/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/p11 (1).jpg)
தமிழகத்தின்16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று (11/05/2021) காலை 10.00 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் கூடியது. இதில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், அவை முன்னவரும் அமைச்சருமான துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள், புதிதாக சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஆகியோர் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றனர். இவர்களுக்கு, தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகர் கு. பிச்சாண்டி பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
இதனிடையே, திமுக சார்பில் சபாநாயகர் பதவிக்கு அப்பாவு, துணை சபாநாயகர் பதவிக்கு கு. பிச்சாண்டி ஆகியோர் சட்டப்பேரவைச் செயலாளர் சீனிவாசனிடம் மனுத்தாக்கல்செய்திருந்தனர்.வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்கான அவகாசம் இன்று (11/05/2021) மதியம் 12.00 மணியுடன் முடிந்ததால்,தமிழக சட்டப்பேரவையின் சபாநாயகராக ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் அப்பாவும், துணை சபாநாயகராக கீழ் பெண்ணாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் கு.பிச்சாண்டியும் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/pii3222.jpg)
சட்டப்பேரவை சபாநாயகரின் அதிகாரங்கள் குறித்து பார்ப்போம்!
சட்டப்பேரவைக் கூட்டத்திற்கு தலைமைப் பொறுப்பை ஏற்று வழிநடத்திச் செல்பவர் சபாநாயகர். தமிழக சட்டப்பேரவையின் முதல் சபாநாயகர் சிவசண்முகம் பிள்ளை. தொடர்ந்து சி.பா.ஆதித்தனார், பி.ஹெச்.பாண்டியன், தமிழ்க்குடிமகன், பிடிஆர் பழனிவேல் ராஜன் உள்ளிட்டோரும் சபாநாயகர் நாற்காலியை அலங்கரித்துள்ளனர். சபாநாயகர், கட்சிசார்பற்றவராக நடந்துகொள்ள வேண்டும் என்பது விதி. சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் பேசுவதற்கான வாய்ப்பு, நேர அளவை முடிவுசெய்யக்கூடியவர். உறுப்பினர்களின் கருத்துக்களை அவைக் குறிப்பில் சேர்ப்பதற்கும், நீக்குவதற்குமான அதிகாரம் படைத்தவர்.
சட்டமன்ற உறுப்பினர்களைத் தற்காலிகமாகவோ, கூட்டத்தொடர் முழுவதுமோ கலந்துகொள்ள தடை விதிக்கும் அதிகாரம் சபாநாயகருக்கு உள்ளது. 1985 முதல் 1989ஆம் ஆண்டு வரை சட்டப்பேரவையின் தலைவராக இருந்த பி.ஹெச். பாண்டியன், சபாநாயகருக்கு வானளாவிய அதிகாரம் உள்ளது என்பதைப் பரவலாக அறியச் செய்தவர். அரசியல் சாசன நகலை எரித்ததாக திமுகசட்டமன்ற உறுப்பினர்கள் 10 பேரை கூண்டோடு தகுதி நீக்கம் செய்தார் பி.ஹெச். பாண்டியன். மேலும், சபாநாயகருக்கு வானளாவிய அதிகாரம் இருக்கிறது என்று சட்ட நுணுக்கங்களை எடுத்துரைத்தார்.
முந்தைய ஆட்சியில், முதல்வர் மீது நம்பிக்கையில்லை என ஆளுநரிடம் புகார் அளித்த டிடிவி தினகரனின் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டிருந்தார், அப்போதைய சபாநாயகரான தனபால். சபாநாயகரின் முடிவுக்கு எதிராக 18 பேரும் நீதிமன்றத்தை நாடியபோதும் சபாநாயகரின் தகுதி நீக்கம் உத்தரவு செல்லும் என்றே தீர்ப்பு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)