனுப்பச் செய்ய வேண்டும். பின்னர் அதே பரிந்துரையை அமைச்சரவை மீண்டும் அனுப்பி வைக்கும் போது வேறு வழியின்றி அதை ஆளுனர் ஏற்றுக் கொண்டு 7 தமிழர்களையும் விடுதலை செய்து தான் தீர வேண்டும்.

5) தமிழ்நாட்டில் படிப்படியாக மதுவிலக்கு: 500 மதுக்கடைகளை மூட வேண்டும்

தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பது தான் பா.ம.க.வின் கொள்கை. இதற்காகத் தான் மருத்துவர் அய்யா கடந்த 38 ஆண்டுகளாக போராடி வருகிறார். தமிழகத்தில் 2003&04 ஆம் ஆண்டில் 7896 ஆக இருந்த மதுக்கடைகளின் எண்ணிக்கை இப்போது 5198 ஆக குறைந்துள்ளது. 2700 மதுக்கடைகள் மூடப்பட்டதற்கு பா.ம.க. தான் முக்கியக் காரணம்.
தமிழ்நாட்டில் படிப்படியாக மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த அதிமுக, 2016, 2017 ஆகிய ஆண்டுகளில் தலா 500 மதுக்கடைகளை மூடியது. அதன்பிறகு வேறு எந்த மதுக்கடைகளும் மூடவில்லை. இந்த விஷயத்தில் வாக்குறுதி கடைபிடிக்கப்பட வேண்டும்.
அதன்படி உடனடியாக தமிழகத்தில் 500 மதுக்கடைகள் மூடப்பட வேண்டும். மீதமுள்ள மதுக்கடைகளும் படிப்படியாக மூடப்பட்டு தமிழகத்தில் முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்க வேண்டும்.

6) தமிழ்நாட்டில் படிப்படியாக மணல் குவாரிகள் மூடப்பட வேண்டும்

தமிழ்நாட்டில் மணல் குவாரிகளில் அளவுக்கு அதிகமாக மணல் எடுக்கப்படுவதால் நிலத்தடி நீர் மட்டம் வேகமாக குறைவது, கடல் நீர் ஊடுருவுதல், பாலங்கள், அணைகள் போன்றவை வலிமை இழப்பது போன்ற பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இதனால் சுற்றுச்சூழலும் வேகமாக சீரழிகிறது.
அதனால் மணல் குவாரிகளை மூட வேண்டும் என்று பா.ம.க. பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் 2017-&ஆம் ஆண்டு மே மாதம் 5&ஆம் தேதி மதுரையில் அரசு விழாவில் பேசும்போது, அடுத்த 3 ஆண்டுகளில் படிப்படியாக அனைத்து மணல் குவாரிகளும் மூடப்படும் என்று அறிவித்திருந்தார். அதன்படி தமிழகத்தில் செயற்கை மணல் உற்பத்தியையும், வெளிநாட்டு மணல் இறக்குமதியையும் அதிகரிப்பதன் மூலம் இப்போது செயல்பாட்டில் உள்ள மணல் குவாரிகளை படிப்படியாக மூட தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும்.

7) அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துக!

தமிழக அரசு ஊழியர்களுக்கு ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளின் அடிப்படையில் உயர்த்தப்பட்ட ஊதியத்திற்கான 21 மாத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் & புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு பதில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அக்கோரிக்கைகள் தொடர்பான தாக்கல் செய்யப்பட்ட அரசு குழுக்களின் பரிந்துரைகள் பரிசீலிக்கப்படும் என்று தமிழக அரசும் பட்ஜெட்டில் அறிவித்திருந்தது.
அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் மிகவும் நியாயமானவை என்பதால் அவற்றை செயல்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும்.

8) மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடகத்தின் சதியை முறியடிக்க வேண்டும்

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்ட முடிவு செய்துள்ள கர்நாடக அரசு, அதற்கான விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பி ஒப்புதல் கோரியிருக்கிறது. 67.14 டிஎம்சி கொள்ளளவுள்ள மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டுக்கு காவிரி ஆற்றில் ஒரு சொட்டு நீர் கூட வராது. இது ஒருபுறமிருக்க தமிழகத்திடம் ஒப்புதல் பெறாமல் காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு எந்த ஒரு கட்டுமானப் பணியையும் மேற்கொள்ளக்கூடாது என்பது விதியாகும்.
எனவே, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து மேகதாது அணை கட்ட அனுமதி வழங்காமல் தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.

9) பொதுத்துறை & கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க்கடன்கள் தள்ளுபடி

தமிழ்நாட்டில் கடந்த 2012&ஆம் ஆண்டு முதல் இயற்கை சீற்றங்களால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கஜா புயலால் 12 மாவட்டங்களில் மிக மோசமான இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் துயரைத் துடிக்க வேண்டியது தமிழக அரசின் கடமையாகும்.
கடந்த 2016&ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் முதலமைச்சராக பதவியேற்ற ஜெயலலிதா, ரூ.5,800 கோடி கூட்டுறவு பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்தார். ஆனால், அது உழவர்களின் துயரைப் போக்குவதற்கு போதுமானதாக இல்லை. எனவே, உழவர்களின் துயரைத் துடைக்கும் வகையில் கூட்டுறவு வங்கிகள் மற்றும் பொதுத்துறை வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன்களை தமிழக அரசு உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும். அத்துடன் உழவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்ச ஊதியம் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் உழவர்களுக்க்கான ஊதியக் குழுவை அமைக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

10) நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க வேண்டும்

இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வுகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்களிக்க வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் சட்டங்கள் நிறைவேற்றி குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அனுப்பி வைக்கப்பட்டது. அதன்பின்னர் இரு ஆண்டுகள் ஆகியும் இதுவரை அந்த சட்டங்களுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைக்கவில்லை.
மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதால் கிராமப்புற மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். எனவே, மத்திய அரசிடம் மீண்டும் வலியுறுத்தி நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் தமிழக அரசின் இரு சட்டங்களுக்கும் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட வேண்டும். அதன்மூலம் தமிழகத்தில் நீட் தேர்வுக்கு நிரந்தரமாக விலக்கு பெறப்பட வேண்டும்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT