ADVERTISEMENT

சிலிண்டர் கொடுப்பதுபோல் 5 பவுன் செயின் பறிப்பு - இருவருக்கு 14 ஆண்டுகள் சிறை

11:03 PM Nov 01, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வி.என்.ஆர்.நகரில் கடந்த 2011-ஆம் ஆண்டு ஜெயராஜ் என்பவரின் மனைவி அமுதா வீட்டில் தனியாக இருந்தபோது, “சிலிண்டர் வேண்டுமா?” என 4 நபர்கள் வீட்டின் கதவைத் தட்டி கேட்டுள்ளனர். அதற்கு அவர், “சிலிண்டர் வேண்டாம்” என்ற பின்பு, “தண்ணீர் கொடுங்கள்” எனக் கேட்டுக்கொண்டே வீட்டுக்குள் சென்ற நபர்கள் அமுதாவைக் கொடூரமாகத் தாக்கிவிட்டு அவரது கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் செயினைப் பறித்துச் சென்றனர்.

இதுகுறித்து விருத்தாசலம் காவல்துறையினர் நான்கு நபர்கள் மீது வழக்குப் பதிந்தனர். இந்த வழக்கானது விருத்தாசலம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் தீர்ப்பு முதன்மை சார்பு நீதிமன்ற நீதிபதி ஜெகதீஸ்வரி இன்று வழங்கினார்.

இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கண்டியாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ராஜதுரை மற்றும் மணலூர் பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர் ஆகிய இருவரும் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டதால் இந்தியத் தண்டனைச் சட்டம் 454 பிரிவின் கீழ் 7 ஆண்டு சிறைத் தண்டனையும் ஆயிரம் ரூபாய் அபராதமும், இந்தியத் தண்டனைச் சட்டம் பிரிவு 394, 397-ன் படி ஏழு ஆண்டு சிறைத் தண்டனை என 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பு அளித்தார். அபராதம் கட்டத் தவறினால் மேலும் ஒரு மாதம் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். பின்னர் காவலர்கள் பாதுகாப்புடன் குற்றவாளிகளான ராஜதுரை மற்றும் சந்திரசேகர் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மேலும் இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆனந்தக்குடி கிராமத்தைச் சேர்ந்த வீரப்பன், குடிகாடு கிராமத்தைச் சேர்ந்த பரமானந்தன் ஆகிய இருவரையும் நீதிபதி விடுதலை செய்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT