ADVERTISEMENT

ஜாக்டோ – ஜியோ அமைப்பினரை உடனடியாக முதலமைச்சர் நேரில் அழைத்துப் பேச வேண்டும் - ஸ்டாலின்

12:28 AM Jun 13, 2018 | Anonymous (not verified)


ADVERTISEMENT

ADVERTISEMENT

இன்று (12-06-2018) சென்னை எழிலகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு வரும் ஜாக்டோ - ஜியோ அமைப்பினரை கழக செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் நேரில் சந்திந்து ஆதரவு தெரிவித்து, அவர்களுடைய கோரிக்கைகளை சட்டமன்றத்தில் நிச்சயம் வலியுறுத்துவதாக உறுதியளித்தார். பின்னர், அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் விவரம் பின்வருமாறு:

ஸ்டாலின்: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஒருங்கிணைந்த இந்த ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் பல கோரிக்கைகளை இந்த அரசுக்கு முன்வைத்து, நேற்று உண்ணாவிரதத்தை தொடங்கி இருக்கிறார்கள். இன்று இரண்டாவது நாளாக உண்ணாவிரத போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. சென்னை மாநகரத்திலே நடக்கின்ற இந்த உண்ணாவிரதம் மட்டுமல்லாமல், தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய மாவட்ட தலைநகரங்களில் தொடர்ந்து அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் தொடர்ந்து போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

எனவே, அவர்களுடைய கோரிக்கையை அரசு உடனடியாக பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். அதுமட்டுமல்ல, நான் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருக்கக்கூடிய அரசு ஊழியர்கள், ஆசிரியர் பெருமக்களுடைய அந்த நிர்வாகிகளை சந்தித்து அவர்களிடத்திலே நான் சொன்னேன், இந்த ஆட்சி இருக்கிற வரையில் நீங்கள் வைக்கக்கூடிய கோரிக்கை நிச்சயமாக நிறைவேறப்போவது இல்லை. விரைவில், தமிழகத்திலே உங்கள் அன்போடு, ஆதரவோடு மலர இருக்கக்கூடிய திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி வருகிற போது உங்களுடைய கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்று சொல்வதை விட அது நிறைவேற்றப்படும் என்ற அந்த உறுதியை நான் தந்திருக்கிறேன்.

அதுமட்டுமல்ல, எவ்வளவோ போராட்ட வியூகங்கள் இருக்கிறது. ஆனால், தங்கள் உடலை வருத்திக் கொண்டு இந்த உண்ணாவிரத போராட்டத்தை நீங்கள் தொடர்ந்து நடத்திட வேண்டுமா? அதை இன்றோடு முடிக்கக்கூடாதா? என்ற கோரிக்கையை நான் எடுத்து வைத்திருக்கிறேன். அந்த கோரிக்கையை அவர்கள் நிச்சயமாக பரிசீலிக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொண்டிருக்கிறேன். எனவே, இது குறித்து நான் நிச்சயமாக சட்டமன்றத்திலே இந்த பிரச்சனையை நான் எழுப்ப போகிறேன்.

செய்தியாளர்: தமிழகத்திலே அடுத்தடுத்து எங்கு பார்த்தாலும் போராட்டம், ஏதாவது ஒரு புதிய பிரச்சனை போய்க்கொண்டே இருக்கிறது. இதற்கு எப்பொழுதுதான் முற்றுபுள்ளி இருக்கும்?

ஸ்டாலின்: இன்றைக்கு ஆட்சியில் இருக்கக் கூடியவர்களுடைய தன்மை எப்படி இருக்கிறது என்று சொன்னால், மக்கள் பிரச்சனைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், விவசாயப் பெருங்குடி மக்கள், நெசவாளர்கள், தொழிலாளர்கள் என எல்லா தரப்பு மக்களுமே இன்றைக்கு இந்த ஆட்சியிலே பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த ஆட்சியிலே இருக்கக்கூடியவர்களை பொருத்தவரைக்கும் இந்த ஆட்சியை எப்படி தக்க வைத்துக்கொள்வது, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தொடர்ந்து எப்படி மாமூல் தந்து அவர்களை தங்கள் பக்கம் தக்க வைத்துக் கொள்வது என்பதிலே தான் அவர்கள் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்களே தவிர, மக்களைப் பற்றி அவர்கள் கிஞ்சிற்றும் கவலைப்படவில்லை.’’

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT