ADVERTISEMENT

‘ஜெயலலிதாவை விட பழனிசாமி திறமையானவர்?’ - டிடிவி தினகரன் பதில்

07:50 PM Mar 03, 2023 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 1 லட்சத்து 10 ஆயிரம் வாக்குகள் பெற்று ஏறத்தாழ 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் தென்னரசு 43 ஆயிரம் வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். அதிமுகவின் இந்த தோல்விக்கு எடப்பாடி பழனிசாமி தான் காரணம் என பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் மதுரை கோச்சடையில் உள்ள தனியார் உணவகத்தில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அதிமுக ஒன்றிணையாததே தோல்விக்கு காரணம் என அண்ணாமலை சொல்கிறார். அது அவருடைய கருத்து. பொதுவாகவே இபிஎஸ் மற்றும் அவரை சேர்ந்த ஒரு சிலரின் ஆணவம், ஆட்சியிலிருந்த போது வந்த வரவின் காரணமான திமிர் இவைகள் தான் அதிமுக தோல்விக்குக் காரணம். உச்சநீதிமன்றம் இரட்டை இலை சின்னத்தை கொடுக்கவில்லை என்றால் இன்னும் மோசமாக தோற்றிருப்பார்கள். ஜெயலலிதா 2006ல் 65 இடங்கள் தான் வெற்றி பெற்றார்.

ஆனால், எடப்பாடி பழனிசாமி 70 தொகுதிகளை வென்றுள்ளார் என்று கேட்பர். எடப்பாடி வென்றது அதிமுக ஆட்சி செய்த பின் வந்த தேர்தலில்... நான்காண்டுகள் பழனிசாமி ஆட்சி செய்தாலும் அதற்கு முன் ஜெயலலிதா ஆட்சி செய்துள்ளார். ஆட்சி அதிகாரம், அதனால் கிடைத்த பணபலத்தால் தான் அதிமுக ஓடிக்கொண்டு உள்ளது. ஆனால், இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டபோது 1989 பொதுத் தேர்தலில் சேவல் சின்னத்தில் போட்டியிட்ட ஜெயலலிதா தனித்து நின்று 28 தொகுதிகளில் வெற்றி பெற்றார். ஈரோட்டில் மட்டும் 7 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளார். உச்சநீதிமன்றம் இரட்டை இலை சின்னத்தை அவர்களிடம் திணித்துள்ளது. சின்னத்தை வைத்துக்கொண்டே இந்த பாடுபட்டுள்ளார்கள். வரும் காலத்தில் ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் ஒன்றிணைந்து செயல்பட்டால் தான் திமுகவை வீழ்த்த முடியும். இடைத்தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு எடப்பாடி பழனிசாமி தான் காரணம்.

பழனிசாமி பிடியில் அதிமுக இருக்கும் வரை இன்னும் பலவீனப்படும். இன்னும் மோசமான நிலையை அடையும். அதனால் தான் காலம் ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்களை ஒன்றிணைக்கும். இதுபோன்ற நயவஞ்சகர்கள் தீயவர்களுக்கு காலம் தக்க தண்டனை கொடுக்கும். ஒரு சிலரின் தவறான முயற்சியால் கட்சியை கபளீகரம் செய்து வைத்துள்ளார்.” எனக் கூறினார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT