ADVERTISEMENT

சிவகாசி மாநகராட்சி: ராஜேந்திரபாலாஜி டிராமா! கவுன்சிலர்கள் தாவல்! - அதிர்ச்சி தகவல்கள்!

04:15 PM Mar 02, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

“இது பச்சைத் துரோகம்..” என்று திமுகவுக்குத் தாவிய சிவகாசி மாநகராட்சி கவுன்சிலர்கள் 9 பேரையும் வசைபாடி நறநறத்தனர், விருதுநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் இருவர். “இவங்கள்லாம் அடுத்த தேர்தல்ல நின்னு ஓட்டு கேட்டு போறப்ப இப்படியும் நடக்கும்ல. ‘நீங்க சொன்ன சின்னத்துக்குத்தான் போன தடவை ஓட்டு போட்டோம். ஜெயிச்சதும் பொசுக்குன்னு மொத்தமா கட்சி மாறிட்டீங்க. இந்த தடவையும் மாற மாட்டீங்கன்னு என்ன நிச்சயம்? ஓட்டுக்கு எந்தக் கட்சிக்காரங்க பணம் கொடுத்தாலும் அப்பாவி மக்கள் வாங்கிக்குவாங்க. ஆனா.. ஓட்டு போடறது அவங்களுக்குப் பிடிச்ச கட்சிக்குத்தான். அப்படித்தான் உங்களையும் தேர்ந்தெடுத்தாங்க. நீங்க என்னடான்னா, உங்க பேராசைக்காக அப்ப கட்சி மாறுனீங்க. இப்ப எந்த முகத்த வச்சு ஓட்டு கேட்டு வர்றீங்க?’ முகத்துக்கு நேரா இப்படி கேட்டாங்கன்னா, இந்த 9 கவுன்சிலர்களும் எப்படி வாயைத் திறக்கமுடியும்?” எனக் குமுறிவிட்டு, தாவல் பின்னணி குறித்து அலசினார்கள்.

“அதெப்படி போன 10 வருஷம் அதிமுகவுல சம்பாதிச்சிட்டு, அடுத்த 5 வருஷம் திமுகவுலயும் சம்பாதிக்கணும்னு கணக்கு போட்டு கட்சி தாவுறாங்க? ஆளும்கட்சிக்கு போயிட்டா இவங்கள்லாம் புனிதமாயிருவாங்களா? வருமானத்துக்கு அதிகமா இவங்க சம்பாதிச்ச சொத்துகளுக்கெல்லாம் பாதுகாப்பு கிடைச்சிருமா?

பலராமன்

ராஜேந்திரபாலாஜிய விரட்டி விரட்டி அரெஸ்ட் பண்ணுன வழக்குல புகார் கொடுத்த விஜயநல்லதம்பி, ‘ஆவின் வேலை வாங்கித்தர ரூ.60 லட்சத்தை உதவியாளர் பலராமனிடம்தான் கொடுத்தேன். இந்த பலராமனின் 10 ஆண்டுகளுக்கு முந்தைய பிந்தைய சொத்துகளை ஆய்வு செய்தாலே உண்மை வெளிப்படும்.’ என்று குற்றம் சாட்டியிருந்தார். ராஜேந்திரபாலாஜி மீதான பண மோசடி வழக்கில் (ஏ-3) குற்றம் சாட்டப்பட்டவரான பலராமன் தற்போது திமுகவில் சேர்ந்துவிட்டார். 9 மாநகராட்சி கவுன்சிலர்களோடு இணைந்த பலராமனைக் காப்பாற்ற திமுக அரசு உதவினால், ராஜேந்திரபாலாஜி மீதான வழக்கு ஒண்ணுமில்லாம போயிருமே! இன்னைக்கு வரைக்கும் அந்த வழக்குல பலராமன் நிரந்தர ஜாமீன் வாங்கல. கோர்ட்டிலும் ஜாமீன் ஏறல. ஆனா, ரெண்டு அமைச்சர் முன்னால தைரியமா நின்னு ஆளும்கட்சில சேர்ந்துட்டேன்னு போட்டோ எடுத்துக்க முடியுது. இந்த விவரமெல்லாம் திமுக தலைமைக்கு தெரியுமா?

இந்த பலராமன், விருதுநகர் மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் ஆனதும், மாவட்ட அறங்காவலர் குழு தலைவரானதும், போன அதிமுக பீரியட்லதான். அபார வளர்ச்சியெல்லாம் அரசியல வச்சுத்தான். இவருக்கு சொந்தமா பல்லடத்தில் ரூ.300 கோடி பெறுமான மில் இருக்கு. மூணு ஷிப்ட் வேலை நடக்கு. பலராமனின் கோடிக்கணக்கான பணம் பினாமிகளின் பெயரில் சிவகாசி பட்டாசு நிறுவனங்கள்ல புரளுது. இவ்வளவு சம்பாத்தியம் எப்படி வந்துச்சுன்னு, ராஜேந்திரபாலாஜி மேல உள்ள கோபத்துல பலராமன் பக்கம் திரும்பிடக்கூடாதுன்னுதான் பாதுகாப்பு தேடி திமுகவுக்கு போயிட்டாரு.

