ADVERTISEMENT

அரியர்ஸ் போட 30,000; சம்பளம் வழங்க 5,000! சேலம் மாநகராட்சியில் பட்டியல் போட்டு லஞ்சம் வசூல்!

10:04 AM Jun 05, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

சேலம் மாநகராட்சியில், ஊதிய நிலுவை, ஊதியம், சம்பள உயர்வு வழங்க என ஒவ்வொரு பணப்பலன்கள் குறித்த பணிகளுக்கும் தனித்தனியாக பட்டியல் போட்டு, லஞ்சம் வசூலிக்கப்படுவதாக கிளம்பிய புகார்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

சேலம் மாநகராட்சி அம்மாபேட்டை மண்டல அலுவலகத்தில் ராமசுப்பு என்கிற ராமசுப்ரமணியம் என்பவர் எஸ்டாபிளிஷ்மெண்ட் பிரிவில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். தற்போது, அலுவலக கண்காணிப்பாளர் பொறுப்பிலும் இருந்து வருகிறார்.

இவர், ஊழியர்களுக்கு ஊதிய நிலுவை, குறித்த காலத்தில் ஊதியம் மற்றும் ஊதிய உயர்வு குறித்த பணப்பலன்களை வழங்க என ஒவ்வொரு பணிகளுக்கும் பட்டியல் போட்டு லஞ்சம் வசூலித்து வருவதாக புகார்கள் கிளம்பியுள்ளன.

இது தொடர்பாக, பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் அம்மாபேட்டை மண்டல அலுவலக ஊழியர்கள் சிலர் நம்மிடம் பேசினர். ''சேலத்தை அடுத்த கூட்டாத்துப்பட்டியைச் சேர்ந்தவர் முருகேசன் (47). அம்மாபேட்டை மண்டலத்தில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். அவர், பணியின்போது குடிபோதையில் இருந்ததாக வந்த புகாரின்பேரில் கடந்த 2013ம் ஆண்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

ராமசுப்ரமணியம்

தண்டனை காலத்தில் அவருக்கு 50 சதவீத பிழைப்பு ஊதியம் வழங்கப்பட்டு வந்தது. அதன்பிறகு, விசாரணை முடிந்து மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டதோடு, பணிவரன்முறையும் செய்யப்பட்டார். தற்காலிக பணிநீக்க காலத்தின்போது கொடுக்கப்பட வேண்டிய பாதி சம்பளம் உள்பட மொத்தம் அவருக்கு 7 லட்சம் ரூபாய் ஊதிய நிலுவை வர வேண்டியுள்ளது.

தனக்கான அரியர்ஸ் பணப்பலன்களை கேட்டு அவர், தற்போது அலுவலக கண்காணிப்பாளர் பொறுப்பில் உள்ள ராமசுப்ரமணியத்தை அணுகினார். அவரோ, 30 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் அரியர்ஸ் வழங்கும் பணிகளை விரைவாக முடித்துக் கொடுத்து விடுவதாகக் கூறியுள்ளார். ஏற்கனவே முருகேசன் வங்கியில், வீட்டுக்கடன் பெற்றிருந்ததால் அவருக்கு அரியர்ஸ் தொகை கிடைத்தால் பேருதவியாக இருக்கும் எனக்கருதினார். இதனால் ராமசுப்ரமணியம் கேட்டபடியே, மூன்று தவணைகளில் மொத்தம் 30 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளார்.

அவருக்கு பணம் கொடுத்து 6 மாதங்கள் ஆகியும் இன்னும் அரியர்ஸ் தொகை கிடைத்தபாடில்லை. இது தொடர்பாக முருகேசன் அவரை நேரில் சந்தித்து கேட்கும்போதெல்லாம் கண்ணியக்குறைவாக பேசி அனுப்பி விடுகிறார். இதனால் அவர் கடும் மன உளைச்சலில் உள்ளார்.

தற்போது சூரமங்கலம் மண்டலத்தில் பணியாற்றி வரும் சரவணன் என்ற ஓட்டுநர், முன்பு அம்மாபேட்டை மண்டலத்தில்தான் பணியாற்றி வந்தார். அவருக்கும் 53 ஆயிரம் ரூபாய் அரியர்ஸ் தொகை வர வேண்டியுள்ளது. இதற்காக அவரிடமும் ராமசுப்ரமணியம் 2 ஆயிரம் ரூபாய் கையூட்டு வசூலித்து இருக்கிறார். பல மாதங்கள் ஆகியும் அவருக்கும் இன்னும் அரியர்ஸ் தொகை கிடைக்கவில்லை.

இவர்கள் மட்டுமின்றி, புதிதாக வேலைக்குச் சேர்ந்த ஊழியர்களிடமும் ராமசுப்ரமணியம் கைநீட்டி இருக்கிறார்.

வாரிசுரிமை அடிப்படையில் அருண்குமார் என்ற இளைஞர் அண்மையில் வேலைக்குச் சேர்ந்தார். அவருக்கு கடந்த டிசம்பர், ஜனவரி ஆகிய இரு மாத ஊதியம் வழங்கப்படாமல் இருந்தது. இதையடுத்து, விரைவில் சம்பளம் வழங்க நடவடிக்கை எடுப்பதாகக் கூறி, அருண்குமாரிடம் 5 ஆயிரம் ரூபாய் வசூலித்திருக்கிறார் ராமசுப்ரமணியம். அவருக்கு பிப்ரவரி மாதம் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.

தேர்வுநிலை அந்தஸ்து வழங்குவதற்கான பணிகளை விரைந்து முடிக்கும்படி கந்தசாமி என்ற எஸ்ஐ, பலமுறை அவரை அணுகியுள்ளார். ஆனால் அவருக்கும் அதற்கான வேலைகளை விரைந்து முடிக்காமல் இழுத்தடித்து வருகிறார். லஞ்சத்தை எதிர்பார்த்து அவரை இழுத்தடித்து வருகிறார்,'' என்கிறார்கள் ஊழியர்கள்.

இது தொடர்பாக விளக்கம் அறிய நாம் ராமசுப்ரமணியத்தை அவருடைய அலைபேசியில் அழைத்தோம். அவர் எடுக்கவில்லை.

இதையடுத்து அவர் மீதான புகார்கள் குறித்து அம்மாபேட்டை மண்டல உதவி ஆணையர் செந்தில்குமாரிடம் கேட்டபோது, ''ஊழியர்கள் பணப்பலன்கள் கேட்பது என்பது அடிப்படை உரிமை. அதற்காக யாருக்கும் பணம் கொடுக்கத் தேவையில்லை. எனினும், ராமசுப்ரமணியம் மீதான புகார்கள் குறித்து நேரில் விசாரணை நடத்தப்படும். புகாரில் உண்மை இருக்கும்பட்சத்தில் எச்சரிக்கை செய்யப்படுவார்,'' என்று மட்டும் சுருக்கமாக முடித்துக் கொண்டார்.

''சேலம் மாநகராட்சியில் பணியாற்றும் ஊழிர்யர்கள், அவர்களுக்கான பணப்பலன்கள், பதவி உயர்வு தொடர்பான பணிகளை முடித்துக் கொடுக்க பணம் கொடுத்தால்தான் ஒரு மேஜையில் அடுத்த மேஜைக்கே கோப்பு நகரும்.

நான்கு மண்டலங்கள் மட்டுமின்றி, முதன்மை அலுவலகத்திலும் இதே நிலைதான் நீடிக்கிறது. ஒரு ஊழியர், சக ஊழியரிடமே லஞ்சம் கொடுத்தால்தான் வேலையை முடித்துக் கொடுப்பேன் என்று அடம் பிடித்து வசூல் வேட்டை நடத்துவதெல்லாம் சேலம் மாநகராட்சியில் காலங்காலமாக நடந்து வரும் கூத்துகள்தான்,'' என்றும் ஊழியர்கள் சலிப்பாக கூறுகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT