ADVERTISEMENT

தற்காலிகமா? நிரந்தரமா? -யார் இந்த தற்காலிக சபாநாயகர்?

03:17 PM May 09, 2021 | rajavel


தமிழகத்தின் 16வது சட்டமன்ற பொதுத்தேர்தலில் வெற்றி பெற்ற 234 எம்.எல்.ஏக்களுக்கு தற்காலிக சபாநாயகராக இருந்து பதவி பிரமாணம் செய்து வைக்கப்போகிறவர் யார் என்கிற கேள்வி எழுந்தது. இவர், அவர் என்கிற பரபரப்பு தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தற்காலிக சபாநாயகராக இருந்து சட்டசபையில் பதவி பிரமாணம் செய்து வைக்கப்போகிறார் கு.பிச்சாண்டி என கவர்னர் மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது. அவருக்கு மே 10ஆம் தேதி பதவி பிரமாணம் செய்துவைக்கவுள்ளார் கவர்னர்.

ADVERTISEMENT


தற்காலிக சபாநாயகராகப்போகும் கு.பிச்சாண்டி யார்?

ADVERTISEMENT


திருவண்ணாமலை நகரத்தை சேர்ந்தவர் குப்புசாமி. டிரான்ஸ்போர்ட் தொழிலில் இருந்தார். அரசியல் ஆர்வம் கொண்ட குப்புசாமி திமுகவிலும் இருந்தார். 1980களில் திருவண்ணாமலை நகர மன்ற உறுப்பினராக ( கவுன்சிலர் ) இருந்தார். இவரின் மூத்த மகன் தான் பிச்சாண்டி. சிறிய வயதிலேயே தாயை இழந்தவர், இதனால் தாயின் பாசம் அறியாமல் தந்தையின் பாசத்தில் வளர்ந்தவர். பிச்சாண்டி பிறந்தபின்பு தான் தனக்கு அதிஷ்டம் வந்தது என மகன் மீது அதிக பாசத்தை வைத்திருந்தார் குப்புசாமி. இரண்டாவது திருமணம் செய்துக்கொண்டார் குப்புசாமி. தனது சித்தியால் வளர்க்கப்பட்டார் பிச்சாண்டி.


திருவண்ணாமலையில் அக்காலத்தில் பிரதான பகுதிகளாக இருந்த சிவராத்திமடத்தெரு, சன்னதிதெரு, கார்காணத்தெருவில் அவருக்கு நண்பர்கள் அதிகம். நண்பர்கள் அந்த ஊக்கத்தால் 1984ல் நடைபெற்ற நகராட்சி தேர்தலில் போட்டியிட்ட பிச்சாண்டி நகர மன்ற உறுப்பினராக வெற்றிப்பெற்றார். அப்போது அவருக்கு நகரமன்ற துணை தலைவர் பதவிக்கான வாய்ப்பு வந்தபோது அதனை மறுத்துவிட்டார்.


அப்போது நகர செயலாளராக இருந்த டி.என்.பாபு, சாவல்பூண்டி ஊராட்சி மன்ற தலைவர் சாவல்பூண்டி சுந்தரேசன், மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளராகவுள்ள அருள்குமரன் தந்தை அருணகிரி, மறைந்த முன்னால் ந.செ தியாகராஜன் போன்றோர் நட்பாகிறார்கள். அப்போது நகரமன்ற தலைவராக இருந்த முன்னால் எம்.எல்.ஏ முருகையன், தனது அரசியல்வாரிசாக பிச்சாண்டியை வளர்த்தார்.


ஈழத்தமிழருக்காக திமுக உருவாக்கிய டெசோ அமைப்பின் சார்பில் சென்னையில் பிரமாண்டமான ஊர்வலம் நடத்தியபோது, விடியவிடிய திமுக இளைஞரணி, தொண்டரணி ஊர்வலம் நடைபெற்றது. இதில் மாவட்ட இளைஞரணி நிர்வாகியாக இருந்த பிச்சாண்டியின் பங்கு அதிகம். திமுக மாநாடுகளில், கூட்டங்களில் வித்தியாசமான முறையில் இளைஞரணியை பங்கு பெறவைத்ததால் தலைமையின் கவனத்தை ஈர்த்தார்.


1989 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது, திருவண்ணாமலை தொகுதியை திமுகவில் சிலர் கடுமையாக முயற்சி செய்தனர். திமுக தலைவராக இருந்த கலைஞரிடம் அழைத்து சென்று அறிமுகப்படுத்தி திருவண்ணாமலை தொகுதி வேட்பாளராக பிச்சாண்டிக்கு சீட் வாங்கி தந்தவர் முருகையன். முதல் முறையாக சட்டமன்ற தேர்தலில் திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிட்டு, எதிர்த்து நின்ற காங்கிரஸ் வேட்பாளர் ரவீந்திரன் என்பவரை 30 ஆயிரம் சொச்சம் வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார்.


1991 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிட்டார். இராஜிவ்காந்தி படுகொலை செய்யப்படுவதற்கு முன்பு, சீட் கிடைத்ததும் சேஷாத்திரி மடத்தை நிர்வகித்து வந்த பெண் சாமியாரியிடம் ஆசிப்பெற சென்றபோது, நீ இந்த தேர்தலில் தோற்றுவிடுவாய் எனச்சொன்னதை கேட்டுக்கொண்டு வந்துள்ளார். அதன்பின் ராஜிவ்காந்தி மரணம் நடைபெற்று திமுக படுதோல்வியை சந்தித்தது, அதில் பிச்சாண்டியும் தோல்வியை சந்தித்தார். தோல்வியடைவோம் எனத்தெரிந்தும் செலவு செய்வதிலும், வேலை செய்வதிலும் எந்த தொய்வும் ஏற்படவில்லை.


1993ல் திமுகவில் இருந்து வை.கோ பிரிந்து சென்றபோது, திருவண்ணாமலை மாவட்டத்தில் பெரிய அளவில் சேதாரம்மில்லாமல் கட்சியை கட்டுக்குள் வைத்திருந்ததில் பிச்சாண்டியின் பங்கு அதிகம் என்பது கட்சி சீனியர்களின் கருத்து. மாவட்ட செயலாளராக, மண்டல செயலாளராக கட்சியில் பதவிகள் வகித்தார்.


1996 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திருவண்ணாமலை தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கலைஞர் தலைமையிலான அமைச்சரவையில் வீட்டுவசதித்துறை அமைச்சராக்கப்பட்டார், சில சர்ச்சைகளிலும் சிக்கினார். அதன்பின்னர் 2001, 2006 தேர்தல்களில் அதே திருவண்ணாமலை தொகுதியில் இருந்து வெற்றிப்பெற்று எம்.எல்.ஏவானார்.


2011 தேர்தலின்போது புதியதாக உருவாக்கப்பட்ட கீழ்பென்னாத்தூர் தொகுதிக்கு மாறி அங்கு சீட் பெற்றார். அந்த தேர்தலில் உட்கட்சி சதியும், சாதியும் அவரை அந்த தொகுதியில் தோற்கடித்தது. 2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதே கீழ்பென்னாத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏவானார். அப்போது சட்டமன்றத்தில் திமுக எதிர்கட்சியாக அமர்ந்தது. அதில் சட்டமன்ற துணை கொறடாவாக பிச்சாண்டியை திமுக தலைமை நியமனம் செய்தது.


2021ல் திமுக ஆளும்கட்சியாகியுள்ள நிலையில் பிச்சாண்டியின் ஆதரவாளர்கள் அவர் அமைச்சர் எனச்சொல்லி வந்தனர். இந்நிலையில் அவரை சட்டசபையின் தற்காலிக சபாநாயகராக்க திமுக தலைமை முடிவு செய்து கவர்னர்க்கு கடிதம் அனுப்பியது. அதன் அடிப்படையில் அவரை தற்காலிக சபாநாயகராக அறிவிக்கப்பட்டுள்ளார்.


இதுவரை 8 முறை சட்டமன்ற தேர்தலில் நின்று இரண்டு முறை தோல்வியை சந்தித்து 6 முறை வெற்றி பெற்றுள்ளார்.


வரும் மே 10ஆம் தேதி கவர்னர் மாளிகையில் தற்காலிக சபாநாயகராக பிச்சாண்டி பதவியேற்க உள்ளார். மே 11 ஆம் தேதி சட்டசபை கூடுகிறது. அதில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். அதன்பின் முறைப்படி சபாநாயகர் தேர்வு ஆளும்கட்சி – எதிர்கட்சியால் இணைந்து தேர்வு செய்து அந்த நாற்காலியில் அமரவைக்கப்படுவர்.


அரசியலில் அதிர்ந்து பேசாதவர், எதிர்கட்சியினரும் மதிக்கும் அளவுக்கு பக்குவமானாவர் என்கிற கருத்து அரசியல் வட்டாரத்தில் உண்டு. அவரை புகழ்ந்து பேசினாலும், இகழ்து பேசினாலும் அவரின் முகத்தில் இருந்து எந்த ரியாக்ஷனையும் யாராலும் அறிந்துக்கொள்ள முடியாது என்பது அவரின் ப்ளஸ். அதேநேரத்தில் பெரியதாக பேசமாட்டார் என்பது அவரது மைனஸ்.


தற்காலிக சபாநாயகராக அறிவிக்கப்பட்டுள்ள பிச்சாண்டி, பின்னர் முறைப்படி நடைபெறும் சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்வில் துணை சபாநாயகராக தேர்வு செய்யப்படவுள்ளார் என கூறப்படுகிறது. சபாநாயகராக திருநெல்வேலியை சேர்ந்த திமுக எம்.எல்.ஏ அப்பாவு தேர்வு செய்யப்படவுள்ளார் என்கிறார்கள். அப்பாவு சிறந்த பேச்சாளர், திறமையானர் வாத திறமையாளர். அதேநேரத்தில் பிச்சாண்டியை விட கட்சியில், சட்டமன்ற அனுபவத்தில் ஜீனியர். நீண்ட கால சட்டமன்ற அனுபவம், அமைச்சராக இருந்தது, துணை கொறடாவாக இருந்தவர் பிச்சாண்டி. சட்டமன்ற அனுபவம் இருந்தாலும் அமைச்சராகவோ, கொறடாவாகவே இல்லாதவர் அப்பாபு. கட்சியில், சட்டமன்ற அனுபவத்தில் ஜீனியரான அப்பாவு சபாநாயகர், சீனியரான பிச்சாண்டி துணை சபாநாயகரா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

படம் - எம்.ஆர்.விவேகானந்தன்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT