ADVERTISEMENT

முதல்வர் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்? - எடப்பாடி பழனிசாமி கேள்வி

05:14 PM Mar 15, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

திருச்சியில் அமைச்சர் கே.என். நேருவின் ஆதரவாளர்களும், திமுக எம்.பி. திருச்சி சிவாவின் ஆதரவாளர்களும் மோதிக்கொண்டது குறித்து எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்று காலை திருச்சி எஸ்பிஐ காலனியில் இறகு பந்து மைதானத்தை திறந்து வைப்பதற்காக அமைச்சர் கே.என்.நேரு வந்தபொழுது திமுகவினரில் சிலர் அவருக்கு கருப்பு கொடி காண்பித்துள்ளனர். திமுகவின் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் எஸ்பிஐ காலனி குடியிருப்பு பகுதி மக்களின் மேம்பாட்டிற்காக விளையாட்டு மைதானம், பூங்கா, கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்டவற்றை அமைக்கும் வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாகத்தான் இன்று அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இறகு பந்து உள்விளையாட்டு அரங்கை அமைச்சர் திறந்து வைக்க வந்துள்ளார். அந்த விளையாட்டு மைதானம் எம்.பி. சிவா வீட்டிற்கு அருகில் அமைந்துள்ளது. அதன் திறப்பு விழாவிற்கு என்று அச்சடிக்கப்பட்ட அழைப்பிதழிலும், விளையாட்டு மைதானத்தில் வைக்கப்படும் கல்வெட்டிலும் எம்.பி. சிவாவின் பெயர் அச்சிடப்படவில்லை. இதனை அறிந்த எம்.பி.யின் ஆதரவாளர்கள் கொதித்து எழுந்து அமைச்சரின் காருக்கு முன்பாக நின்று கருப்பு கொடி காட்டியுள்ளனர். இதனால் சூடான அமைச்சர் விறுவிறுவென்று விளையாட்டு மைதானத்தை திறந்து வைத்துவிட்டு புறப்பட்டு சென்றுள்ளார்.

ஆனால், அவருடைய ஆதரவாளர்கள் எம்.பி. சிவாவின் வீட்டிற்குள் ஏறிக் குதித்து அங்கு நிறுத்தப்பட்டிருந்த காரின் கண்ணாடிகளையும், வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளையும் அடித்து நொறுக்கியுள்ளனர். தற்போது எம்.பி. திருச்சி சிவா டெல்லியில் இருப்பதால் இந்த சம்பவம் குறித்து அறிந்த அவருடைய மகன் சூர்யா சிவா தன்னுடைய ஆதரவாளர்களைத் திரட்டிக்கொண்டு செசன்ஸ் நீதிமன்ற காவல்நிலையத்தை முற்றுகையிட்டு இந்த தாக்குதலை செய்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து கண்டன கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் போலீசும் எம்.பி. சிவாவின் வீட்டிற்குச் சென்று அங்குள்ள சிசிடிவி பதிவுகளை சேகரித்து வைத்துள்ளது. மேலும் அதில் பதிவான முகங்களைத் தேடும் பணியில் ஈடுபட்டிருப்பதாகக் கூறி காவல்துறையினர் தற்காலிகமாக பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சி செய்து வருகின்றனர். திருச்சி திமுக வட்டாரத்தில் இந்த தாக்குதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி ''ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் இந்த அரசு நீடிக்கும் ஒவ்வொரு நிமிடமும் தமிழகத்துக்கு அச்சுறுத்தலாகவும், பொது அமைதிக்கு ஆபத்தாகவும் இருப்பதை மக்கள் உணரத் துவங்கியுள்ளனர். காவல்துறையை தன்வசம் வைத்துள்ள முதல்வர் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்.'' எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT