Skip to main content

சொகுசு கார் மோதி தரைமட்டமான பெருமாள் கோவில்! போலீஸ் தீவிர விசாரணை

Published on 26/12/2022 | Edited on 26/12/2022

 

Demolition of ancient Perumal temple in car accident coimbatore

 

 


சொகுசு கார் ஒன்று ஏற்படுத்திய விபத்தில் பழமையான பெருமாள் கோவில் இடிந்து விழுந்து தரைமட்டமானது. விபத்தை ஏற்படுத்திய அந்த சொகுசு கார் குறித்து, போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இது கோவையில் பரபரப்பை கிளப்பியுள்ளது. 

 

கோவை மாவட்டம், ஆலந்துறை பகுதிக்கு அருகே உள்ள செம்மேடு கிராமத்தில் பழமை வாய்ந்த பெருமாள் கோவில், பூண்டி சாலையில் இருக்கின்றது. இந்த பெருமாள் கோவில், ஆலந்துறை பகுதியில் மிகவும் பிரபலம் வாய்ந்தது. மேலும், இப்பகுதியைச் சேர்ந்த மக்கள் விசேஷ நாட்களில் இந்த பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

 

இந்நிலையில், கடந்த 23 ஆம் தேதியன்று இரவு, தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், சொகுசு கார் ஒன்றில் பூண்டி சாலையை நோக்கி பயணம் செய்துகொண்டிருந்தார்கள். அப்போது, அந்த சொகுசு கார் பெருமாள் கோவிலை நெருங்கியபோது, திடீரென நிலை தடுமாறி மோதியதில், பெருமாள் கோவிலின் சுவர் மற்றும் கருவறைகள் பெரிய அளவில் சேதமடைந்தது.

 

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர், உடனடியாக ஆலந்துறை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பிறகு, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இந்த விபத்துச் சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அந்தக் காரில் பயணம் செய்தவர்கள் யார்? என்றும், அவர்கள் மது போதையில் வாகனத்தை ஓட்டி வந்தனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்றும் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

போலீஸ் விசாரணையில், இந்த கார் விபத்து நள்ளிரவில் நடந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. மேலும், இதில் காயமடைந்தவர்கள், அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், பழமையான பெருமாள் கோவில், திடீரென இடித்து சேதப்படுத்தப்பட்ட சம்பவம், ஆலந்துறை பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
 

 

 

 

சார்ந்த செய்திகள்