The case DMK against Edappadi Palaniswami demanding compensation of Rs.1 crore 

டெல்லியில் போதைப் பொருள் தடுப்பு காவல்துறை மற்றும் டெல்லி சிறப்பு காவல்துறை சார்பில் நடைபெற்ற சோதனையில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி 50 கிலோ ரசாயன வகை போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்திருந்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், கடந்த 3 ஆண்டுகளில் 3 ஆயிரத்து 500 கிலோ போதைப் பொருட்கள் கடத்தப்பட்டுள்ளதாகவும் இதன் மொத்த மதிப்பு ரூ. 2 ஆயிரம் கோடி எனவும் தெரிய வந்தது. தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டது திரைப்படத் தயாரிப்பாளரும் தி.மு.க.வின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளராக இருந்த ஜாஃபர் சாதிக் தான் என்பது தெரியவந்தது. மேலும் கடத்தல் கும்பலுக்கு தலைவனாக ஜாஃபர் சாதிக் செயல்பட்டதும் உறுதியானது.

Advertisment

இதனையடுத்து, தி.மு.க.வின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளராக இருந்த ஜாஃபர் சாதிக் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால், கட்சியிலிருந்து அவரை நிரந்தரமாக நீக்குவதாக தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் அறிவித்திருந்தார். இந்த வழக்கு விசாரணை தொடர்பாகத் தொடர்ந்து ஜாபர் சாதிக் தேடப்பட்டு வந்த நிலையில், போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் ஜெய்ப்பூரில் கடந்த 9 ஆம் தேதி (09.03.2024) கைது செய்யப்பட்டு மத்திய போதைப் பொருள் தடுப்பு போலீசாரின் காவலில் இருந்து வருகின்றார்.

Advertisment

அதனைத் தொடர்ந்து, ஜாபர் சாதிக் மீது சர்வதேச அளவில் போதைப் பொருள் கடத்தி சட்ட விரோதப் பணப்பரிவர்த்தனை செய்ததாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது. இத்தகைய சூழலில் ஜாஃபர் சாதிக்கின் நண்பர் சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த சதா என்பவரை மத்திய போதைப் பொருள் தடுப்பு போலீசார் நேற்று (13.03.2024) கைது செய்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள், பணப் பரிவர்த்தனைகள், வங்கிக் கணக்கு விவரங்களை மத்திய போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகளிடம் இருந்து டெல்லி என்.ஐ.ஏ. அதிகாரிகள் கேட்டுள்ளனர். போதைப் பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணம் தீவிரவாத அமைப்புகளுக்குச் சென்றுள்ளதா என்று விசாரிக்க முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி இருந்தது.

The case DMK against Edappadi Palaniswami demanding compensation of Rs.1 crore 

இந்நிலையில் போதைப்பொருள் பறிமுதல் மற்றும் கைது நிகழ்வுகளை தி.மு.க.வுடன் தொடர்பபடுத்தி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாகக் கூறி தி.மு.க. சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மான நஷ்ட ஈடு வழக்கு தொடரப்பட்டுள்ளது. தி.மு.க. சார்பில் அதன் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தி.மு.க.வை தொடர்புபடுத்தி பேச எடப்பாடி பழனிசாமிக்கு தடை விதிக்க வேண்டும். நஷ்ட ஈடாக ரூ. 1 கோடியை எடப்பாடி பழனிசாமி வழங்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment