ADVERTISEMENT

“ஆட்சியில் நடக்கும் காட்சிகளே சாட்சி” - விஜயகாந்த்

11:02 PM May 15, 2023 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் செங்கல்பட்டு பகுதிகளில் கள்ளச்சாராயம் மற்றும் போலி மது அருந்தி 12 பேர் உயிரிழந்த விவகாரத்தில் பல்வேறு கட்சித் தலைவர்களும், அரசு இவ்விஷயத்தில் முன்னதாகவே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தேமுதிகவின் நிறுவன தலைவர் விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “மரக்காணம் அருகே எக்கியார் குப்பம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி இதுவரை 9 பேர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஏற்கனவே தமிழகத்தில் டாஸ்மாக் விற்பனை கொடி கட்டி பறக்கிறது. மதுவிலக்கை அமல்படுத்துவோம் என வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திமுக, டாஸ்மாக் கடைகளை மூடாமல், வணிக வளாகங்களில் உள்ள எலைட் கடைகளில் தானியங்கி விற்பனை இயந்திரங்கள் மூலம் மதுபானங்களை விற்பனை செய்து வருகிறது.

இதன் மூலம் சிறார்களுக்கும் மதுபானம் கிடைப்பதை எளிதாக்கும் வகையில், தமிழக அரசின் செயல் உள்ளது. டாஸ்மாக் கடைகளால் பல குடும்பங்கள் சீரழிந்து வரும் நிலையில் தற்போது கள்ளச்சாராய விற்பனையும் தமிழகத்தில் அதிகரித்து வருகின்றன. கள்ளச் சாராயத்தை குடித்து இதுவரை 9 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு தமிழக அரசே முக்கிய காரணம்.

கள்ளச் சாராய விற்பனையைத் தடுக்க வேண்டிய அதிகாரிகள் மாமூல் வாங்கிக் கொண்டு அதனை கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர். இதனால் தமிழகத்தில் கள்ளச் சாராய விற்பனை படு ஜோராக நடைபெற்று வருகிறது. அதனை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம், மதுபானம் மற்றும் போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிக்க அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாடு போதை நாடாக மாறிவிட்டது என்பதை இந்த ஆட்சியில் நடக்கும் காட்சிகளே சாட்சி” எனத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT