ADVERTISEMENT

அரசு இணையத்தளத்தில் ஈஷா ஆதியோகி சிலை பயன்படுத்தலாமா? ஈஷாவுக்கு விளம்பரம் செய்யும் காவல்துறை!

11:17 AM Jun 26, 2020 | Anonymous (not verified)

ADVERTISEMENT

ADVERTISEMENT

கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் பலநூறு ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து ஆதியோகி சிலையை நிறுவியிருக்கிறார் சாமியார் ஜக்கி வாசுதேவ். அந்தச் சிலையின் முகம் ஜக்கியின் சாயலிலேயே இருப்பதைப் பக்தர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அதனைக் கோவையின் அடையாளமாக மாநகர காவல்துறை இணையத்தில் பதிவேற்றியதை அம்பலப்படுத்தியிருந்தோம்.

சில தினங்களுக்கு முன்பு, அந்தச் சிலையை கோவையின் அடையாளமாகக் காட்டி, அனைத்து ரயில்களுக்குப் பின்னாலும் ஒட்டப்பட்டது. இது கோவையின் அடையாளம் கிடையாது. எனவே உடனடியாக அகற்ற வேண்டும் என சமூகநீதிக் கட்சியின் தலைவரும், வழக்கறிஞருமான பன்னீர்செல்வம் தலைமையில் போராட்டம் நடத்திய பிறகே, இந்தப் படங்கள் அகற்றப்பட்டன. ஆனால், கோவை மாநகரக் காவல்துறையின் இணையத்தள பக்கத்தில் இன்னமும் கோவையின் அடையாளமாக அந்தச் சிலைதான் உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வழக்கறிஞர் பன்னீர்செல்வம், “அரசின் முகமான காவல்துறையின் இணையத்தள முகப்பில், மத அமைப்புக்குச் சொந்தமான படத்தை கோவையின் அடையாளமாகக் காட்டியது கண்டனத்துக்குரியது. அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது.

ஒருவேளை ஈஷாவுக்குள் நடக்கும் எந்த முறைகேடுகளையும், வனங்களைச் சிதைப்பதையும் போலீசார் தட்டிக் கேட்க மாட்டார்கள் என்று உணர்த்தும் விதமாக இப்படிச் செய்தார்களா என்று தெரியவில்லை. வன வளங்களைச் சிதைக்கும் இந்தச் சிலையை அகற்றவேண்டி நாங்கள் போராடுகிறோம். இதனைத் தங்களது இணையத்தள பக்கத்திலிருந்து உடனடியாக காவல்துறை நீக்கவேண்டும். இல்லையென்றால் காவல்துறைக்கு எதிராக போராடவும் நாங்கள் தயங்க மாட்டோம் என்றார் கோபமான குரலில்.

சட்டத்திற்குப் புறம்பாக மத அடையாளத்தை அரசு இணையத்தளத்தில் பயன்படுத்தலாமா? எனக் கோவை மாநகர போலீசாரிடம் கேட்டோம். தவறுதலாக பதிவிடப்பட்டது. அகற்றிவிடுவோம் என்றார்கள். ஆனால், இப்போதுவரை அந்தப் படத்தை அகற்ற கோவை காவல்துறைக்கு மனம் வரவில்லை.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT