/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ktr_6.jpg)
சிவகாசி அருகே திருத்தங்கல்லில்,விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் இணைந்து நடத்திய, மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கோவிட்-19 சிறப்பு கடன் உதவித் திட்டத்தின்கீழ் கடன் வழங்கும் நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு, 255 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1 கோடியே 71 லட்சத்து 60 ஆயிரத்துக்கான கரோனா சிறப்பு கடன் காசோலைகளை வழங்கினார்.
அதன்பிறகு நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி –
ஒன்றிணைவோம் வா என்று கூறி, மு.க. ஸ்டாலின் மட்டுமே நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார். ஸ்டாலின் நடவடிக்கையை நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ரோடு போடாத சாலைப் பணியில் டெண்டர் முறைகேடு என்றுகூறி திமுகவினர் வழக்கு தொடர்வார்கள். பொய் என்று தெரிந்தவுடன் அவர்களே வழக்கை வாபஸ் பெறுவார்கள். ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி திமுக என்பதை ஸ்டாலின் மறந்துவிடக்கூடாது. கலைஞர் இருக்கும்வரை திமுக சுயமரியாதையுடன் இருந்தது. தற்போதுபிரசாந்த் கிஷோர் கூறும் ஆலோசனையைக் கேட்டு, கட்சியை நடத்த வேண்டிய அவல நிலையில் திமுக உள்ளது.
கரோனா நிவாரண உதவிகளை ஏழை எளிய மக்களுக்கு அதிமுக லாரி லாரியாக, வாரி வாரி வழங்கியதை நாட்டு மக்கள் அறிந்திருப்பார்கள். ஆனால், திமுக பெயரளவில் நிவாரணத்தை கொடுத்துவிட்டு, பெரிய அளவில் விளம்பரத்தை தேடியது.
இன்றைக்கு 9 துறைகளில் மத்திய அரசின் தேசிய விருதை எடப்பாடியார் அரசு பெற்றுள்ளது. திமுக இனி கதம் கதம்தான். திமுக என்ற கட்சியே வரும் தேர்தலோடு முடியப்போகிறது. இனி எந்தத் தேர்தலிலும் திமுகவிற்கு வேலையே இருக்காது. திமுகவில் உள்ள 2-ம் கட்ட தலைவர்கள் எல்லாம் ஸ்டாலின் போக்கு கண்டு மனம் வெதும்பி போய் உள்ளனர். மீண்டும் அதிமுகதான் ஆட்சிக்கு வரும். எடப்பாடியார் தொடர்ந்து முதலமைச்சாராக பணியாற்றுவார்.” என்றார்.
‘திமுகவையும், மு.க.ஸ்டாலினையும் ஒரு பிடிபிடிப்பதற்கு எடப்பாடி பழனிசாமியே, கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு ‘கீ’ கொடுத்திருக்கிறார். அதனால்தான், காரசாரமான இந்த அறிக்கை, பேட்டியெல்லாம்..’ என்கிறது, ஆளும்கட்சி வட்டாரம்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)