பொன் சக்திவேல், பலராமன், லெனின் கிருஷ்ணமூர்த்தி

கூண்டோடு கட்சி தாவ வச்சதுல லெனின் கிருஷ்ணமூர்த்தியோட பங்கு நெறய இருக்கு. இந்த லெனின் கிருஷ்ணமூர்த்தி எந்தக் கட்சிலயும் இல்ல. ஆனா, அதிமுக, திமுக முக்கிய பிரமுகர்களுக்கு பினாமியா இருந்து தொழிலதிபரா ஆயிட்டாரு. மதுரை வடக்கு தொகுதி திமுக எம்.எல்.ஏ.வும், மதுரை மாநகர் மாவட்ட செயலாளருமான கோ.தளபதியைப் பிடித்து, தெலுங்கு லாபி மூலம் இணைப்பு வேலைய பண்ணிருக்காங்க. பலராமன், லெனின் கிருஷ்ணமூர்த்தி, சீனிவாசன் அப்புறம் மாவட்ட திமுக இளைஞரணி பொறுப்புல இருந்த கே.வி.கந்தசாமி.. இந்த நாலு பேர் விரிச்ச வலையில, திருத்தங்கல் அதிமுக ந.செ. பொன் சக்திவேல் சிக்கிட்டாரு. அதிமுகவை விட்டுப்போக மனசே இல்லாம, உள்ளுக்குள்ள அழுதுகிட்டேதான் போயிருக்காரு பொன் சக்திவேல். ராஜேந்திரபாலாஜி மாதிரியே உன்னையும் விடமாட்டாங்கன்னு சொல்லியே பொன் சக்திவேலை கூட்டிட்டு போயிட்டாங்க. ‘உன்னையும் விஜிலன்ஸ வச்சு சோலிய முடிச்சிருவாங்க’ன்னு அதிமுக முக்கிய நிர்வாகி ஒருவருக்கும் மிரட்டி அழைப்பு விடுத்திருக்காங்க. அவரோ ‘நான் வரல..’ என்று அதிமுகவுல இப்பவரைக்கும் ஸ்டெடியா இருக்காரு.

இன்னொரு பேச்சும் நம்புறமாதிரியே ஓடிட்டிருக்கு. அதாவது, ராஜேந்திரபாலாஜிக்கு ரொம்பவும் நெருக்கமா இருந்தாரு சீனிவாசன். தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அப்ப முதலமைச்சரா இருந்த எடப்பாடி பழனிசாமி அமெரிக்கா சென்றபோது ராஜேந்திரபாலாஜியும் போயிருந்தார். அப்ப இந்த சீனிவாசனும் ராஜேந்திரபாலாஜியோட நட்புக்காக அமெரிக்காவுக்கு ட்ரிப் அடிச்சாரு. இவ்வளவு நெருக்கமா இருந்துட்டு, இப்ப ராஜேந்திரபாலாஜிய அம்போன்னு விட்டுட்டு, சீனிவாசன் எதுக்கு திமுகவுக்கு போகணும்? இங்கேதான் ட்விஸ்ட் இருக்கு. அமைச்சரா இருந்தப்ப எந்த நேரமும் தன்கூடவே இருந்தவங்கள இப்ப திமுகவுல சேரச்சொல்லி அனுப்பியதே ராஜேந்திரபாலாஜிதான். அங்க போயி மொதல்ல நீங்க உங்கள காப்பாத்திக்கங்க. அது நடந்தா, எனக்கும் நல்லதுதான்னு சீனிவாசனை வாழ்த்தி அனுப்பிருக்காரு. ஏன்னா, எந்த ஒரு காரியத்துல இறங்கினாலும், ராஜேந்திரபாலாஜிகிட்ட திருநீறு பூசி ஆசிவாங்குற வழக்கத்த சீனிவாசன் கடைப்பிடிச்சிட்டு வர்றாரு. ராஜேந்திரபாலாஜி நடத்துன இந்த டிராமா, அவரோட அரசியல் ஆசான் கே.கே.எஸ்.எஸ்.ஆருக்கு தெரியாம இருக்காது.” என்றனர்.

சீனிவாசன்

இதுகுறித்து விளக்கம்பெற சீனிவாசனைத் தொடர்புகொண்டபோது, நம்மைத் தவிர்த்தார். கட்சி தாவலுக்கு துணைநின்றவர்களும், செல்போன்களை ஸ்விட்ச்-ஆப் செய்திருந்தனர். தொடர்ந்து முயற்சித்தும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி நமது லைனுக்கு வரவில்லை.

கட்சி தாவல் நாடகமெல்லாம் என்ன மாடல் அரசியலோ?

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT