ADVERTISEMENT

தமிழகம் முழுவதும் நிதிநிறுவனம் நடத்தி பல கோடி மோசடி செய்த 4 பேர் மீது குவியும் புகார்கள்

10:51 AM Jan 09, 2021 | tarivazhagan

ADVERTISEMENT


நாகர்கோவில் வெட்டூர்ணிமடத்தைத் தலைமையிடமாகக் கொண்டு ‘யுனிக் அசட் புரமோட்டர்ஸ் அன்ட் எஸ்டேட்ஸ் இந்தியா லிமிடெட்’ என்ற பெயரில் திருவிதாங்கோட்டைச் சேர்ந்த செய்யது அலி, அழகிய மண்டபத்தை சேர்ந்த ஜெய சசிதரன், எட்வின் சுதாகர், மார்த்தாண்டத்தைச் சேர்ந்த ரமேஷ் ஆகியோர் இணைந்து நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தனர். அதன் கிளை நிறுவனம் குமரி மாவட்டத்தில் பல இடங்களிலும் ராமநாதபுரம், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூா் உட்பட பல மாவட்டங்களிலும் கடந்த சில ஆண்டுகளாக செயல்பட்டுவந்தன.

ADVERTISEMENT

அந்த நிதிநிறுவனத்தின் கவர்ச்சி விளம்பரம் மற்றும் புரோக்கர்களின் மூளை சலவை செய்யக்கூடிய பேச்சுக்களை நம்பி, ஏராளமானோர் தங்களின் வருமானத்தில் பல லட்சங்களை முதலீடு செய்தனர். இதில் பலருக்கு கணக்கு முதிர்வு அடைந்தும் முதலீடு பணத்தை வட்டியுடன் திருப்பிக் கொடுக்காமல் அதன் உரிமையாளர்கள் காலம் கடத்திவந்துள்ளனர். மேலும் சிலரை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில், சில கிளைகள் பூட்டப்பட்டு அதில் முதலீடு செய்தவா்களுக்கு குறிப்பிட்ட நாட்களைக் கூறியும் அவர்களுக்கு பணம் கொடுக்கவில்லை.

நாகர்கோவில் கோட்டாரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் வசந்தகுமார், தனது பெயரிலும் மனைவி மற்றும் தாயார் பெயரிலும் ரூ.3 லட்சம் முதலீடு செய்திருந்தார். அந்தக் கணக்கு முடிந்து ஓராண்டாகியும் பணத்தை நிதிநிறுவனம் திருப்பிக் கொடுக்காததால், மாவட்ட பொருளாதர குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து, அந்த நிதிநிறுவனத்தைக் கண்காணித்துவந்தனர். இதில் அதன் உரிமையாளர்கள் மோசடியில் ஈடுபட்டு முதலீட்டாளர்களுக்குப் பணம் திருப்பிக் கொடுக்காதது உறுதியானது. இதையடுத்து நிதிநிறுவன உரிமையாளர்களான ஜெய சசிதரன் மற்றும் எட்வின் சுதாகரை போலீசார் கைதுசெய்து மதுரை மேலூர் சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவான செய்யது அலி, ரமேஷ் இருவரையும் போலீசார் தேடிவருகின்றனர்.

இதைதொடர்ந்து நிதிநிறுவனத்தில் முதலீடு செய்த நூற்றுக்கணக்கானோர் புகார்கள் கொடுத்துவருகின்றனர். குமரி மாவட்டத்தில் மட்டும் சுமார் 400 பேரை ஏமாற்றியுள்ளதாகவும், தமிழகத்தின் பிற பகுதியில் உள்ளவர்களைச் சேர்த்து சுமார் 1,300 பேர் ஏமாற்றப்பட்டிருப்பதாகவும், அவர்களும் புகார்கள் கொடுக்கும்பட்சத்தில் அந்தப் புகார்களின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கூறியுள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT