திட்டங்களுக்காக நிதி ஒதுக்கீடு செய்வது; ஒப்பந்தக்காரர் மூலம் கட்டுமானப் பணிகளை முடிப்பது; இதெல்லாம் வழக்கம்போல் நடந்துவிடும். ஒப்பந்தப் பணிக்கான பில் தொகையும் ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்பட்டுவிடும். அதற்கான பெர்சன்டேஜ் பலாபலன்கள்கூட உரியவர்களுக்கு வேகவேகமாகப் போய்ச் சேர்ந்துவிடும். ஆனால், அத்திட்டம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு அதே வேகத்தில் வருவதில்லை. ஏனென்றால் அரசியல் புகுந்துவிடும்; கிடப்பில் போட்டு விடுவார்கள். காலம் காலமாக இது நடக்கிறது.
சாம்பிளுக்கு சிவகாசியில் எம்.எல்.ஏ. நிதியில் கட்டப்பட்ட ஒரு சமுதாயக்கூடத்தின் இன்றைய நிலையைப் பார்ப்போம்:
அதிமுக ஆட்சியில் சிவகாசி எம்.எல்.ஏ.வாகவும் பால்வளத்துறை அமைச்சராகவும் இருந்தவர் கே.டி. ராஜேந்திர பாலாஜி. 2020ல் சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து (திட்ட நிதி ரூ. 25 லட்சம் + பொது நிதி ரூ. 25 லட்சம்) ரூ.50 லட்சம் மதிப்பீட்டில், தூய்மைப் பணியாளர் குடியிருப்பு பகுதியில் சமுதாயக்கூடம் கட்டப்பட்டு, ராஜேந்திர பாலாஜியால் திறந்து வைக்கப்பட்டது. பள்ளபட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட நேரு காலனி, எம்.ஜி.ஆர். காலனி போன்ற பகுதிகளில் வசிக்கும் ஏழை - எளிய மக்கள், குறைந்த வாடகையில் இந்த சமுதாயக்கூடத்தில் இனி திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தலாம் என்ற நம்பிக்கையுடன் இருந்தனர். ஆனால், திறப்புவிழா கண்ட அந்த சமுதாயக்கூடம் கடந்த 3 ஆண்டுகளாகப் பூட்டியே கிடக்கிறது.
சமுதாயக்கூடத்தை வெறும் காட்சிப் பொருளாக்கி, மக்களின் வரிப்பணம் ரூ. 50 லட்சம் விரயமாக்கப்பட்டதை ‘அரசியல்’ என்கிறார் சிவகாசி ஒன்றிய கவுன்சிலர் சுடர்வள்ளி. “இந்த சமுதாயக்கூடம் கட்டுறதுக்கு நிதி பரிந்துரை பண்ணுனது அப்போது பால்வளத்துறை அமைச்சரா இருந்த ராஜேந்திர பாலாஜி. அதனால கல்வெட்டுலயும் சமுதாயக்கூட முகப்புலயும் அவருடைய பெயர் இடம்பெற்றிருக்கு.
‘ராஜேந்திர பாலாஜி திமுக தலைமைக்கு வேண்டாதவராச்சே? அவர் திறந்து வைத்த சமுதாயக்கூடம் பயன்பாட்டுக்கு வந்தால்... தொகுதியில் அவருக்கல்லவா செல்வாக்கு கூடும்? இதனால அரசியல் ரீதியா திமுகவுக்கு ஒரு பயனும் இல்லியே?’ இந்த மாதிரி சிந்திக்கிற ஆளும்கட்சிகாரங்க.. அவங்களுக்கு ஜால்ரா போடுற அதிகாரிங்க, இவங்களாலதான் சமுதாயக்கூடம் பூட்டியே கிடக்கு. ராஜேந்திர பாலாஜி மேல உள்ள வெறுப்பை காட்டுறதுக்காக மக்களை கஷ்டப்படுத்தலாமா? நானும் அதிகாரிகள் வரை பேசிப் பார்த்துட்டேன். ஒரு பிரயோஜனமும் இல்லை” என்றார் வேதனையுடன்.
சிவகாசி மாநகராட்சி ஆணையர் சங்கரனை தொடர்பு கொண்டோம். “நிச்சயம் இதுகுறித்து விசாரிக்கிறேன். சமுதாயக்கூடம் திறப்பதற்கான நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும்” என்று சிம்பிளாக முடித்துக்கொண்டார்.
மக்கள் நலனுக்கு எதிராகச் செயல்படுவது என்ன அரசியலோ?