
சென்னை எக்மோரில் இருந்து நேற்று இரவு 7.30 மணிக்கு, முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு, செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, வழியாக தூத்துக்குடி நோக்கி செல்வதற்கு வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் தூத்துக்குடியில் நடைபெறும் திருமணத்திற்கு, சென்னையில் பணிபுரியும் காவலர்கள் முருகன், செந்தில்குமார், மாணிக்கராஜ், மற்றும் அவரது உறவினர்கள் முத்துக்குமார், பொன்னுசாமி ஆகிய 5 பேரும் முத்து நகர் எக்ஸ்பிரசில் வந்து கொண்டிருந்த போது, மதுபோதையில் ரகளையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இதை தட்டிக்கேட்ட சக பயணிகளிடம் தகாத வார்த்தைகள் பேசி, வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. தொடர்ச்சியாக பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தி வந்ததால், ரயிலில் வந்த சக பயணி சிவகுமார் என்பவர்,தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழ்நாடு காவல்துறை டிவிட்டர் பக்கத்தை டேக் செய்து, பதிவு ஒன்று செய்துள்ளார். அந்த டிவிட்டர் பதிவில் மது போதையில் காவலர்கள் S3 என்ற பெட்டியில் சீட் நம்பர் 72, 80 ல் இருப்பவர்கள், நியூசென்ஸ் செய்வதாகவும், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தற்போது ரயிலானது விழுப்புரம் வந்தடைந்து விட்டதாகவும் பதிவு செய்துள்ளார்.

டிவிட்டர் பதிவை அறிந்த தமிழ்நாடு காவல்துறை உடனடியாக சம்பந்தப்பட்ட ரயில்வே காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின் அடிப்படையில் நேற்றிரவு 11 மணியளவில், விருத்தாசலம் ரயில்வே காவல்துறையினர், விருத்தாசலம் வந்தடைந்த முத்துநகர் எக்ஸ்பிரஸில், மதுபோதையிலிருந்த காவலர் மற்றும் அவரது உறவினர்களை, ரயிலிலிருந்து இறக்கி விசாரணை மேற்கொண்டனர். பின்னர் காவலர் மற்றும் அவரது உறவினர் 5 பேரையும், விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி பரிசோதனை செய்யப்பட்டது. பயணிகளுக்கு இடையூறாக இருந்த காவல்துறையினர் மற்றும் அவரது உறவினர்கள் மீது இரண்டு பிரிவின் கீழ் விருத்தாசலம் ரயில்வே காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பின்னர் சம்பந்தப்பட்ட போலீசார் மற்றும் அவரது உறவினர்களை, சொந்த ஜாமீனில் அனுப்பியதாகக் கூறப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)