ADVERTISEMENT

'15 மணி நேரத்தில்...'- திணறிய த.வெ.க ஐடி விங் 

10:53 AM Mar 09, 2024 | kalaimohan

தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சி தொடங்கியுள்ள விஜய், 2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை எனத் தெரிவித்து 2026 ஆம் ஆண்டுதான் நமது இலக்கு என்று தமிழக சட்டமன்றத் தேர்தலைக் குறிவைத்து செயல்பட்டு வருகிறார். தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினர்களைச் சேர்க்கும் பணி படுதீவிரமாக நடைபெற்று வருகிறது.

ADVERTISEMENT

தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்காக புதிய அணியை தொடங்கியும் நிர்வாகிகள் நியமனம் பற்றிய அறிவிப்பு வெளியானது. அதனை தொடர்ந்து நேற்று த.வெ.க.வின் உறுப்பினர் சேர்க்கையைத் தொடங்கி வைத்தார் விஜய். முதல் உறுப்பினராக விஜய் இணைந்தார்.

ADVERTISEMENT

இது தொடர்பாக வீடியோ வெளியிட்ட அவர், “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அடிப்படை சமத்துவ கொள்கையை ஃபாலோ பண்ணி, வரப் போகிற சட்டமன்ற தேர்தலை நோக்கி, என்னுடைய பயணத்தில் இணைந்து மக்கள் பணி செய்ய, நாங்க ஏற்கனவே வெளியிட்ட எங்க கட்சியின் உறுதி மொழியை படிங்க. அது எல்லாருக்கும் பிடித்திருந்தால் விருப்பப்பட்டால் இணைஞ்சிடுங்க” என்றார்.

கட்சியில் இணைவதற்கான உறுதிமொழி வெளியிடப்பட்டது. அதில், “நமது நாட்டின் விடுதலைக்காகவும், நமது மக்களின் உரிமைகளுக்காகவும் தமிழ் மண்ணில் இருந்து தீரத்துடன் போராடி உயிர் நீத்த எண்ணற்ற வீரர்களின் தியாகத்தை எப்போதும் போற்றுவேன். நமது அன்னைத் தமிழ் மொழியைக் காக்க உயிர்த் தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து பாடுபடுவேன்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும், இறையாண்மை மீதும் நம்பிக்கை வைத்து, அனைவருடன் ஒற்றுமை, சகோதரத்துவம், மதநல்லிணக்கம், சமத்துவம் ஆகியவற்றைப் பேணிக் காக்கின்ற பொறுப்புள்ள தனிமனிதராகச் செயல்படுவேன். மக்களாட்சி, மதச்சார்பின்மை, சமூக நீதிப் பாதையில் பயணித்து, என்றும் மக்கள் நலச் சேவகராகக் கடமை ஆற்றுவேன் என உறுதி அளிக்கின்றேன். சாதி, மதம், பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் பெயரில் உள்ள வேற்றுமைகளைக் களைந்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, அனைவருக்கும் சம வாய்ப்பு, சம உரிமை கிடைக்கப் பாடுபடுவேன். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவக் கொள்கையை கடைப்பிடிப்பேன் என்று உளமார உறுதி கூறுகின்றேன்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் உறுப்பினர் சேர்க்கை தொடங்கப்பட்ட 15 மணிநேரத்தில் 20 லட்சம் பேர் தவெகவில் இணைத்துள்ளதாக கட்சி தரப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஒரே நேரத்தில் பல லட்சம் பேர் இணைய முற்பட்டதால் அதற்கான குறுஞ்செய்தி அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. சர்வர் முடங்கியதை எங்களால் முடிந்த அளவுக்கு சரிபார்த்துவிட்டோம் என தவெகவின் ஐடி பிரிவு தெரிவித்துள்ளது. அதிகபட்சம் முதல் நாளில் 5 லட்சம் பேர் இணைவார்கள் என எதிர்பார்க்கப்பட்டதாகவும் ஆனால் 15 மணிநேரத்தில் 20 லட்சம் விண்ணப்பங்கள் வந்ததால் என்ன செய்வது என்று தெரியாமல் திணறும் நிலை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. தமிழகம் மட்டுல்லாது பல மாநிலங்களில் இருந்தும் உறுப்பினர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பம் குவிந்து வருவதாகவும் கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT