ADVERTISEMENT

கொள்ளையடித்தலையே கொள்கையாகக் கொண்ட அ.தி.மு.க. அரசு... வேல்முருகன் கடும் தாக்கு... 

08:15 PM May 31, 2020 | rajavel

ADVERTISEMENT


கொள்ளையடித்தலையே கொள்கையாகக் கொண்ட அ.தி.மு.க. அரசைத் தூக்கியடிக்கத் தயாராவீர் தமிழக மக்களே, எனக் கேட்டுக்கொள்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி எனக் கூறியுள்ளார் அக்கட்சியின் தலைவர் வேல்முருகன்.

ADVERTISEMENT


இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,


அது ஒரு காலம் கண்ணே, கார் காலம்!.... இது கவிப்பேரரசின் ஒரு கவிதைத் தொடக்க வரி! அப்படித்தான் இருந்தது மேட்டூர் அணையில் காவிரி நீர் திறப்பதும். பல்லாண்டு காலமாகவே குறித்த நாளான ஜூன் 12 அன்று மேட்டூர் அணை திறக்கப்பட்டதில்லை. ஏதோ நல்வாய்ப்பாக இந்த ஆண்டு வரும் ஜூன் 12 அன்று அணை திறக்குமளவுக்குப் போதிய நீர் இருக்கிறது. தமிழ்நாடு அரசும் ஜூன் 12இல் அணை திறப்பதாக அறிவித்திருக்கிறது.


அதேநேரம், அணை திறக்கும் முன் அரசு செய்து முடித்திருக்க வேண்டிய அத்தியாவசியப் பணி ஒன்று உண்டு. அது காவிரியின் கடைமடைக் கால்வாய் வரையிலும் தூர் வாரும் பணியை ஏற்கனவே நிறைவு செய்திருக்க வேண்டும். அப்போதுதான் கடைமடை விவசாயியும் பயனடைவார். சொல்லப்போனால், எந்த ஊர் சட்டப்படியும் சரி, சர்வதேச சட்டப்படியானாலும் சரி; கடைமடை விவசாயிதான் காவிரிப் பயனாளிகளில் முதன்மை உரிமையாளர்!


ஆனால் அணையில் போதிய நீர் இருப்பது தெரிந்தும் அ.தி.மு.க. அரசு இந்தத் தூர் வாரும் பணியை ஏற்கனவே செய்து முடிக்கவில்லை. அணை திறக்க 18 நாட்கள் இருக்கும் நிலையில்தான் தூர் வாரும் பணியையே அறிவித்தது. பணியை மேற்பார்வையிட பல்வேறு துறைகளின் அதிகாரிகளைக் கொண்ட சிறப்புக் கண்காணிப்புக் குழு ஒன்றையும் நியமித்தது.


சிறப்புக் கண்காணிப்புக் குழுவில் நியமிக்கப்பட்ட இந்த அதிகாரிகளுக்கு தத்தம் துறை சார்ந்த பணிகள் ஏதும் இல்லையா; அந்த அளவுக்கு அரசாங்கம் ஓய்வெடுத்துத் தூங்கிக் கொண்டிருக்கிறதா எனக் கேட்கத் தோன்றுகிறது. நீர்ப்பாசனத்துறை அமைச்சர், நீர்ப்பாசனத்துறை செயலர் உள்ளிட்டவர்களே தூர் வாரும் இந்தப் பணியைக் கண்காணிக்கப் போதுமானவர்கள் என்பதே பொதுமக்களின் கருத்தாகும்.


அப்படியென்றால் இப்படி ஏன் செய்யப்படுகிறது என்ற கேள்வி எழுகிறது. இந்தக் கேள்விக்கு, வழக்கமான நடைமுறைதானே இது என்று மிக எளிதாகப் பதில் சொல்லிக் கடந்துபோய்விட முடியாது அரசு. கிட்டத்தட்ட 7 மாவட்டங்களை உள்ளடக்கிய இந்தப் பணியை இவ்வளவு குறுகிய காலத்திற்குள் செய்து முடிக்க முடியுமா என்றால் முடியவே முடியாது என்பதுதான் பதில்.


அப்படியென்றால் இந்தப் பணியைச் செய்து முடித்துவிட்டதாக படம் காட்டுவதும் பணம் பார்ப்பதும்தான் நோக்கமாக இருக்க முடியும். ஆக, ஒப்புக்காகவே இந்தத் தூர் வாருதல் என்று சொல்லலாம்தானே?


இது ஒருபுறம் என்றால் மறுபுறம் மணல் வாருதல்! மணல் வாருதல் விடயத்தில் சுற்றுச்சூழல் சட்டப்படி முறையான விதிகள் உள்ளன. ஆனால் ஆட்சியாளர்களுக்கு சட்டமாவது, விதிகளாவது?


கல்லணையில் இருந்து திருவையாறு வரை காவிரி வெண்ணாற்றில் மணல் வாரும் பணிக்கு உத்தரவாகியிருக்கிறது. உத்தரவு என்றால் சட்டப்படி அல்ல; சட்ட விரோதமாக!


பல்லாயிரம் கோடிகள் பெருமதியான திட்டம்; ஆனால் பல நூறு கோடிகள் வரும்படி மட்டும் அ.தி.மு.க.வினர் பெறும்படியான திட்டமாக வாய்ச்சொல் மூலமே உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி மாவட்ட நிர்வாகமும் கண்ணை மூடிக்கொள்ள வேண்டும்.


இத்திட்டத்திற்குத் தலைமை அ.தி.மு.க.வின் எம்.பி. ஒருவர்தான் என்று சொல்லப்படுகிறது.


திருவையாறு முதல் திருக்காட்டுப்பள்ளி வரையிலும், திருக்காட்டுப்பள்ளி முதல் கல்லணை வரையிலும் மணல் வார அனுமதி. இந்த இரண்டு நபர்களும் அ.தி.மு.க.காரர்கள் இல்லை; ஆனால் அ.தி.மு.க. எம்.பி.க்கு கமிஷனை கறாராக வெட்டிவிட வேண்டும்.


கமிஷன் நாளொன்றுக்கு 3 லட்சத்துக்கும் மேல் என்று தெரிகிறது. அது பொறுப்பான அ.தி.மு.க. நபர்கள் மூலம் போய்ச் சேர்ந்துவிட வேண்டும். ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 300 வண்டிகளும், ஒரு ஜே.சி.பி. பக்கெட்டுக்கு 2,000 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


மாவட்ட ஆட்சியர், காவல்துறைத் தலைவர், வட்டாட்சியர், வருவாய் அலுவலர் என இவர்கள் யாரும் கண்டும் காணாதிருக்குமாறும் சொல்லப்பட்டிருப்பதோடு, பிரச்சனைகள் என்று ஏற்பட்டால் ஆளுங்கட்சிக்காரர்களுக்கே சாதகமாக நடந்துகொள்ள அதிகாரபூர்வமற்ற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருக்கிறதாம்.


எதற்கும் நேரம் காலம் வேணும் என்பார்களல்லவா; அதன்படி மணல் வார நேரம், இரவு 12 மணி முதல் காலை 5 மணி வரை. எங்கெல்லாம் மணல் வாருவது? வாய்பிருக்கும் இடங்களிலெல்லாம் தாராளமாக வாரிக்கொள்ளலாம். சரி. காலம்? அதாவது ஜூன் 22 க்குள் அள்ளிவிட வேண்டும்.


என்ன ஜூன் 22 வரை? ஜூன் 12 அணை திறப்பாச்சே?


அதற்குள் மணல் மொத்தத்தையும் வாரிவிட முடியாது; அதானால்தான் கூட 10 நாட்கள். அப்படியால் அரசு ஏற்கனவே அறிவித்தபடி ஜூன் 12இல் அணை திறக்கப்படாது; நாட்கள் தள்ளிப்போகும் என்றாலும், அதையும் பொறுத்துக் கொண்டுதான் ஆக வேண்டும் இந்த ஆதரவற்ற விவசாயிகள்.


ஆக, மேட்டூர் அணை திறப்பு என்னும் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள்: (1) ஒப்புக்காக தூர் வாருதல், (2) சட்டவிரோத மணல் வாருதல்; இப்படிக் கொள்ளையடித்தலையே கொள்கையாகக் கொண்ட அ.தி.மு.க. அரசைத் தூக்கியடிக்கத் தயாராவீர் தமிழக மக்களே, எனக் கேட்டுக்கொள்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி! இவ்வாறு கூறியுள்ளார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT