ADVERTISEMENT

பல்லடத்தில் மதுவால் நிகழ்ந்த 4 படுகொலை; எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை கண்டனம்

10:58 AM Sep 04, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

திருப்பூரில், 'வீட்டு வாசலில் ஏன் மது குடிக்கிறீர்கள்' எனத் தட்டிக் கேட்ட தகராறில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 4 மாவட்ட போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளகிணறு என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் செந்தில்குமார். அவரது குடும்பத்தைச் சேர்ந்த மோகன், புஷ்பவதி, ரத்தினாம்பாள் ஆகிய நான்கு பேரும் நேற்று இரவு வீட்டு வாசலின் அருகே மது அருந்த வந்த வெங்கடேசன் என்பவரிடம் இங்கு மது அருந்தக் கூடாது எனத் தெரிவித்துள்ளனர். வெங்கடேசன் உடன் மது அருந்த வந்து இரண்டு பேரிடமும் இந்த பகுதியில் மது அருந்தக்கூடாது எனத் தெரிவித்தனர். இதனால் நடந்த வாக்குவாதத்தில் வெங்கடேசன் மற்றும் அவரது நண்பர்கள், செந்தில்குமார் உள்ளிட்ட தட்டிக் கேட்ட நான்கு பேரையும் வெட்டிப் படுகொலை செய்தனர்.

இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நான்கு பேரின் உடல்களும் பல்லடம் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக நேற்று இரவு கொண்டுவரப்பட்டது. பல்லடம் அரசு மருத்துவமனையில் உள்ள குளிரூட்டும் பெட்டி பழுதடைந்துள்ளதால் உடனடியாக நான்கு பேர் உடலுக்கும் பிரேதப் பரிசோதனை செய்ய முடியவில்லை. இன்று காலை தான் பிரேதப் பரிசோதனை நடைபெற உள்ளது. இதனால் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்க கோவை, நாமக்கல், ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து சுமார் 700க்கும் மேற்பட்ட போலீசார் பல்லடம் அரசு மருத்துவமனை வளாகம் மற்றும் சாலை பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ளனர். கொலை செய்த மூன்று நபர்களையும் கைது செய்தால் மட்டுமே உடல்களை வாங்குவோம் என நேற்று உயிரிழந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், போலீசார் தற்போது பிரேதப் பரிசோதனை நடைபெறும் மருத்துவமனையின் முன் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். எடப்பாடி பழனிசாமி இது குறித்து வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், 'கள்ளக் கிணறு பகுதியில் நான்கு பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொடூரமாகக் கொலை செய்யப்பட்டிருந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள். திமுக அரசு பதவியேற்றதில் இருந்து தமிழகத்தில் நாள்தோறும் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்து வருகிறது. காவல்துறையை கையில் வைத்துக்கொண்டு மக்களை காப்பாற்ற முதலமைச்சர் நடவடிக்கை எடுக்கவில்லை’ எனத் தெரிவித்துள்ளார்.

அதேபோல் பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தெருவுக்கு தெரு மதுக்கடைகளை திறந்து வைத்து, கட்டுப்பாடற்ற மது விற்பனையால் இன்னும் எத்தனை உயிர்கள் போக வேண்டும். இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும்' எனத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT