ADVERTISEMENT

முன்னாள் அமைச்சர் கார் உடைப்பு; வேட்பாளர் கடத்தல்; களேபரத்தில் நடந்து முடிந்த துணைத் தலைவர் தேர்தல்

03:14 PM Dec 20, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கரூர் மாவட்ட ஊராட்சிக் குழுத் துணைத் தலைவர் தேர்தல் பல்வேறு காரணங்களால் ஏற்கனவே ஆறு முறை ஒத்திவைக்கப்பட்டது. மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்களில் திமுகவைச் சேர்ந்த உறுப்பினர்கள் ஆறு பேர், அதிமுகவைச் சேர்ந்த உறுப்பினர்கள் ஆறு பேர் என சம பலத்தில் உள்ளனர்.

இந்த நிலையில், மதுரை உயர் நீதிமன்றத்தில் அதிமுக தரப்பில் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் திரு.வி.க. என்பவர் தேர்தலை முறையாக நடத்தக்கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள் தேர்தலை முறையாக நடத்தவும், தேர்தல் அதிகாரி சீல் இடப்பட்ட கவரில் முடிவுகளைச் சமர்ப்பிக்க வேண்டும் எனவும், கோர்ட் உத்தரவிடும் வரை முடிவுகளை வெளியிடக் கூடாது எனவும் உத்தரவு பிறப்பித்தனர்.

இந்நிலையில், நேற்று காலை கரூர்-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வேடசந்தூர் அருகே முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் காரில் அதிமுக உறுப்பினர்கள் ஆறு பேர் வந்து கொண்டிருந்தனர். அப்போது மர்ம நபர்கள் சிலர் முன்னாள் அமைச்சர் காரை தடுத்து நிறுத்தி, கண்ணாடியை உடைத்து அதிமுகவைச் சேர்ந்த திரு.வி.க. என்பவரைக் கடத்திச் சென்றதாகக் கூறப்படுகிறது.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக இந்தச் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையிலான அதிமுகவினர் ஒன்று கூடி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். எதிர்த்தரப்பில் திமுகவினர் நூற்றுக்கணக்கானோர் ஒன்று கூடியதால் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்தத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த எஸ்.பி. சுந்தரவதனம் இரு தரப்பினரையும் தனித்தனியாகத் தடுத்து நிறுத்தினார். மேலும், பாதுகாப்புக்காக அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான பிரபு சங்கர் தலைமையில் மாவட்ட ஊராட்சிக் குழுத் துணைத் தலைவருக்கான மறைமுக தேர்தல் கோர்ட் உத்தரவுப்படி நடந்தது. இதில் திமுகவைச் சேர்ந்த ஆறு பேர், அதிமுகவைச் சேர்ந்த ஐந்து பேர் பங்குபெற்று வாக்களித்தனர். கோர்ட் உத்தரவுப்படி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவில்லை.

தேர்தல் நடந்து முடிந்து திமுக உறுப்பினர்கள் ஆறு பேர் வெளியே வந்தனர். இதில் திமுக சார்பில் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட 5-வது வார்டு உறுப்பினர் தேன்மொழி செய்தியாளர்களைச் சந்தித்து, தனக்கு 7 வாக்குகள் கிடைத்து வெற்றி பெற்றதாகவும், அதிமுக தரப்பிற்கு 4 வாக்குகள் மட்டுமே கிடைத்ததாகவும் தகவல் தெரிவித்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT