Skip to main content

16ம் தேதி நல்ல தீர்ப்பு கிடைக்கும்!; எடப்பாடி நம்பிக்கை

Published on 14/05/2018 | Edited on 14/05/2018

 

edapadi

 

காவிரி மேலாண்மை வாரியம் குறித்த வழக்கில் வரும் 16ம் தேதி நல்ல தீர்ப்பு வரும் என்று நம்புவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று கூறினார்.

 

ஏற்காடு கோடை விழா மற்றும் மலர்க்கண்காட்சி துவக்க விழா, ரயில்வே மேம்பாலம் அடிக்கல் நாட்டு விழா, புதிய பாலம் திறப்பு விழா உள்ளிட்ட அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சொந்த மாவட்டமான சேலத்திற்கு வந்திருந்தார்.

 

இந்நிலையில், இன்று (மே 14, 2018) அவர் குடும்பத்துடன் திருப்பதி சென்று வழிபட திட்டமிட்டு இருந்தார். இதற்காக மனைவி மற்றும் குடும்பத்தினரை முன்னதாக திருப்பதிக்கு அனுப்பி வைத்தார். திருப்பதிக்குக் கிளம்பும் முன், அவருடைய வீட்டு முன்பு செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்ததாவது, ’’காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக மத்திய நீர்வளத்துறை செயலாளர் வரைவு திட்ட அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறார். அதில் பல்வேறு நல்ல அம்சங்கள் இருக்கின்றன. ஜெயலலிதாவின் சீரிய முயற்சியால் இன்று உச்ச நீதிமன்றத்தில் தமிழகத்திற்கு நல்லதொரு தீர்ப்பு கிடைக்க இருக்கிறது. வரும் 16ம் தேதி நல்ல தீர்ப்பு கிடைக்கும் என நம்புகிறோம். விவசாயிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.’’
 

சார்ந்த செய்திகள்

Next Story

அந்த ஒரு விஷயத்தில் அரசியல் தலைவர்கள் நல்லவர்களே!

Published on 09/07/2018 | Edited on 09/07/2018
acc min

 

 

 

சிவகாசியில் தனியார் மருத்துவமனை டாக்டர் ஒருவர் “ஒரு விஷயத்தில் மட்டும் அரசியல்வாதிகள் நல்லவர்களாக இருக்கிறார்கள்.” என்றார். ‘என்ன சொல்ல வர்றீங்க?’ என்று கேட்டபோது, “அரசியல் என்றாலே பொதுவாழ்க்கைதான்! எப்போதும் பயணித்தபடியே இருப்பார்கள். குறிப்பாக, சாலை மார்க்கத்தில் செல்லும்போது, மனிதாபிமானத்துடன் நடந்துகொள்கிறார்கள். விபத்து என்பது அடிக்கடி நடக்கிறது. செல்லும் வழியில்,  அப்படி ஒரு விபத்தை அரசியல்வாதிகள் பார்த்துவிட்டால், உடனே காரில் இருந்து இறங்கி, விபத்துக்கு ஆளானவர்களை மருத்துவமனைக்கு அனுப்புவது போன்ற காரியங்களைச் செய்துவிட்டுத்தான், அந்த இடத்திலிருந்து கிளம்புகிறார்கள். அரசியல்வாதிகள் குறித்து ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும், ஆபத்துக்கு உதவுகின்ற மனிதநேயத்தை நாம் பாராட்டியே ஆகவேண்டும்.” என்றார். 

 

 

 

அந்த சம்பவம் கற்றுத் தந்த பாடம்!

அந்த மருத்துவமனையின் மேலாளர் நம்மிடம் “சாலை விபத்துக்களால் பரிதவிப்போருக்கு அரசியல் தலைவர்கள் உதவுவதென்பது, காலம் காலமாக நடந்து வருவதுதான். ஆனாலும்,   2010-ல் நடந்த ஒரு சம்பவம்தான்,  அரசியல் தலைவர்கள் பலருக்கும் ஒரு பாடமாக அமைந்துவிட்டது.” என்றார். 

 

அது என்ன சம்பவம்?

 

vadakadu

 

 

 

திருநெல்வேலி மாவட்டம் – ஆழ்வார்குறிச்சி காவல்நிலைய சார்பு ஆய்வாளராக இருந்தார் வெற்றிவேல். அம்பை – தென்காசி சாலையில், ஆம்பூர் அருகே ஒரு கும்பல், வெற்றிவேலை அரிவாளால் வெட்டியும், வெடிகுண்டுகள் வீசியும் தாக்கிவிட்டுச் சென்றது. ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாகச் சென்ற அன்றைய திமுக அமைச்சர்கள் பன்னீர்செல்வம், மைதீன்கான், கலெக்டர் ஜெயராமன் மற்றும் காவல்துறை அதிகாரிகள், சாலையில் கிடந்து  வெற்றிவேல் துடிப்பதைக் கண்டு வாகனங்களை விட்டு இறங்கினர். ஆனாலும், தங்களது வாகனத்தில்  உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டுசெல்லவில்லை.

 

paa

 

108 ஆம்புலன்ஸுக்கு தகவல் சொல்லிவிட்டு, காத்திருந்தனர். ஆம்புலன்ஸ் வருவதற்கு தாமதமான நிலையில்,  20 நிமிடங்களுக்குப் பிறகே, அமைச்சரின் பாதுகாப்பு வாகனத்தில், பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு வெற்றிவேலைக் கொண்டு சென்றனர். சிகிச்சை பலனளிக்காமல் அவர் இறந்து போனார். அந்த சம்பவத்தை சேனல்கள் ஒளிபரப்பின. அந்தப் பதிவில்,  உதவுங்களேன் என்று கை நீட்டிய வெற்றிவேலுக்கு அமைச்சர்கள் உதவாமல் இருந்த காட்சியும் வெளியானது. கடும் விமர்சனங்கள் எழுந்தன. 

 

விபத்தில் சிக்கியவர்களுக்கு அரசியல் தலைவர்கள்  உதவிக்கரம் நீட்டிய சில சம்பவங்களைப் பார்ப்போம்! 

 

acci

 

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இயல்பாகவே மனிதநேயம் மிக்கவர். செல்லும் வழியில் சாலை விபத்தைக் காண நேரிட்டால், காரைவிட்டு இறங்கி, காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சேர்ப்பதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் அவரே முன்னின்று செய்வார். கடந்த மாதம், கோவை மதுக்கரை அருகில், பாலக்காடு நெடுஞ்சாலையில், அப்பளம் போல் நொறுங்கிக் கிடந்தது ஒரு கார். அதை ஓட்டி வந்த இளைஞரை ஆம்புலன்ஸில் ஏற்றிவிட்டு,  கோவை அரசு மருத்துவமனை இயக்குநரை தொடர்புகொண்ட வைகோ, தகுந்த சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 

 

கடந்த 1-ஆம் தேதி கிருஷ்ணகிரியிலிருந்து சென்னைக்கு காரில் வந்துகொண்டிருந்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. அப்போது வடசேரி பிரிவு அருகில், டூ வீலரில் வந்த ஒருவர், விபத்தில் சிக்கி காயமடைந்து கிடந்தார். காரிலிருந்து இறங்கிய முதலமைச்சர்,   அந்த நபரை மருத்துவமனையில் சேர்ப்பதற்கு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 

 

கடந்த மாதம், தொண்டாமுத்தூரிலிருந்து செல்வபுரத்துக்கு காரில் சென்று கொண்டிருந்த உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, பேரூர் எல்.ஐ.சி. காலனி அருகே, படுகாயமுற்று கிடந்த முதியவர் ஒருவருக்கு உதவினார். 

 

பெரவள்ளூர் பேப்பர் மில்ஸ் ரோடு வழியாக வீடு திரும்பிக் கொண்டிருந்தார் மு.க.ஸ்டாலின். அங்கே டூ வீலரில் சென்ற ஒருவர் விபத்தில் சிக்கி, காயங்களுடன் கிடந்ததைப் பார்த்தார். உடனே, தன்னுடன் வந்த தொண்டர்கள் உதவியுடன் அவரை ஆட்டோ ஒன்றில் ஏற்றி, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். 

 

 

 

தேனி மாவட்டத்தில் கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொண்ட கனிமொழி, விமானத்தைப் பிடிப்பதற்காக மதுரைக்கு புறப்பட்டார். அப்போது, சாலையில் சிலர் கூட்டமாக நின்றுகொண்டிருந்தனர். உடனே காரை நிறுத்தச் சொல்லிய கனிமொழி, அங்கு விபத்தில் அடிபட்டுக் கிடந்தவரை, திமுக மாவட்ட செயலாளர் ஒருவரின் காரில் ஏற்றி, மருத்துவமனையில் சேர்த்தார். 

 

யாராவது விபத்தில் சிக்கியதைப் பார்த்துவிட்டால், அந்த இடத்தை விட்டு நகரமாட்டார் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி. லக்னோ விமான நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தபோது, கபீர்பூர் என்ற இடத்தில் ஜெயந்த்சிங் என்ற இளைஞர் விபத்தில் சிக்கில், சாலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். உடனே, தன்னுடன் வந்த ஆம்புலன்ஸில் இருந்த டாக்டர்கள் மூலம் அவருக்கு முதலுதவி சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார். அதே ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தார்.   

 

சிவகாசி தனியார் மருத்துவமனையில், அரசியல் தலைவர்களின் உதவும் மனப்பான்மை குறித்த பேச்சு ஏன் வந்தது தெரியுமா?

 

siva

 

நேற்று (8-7-2018) சிவகாசி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பாக, வையாலிங்கம் என்ற முதியவரும் மனோஜ் என்ற இளைஞரும் விபத்தில் சிக்கினார்கள். அந்த வழியே காரில் சென்ற அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி,  அதிக அளவில் ரத்தம் வெளியேறி காயங்களுடன் கிடந்த மனோஜை உடனடியாக, போலீஸ் வாகனத்தில் ஏற்றி   தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். சொற்ப காயங்களோடு இருந்த வையாலிங்கத்தை சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். ஞாயிற்றுக்கிழமை என்பதால், அரசு மருத்துவமனையில் உடனடி சிகிச்சை கிடைக்காது என்பதாலேயே,  மனோஜை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பினார். மேலும்,  அந்த மருத்துவமனையின் டாக்டரை தொடர்புகொண்டு, “மனோஜுக்கு நல்லபடியாக சிகிச்சை அளியுங்கள். மருத்துவ செலவுக்கான பில்லை நான் செட்டில் செய்கிறேன்.” என்று கூறினார்.  ஆனையூர் ஊராட்சியில் வட்டார போக்குவரத்து அலுவலக  பூமி பூஜை நிகழ்ச்சியை  முடித்துவிட்டு, அங்கிருந்தபடியே தனியார் மருத்துவமனை சென்று, மனோஜுக்கு ஆறுதலும் கூறினார். 

 

 

 

வாக்காளர்களுக்கு ஒவ்வொரு நாளும் விபத்துதான்!

எங்கோ ஒரு இடத்தில், ஏதோ ஒரு நாள், விபத்தில் சிக்கியவருக்கு உதவும் நல்லுள்ளம் கொண்ட அனைத்து  அரசியல் தலைவர்களுக்கும் ஒரு வேண்டுகோள்! ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை வரும் பொதுத் தேர்தல் என்பது, நல்லாட்சி கனவு காணும் மக்களைப் பொருத்தமட்டிலும் விபத்தாகவே அமைந்துவிடுகிறது. இனிவரும் காலங்களிலாவது, வழக்கம் போல்,   தேர்தலை விபத்தாக்கி விடாமல் இருப்பது உங்கள் கைகளில்தான் இருக்கிறது! 

 

‘அட, இப்ப என்ன சொல்ல வர்றீங்க?’ என்று, கட்டுரையின் நோக்கம்   புரியாமல், கேள்வி கேட்பவர்கள் யாராவது இருந்தால், உடைத்தே சொல்லிவிடுகிறோம். அடிப்படையில், தனிப்பட்ட முறையில், அரசியல் தலைவர்கள் பலரும் நல்லவர்களே!  ஓட்டுக்கு பணம்,  ஊழலுக்காகவே ஆட்சி என்ற மோசமான நடைமுறை இனியும் தொடர வேண்டாம்! 


 

Next Story

ராணுவத்தளவாட உற்பத்திக் கேந்திரங்கள் தமிழ்நாட்டுக்கு நன்மை பயக்குமா? மக்களின் வாழ்வாதாரங்களும், உயிர்ப்பாதுகாப்பும் பணயமாக வைக்கப்படுகிறதா?

Published on 14/04/2018 | Edited on 14/04/2018
ex

 

 பா.ஜ. அரசு தமிழகத்தில் "தமிழகத்தில் "ராணுவ தளவாட உற்பத்தி கேந்திரங்கள்" அமைக்க நிதிநிலை அறிக்கையில் அறிவித்த கையோடு சென்னை "டிபென்ஸ் எக்ஸ்போ" நடத்துகிறது. உத்தேசிக்கப்பட்டுள்ள "ராணுவ தளவாட உற்பத்தி கேந்திரங்களை ’’பூவுலகின் நண்பர்கள்’’அமைப்பு முழுமையாக எதிர்க்கிறது. அது குறித்தான வழ. சுந்தர்ராஜனின் விரிவான அறிக்கை:

’’கடந்த 2017ம் ஆண்டிற்கான ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டில் ராணுவத்தளவாட உற்பத்திக் கேந்திரங்கள் அமைக்கப்படும் என்று ஒன்றிய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்திருந்தார். 

 

இந்நிலையில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழ்நாட்டில் போர்க்கப்பல் கட்டும் தளம் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும் பன்னாட்டு நிறுவனங்கள் பங்கேற்கும் ராணுவத்தளவாட கண்காட்சியை பிரதமர் மோடி துவங்கி வைத்துள்ளார். இந்நிகழ்வில் உரையாற்றிய பிரதமர், உலக நாடுகளுக்கு ராணுவத் தளவாடங்களை ஏற்றுமதி செய்யுமளவிற்கு இந்தியா முன்னேறி இருப்பதாகவும் இதற்காக தமிழ்நாட்டிலும், உத்தரப்பிரதேசத்திலும் ராணுவத்தளவாட உற்பத்திக் கேந்திரங்கள் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் பொருளாதார வளம் மேம்படுத்தப்படும், வேலை வாய்ப்புகள் உருவாகும் என்பது போன்ற கருத்துகளை பாரதிய ஜனதாக் கட்சியினர் ஊடகங்கள் மூலமாக பரப்பி வருகின்றனர். 


இந்த ராணுவத்தளவாட உற்பத்திக் கேந்திரங்கள் உண்மையிலேயே தமிழ்நாட்டுக்கு நன்மை பயக்குமா என்று சிந்தித்தால், அச்சம் ஏற்படுத்தக்கூடிய பல அம்சங்களே நமக்குத் தோன்றுகின்றன. 

 

ex1

 

இந்தக் கேந்திரத்தில் அமையும்  தொழிற்கூடங்களுக்கு, நியூட்ரினோ திட்டத்திற்கு வழங்கப்பட்டதுபோல தேசமுக்கியத்துவம் வாய்ந்த திட்டம் என்றுகூறி சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிமுறைகளிலிருந்து முழுமையான விதிவிலக்கு அளிக்கப்படும். இதைத்தொடர்ந்து மக்களுக்கு உரிமையான தண்ணீர் உள்ளிட்ட அனைத்து இயற்கை வளங்களும் இந்த நிறுவனங்களுக்கு எவ்விதமான கட்டுப்பாடும் இல்லாமல் வழங்கப்படும். அதேபோல இந்த தொழிற்கூடங்கள் வெளியேற்றும் கழிவுகளும் எவ்விதமான முறையான கட்டுப்பாடும் இல்லாமல் இந்நாட்டு நிலம், நீர், காற்று ஆகிய அனைத்தையும் மாசுபடுத்த சட்டபூர்வமான உரிமை வழங்கப்படும். இதனால் பாதிக்கப்படும் மக்களுக்குத் தேவையான சட்டபூர்வமான பாதுகாப்போ, நிவாரணங்களோ இருக்காது. இந்த ராணுவத்தளவாட உற்பத்தித் தொழிற்சாலைகள் ஏற்படுத்தும் சூழல்சீர்கேடுகள் கடும் பிரச்சினைகளை ஏற்படுத்தினாலும்கூட அவற்றின் உரிமையாளர்கள் தண்டிக்கப்பட மாட்டார்கள். அவர்கள் வெளிநாட்டுக்காரர்களாக இருந்தால் பாதுகாப்பாக விமானம் ஏற்றி அவர்களுடைய சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். 

 

இந்த ராணுவத்தளவாட உற்பத்தி கேந்திரங்களுக்கும், சிறப்புப் பொருளாதார மண்டலங்களைப் போலவோ அல்லது அதைவிட அதிகமான சலுகைகளோ வழங்கப்படும். இந்த தொழிற்சாலைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு தேவையான பணியாளர் பாதுகாப்புச் சட்டங்கள் ரத்து செய்யப்படும். இந்த ராணுவத் தளவாட உற்பத்தி தொழிற்சாலைகள் குறித்த விவரங்கள் மக்களுக்கோ, ஊடகங்களுக்கோ தெரிவிக்காமல் மறைக்கும் நிலை ஏற்படுத்தப்படும். 

 

இந்த ராணுவத்தளவாட உற்பத்திக் கேந்திரங்கள் அமையும் இடங்கள் அனைத்தும் உயர்பாதுகாப்பு மண்டலங்களாக அறிவிக்கப்படும். மத்திய தொழிற்பாதுகாப்புப்படையின் கட்டுப்பாட்டில் இந்த பிரதேசம் முழுமையாக ஒப்படைக்கப்படும். இப்பகுதியில் பொதுமக்கள் நடமாடுவதற்கு தடை விதிக்கப்படும். கால்நடைகள் உள்ளிட்டவைகூட அப்பகுதியில் நடமாடுவது தடைசெய்யப்படும். இத்தடையை மீறி அப்பகுதியில் நுழையும் கால்நடைகள் பறிமுதல் செய்யப்பட்டு, அவற்றின் உரிமையாளர்களுக்கு தண்டனை வழங்கப்படும் நிலை ஏற்படும். 

 

இன்றைய இந்திய, பன்னாட்டு அரசியல் சூழலில் போர்கள் ஏற்படுவதற்கு வாய்ப்பு இல்லை என்ற உறுதி கூறி முடியாது. அவ்வாறு போர்களுக்கு வாய்ப்பு இல்லாத நிலை இருந்தால் ராணுவத்தளவாட உற்பத்திக் கேந்திரங்களுக்கு அவசியம் இருக்காது. இந்நிலையில் உலகின் எந்த நாட்டிலாவது போர் ஏற்பட்டால், அந்த நாட்டிற்கு ராணுவத்தளவாடங்களை ஏற்றுமதி செய்யும் இந்தியா மீதும் தாக்குதல் நடப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. மேலும் ராணுவத்தளவாட உற்பத்திக் கேந்திரங்களும், அணுஉலைகளும் நிறைந்திருக்கிற தமிழ்நாட்டின் மீது எவ்விதமான போர் நடவடிக்கைகளும் இருக்காது என்ற உறுதிகூற முடியுமா? இந்தியாவின் வடக்கே இருக்கும் பாகிஸ்தானும், தெற்கே இருக்கும் இலங்கையும் எப்போதும் அமைதியாக இருக்கும் என்று சொல்லமுடியாது. ஏனெனில் இந்த இருநாடுகளுமே இந்தியாவைவிட சீனாவை நட்புநாடுகளாகக் கொண்டுள்ளன. இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகம் முற்றிலுமாக சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளது நமது பாதுகாப்பை கேள்விக்கு உட்படுத்தும் அம்சமாகும். இந்நிலையில் எங்கு "போர் மேகம்" உருவானாலும் அதனால் பெய்யப்போகும் "அமில மழை" பெய்ய ராணுவத்தளவாட உற்பத்திக் கேந்திரமாக இருக்கும் தமிழ்நாடாக இருப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. 

 

ராணுவத்தளவாட உற்பத்தித் தொழிற்சாலைகளின் உரிமையாளர்களும், தரகர்களும், அரசியல்வாதிகளும் லாபம் ஈட்டுவதற்காக தமிழ்நாட்டு மக்களின் பாதுகாப்பை கேள்விக்கு உட்படுத்த வேண்டுமா?

 

இதையெல்லாம்விட முக்கியமான அம்சம் ஒன்று உள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமான ரிலையன்ஸ், ராணுவத்தளவாடம் மற்றும் போர்க்கப்பல் ஆகியவற்றை உற்பத்தி செய்வதற்காக சில நிறுவனங்களை உருவாக்கியுள்ளது. பிரான்ஸ் நாட்டிடமிருந்து இந்தியா வாங்கிய ரஃபேல் விமானங்கள் குறித்த சர்ச்சை உங்களுக்கு தெரிந்திருக்கும். இதற்கான ஒப்பந்தத்தின்படி இந்த ரஃபேல் விமானங்களுக்கான உதிரிபாகங்களில் குறிப்பிட்ட சதவீதத்தை இந்தியாவில் தயாரிக்க வேண்டும் மற்றும் அந்த தொழிநுட்பத்தை பரிமாற்றம் (Technology Transfer) செய்ய வேண்டும். இந்தியா சார்பில் ரஃபேல் விமானத்தின் தயாரிப்புக்கான இந்த உரிமையை பெற்றிருப்பது ரிலையனஸ் நிறுவனம். இவ்வாறு உள்நாட்டு மற்றும் பன்னாட்டு வர்த்தக நிறுவனங்களின் லாபநோக்கிற்காக தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதாரங்களும், உயிர்ப்பாதுகாப்பும் பணயமாக வைக்கப்படுகிறது. 

 

தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதாரங்கள் திட்டமிட்டு அழித்து மோடி தலைமையிலான ஒன்றிய அரசு, தமிழ்நாட்டை ஒரு முழுமையான ராணுவத்தளவாட உற்பத்திக் கேந்திரமாக மாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் இதன் அரசியலை உணர்ந்து இதற்கு உரிய எதிர்வினையாற்ற வேண்டியது தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்கள், மக்கள் உள்ளிட்ட அனைவரது கடமையாகும். உண்மையான நாட்டின் வளர்ச்சி ராணுவத்தின் வளர்ச்சியில் இல்லை, அந்த மக்களின் அடிப்படை ஆதாரங்கள் பாதுகாக்கப்படுவது மட்டுமே நீடித்துநிலைக்கக்கூடிய வளர்ச்சியாகும்.


 
"யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்று சர்வதேசிய சமத்துவம் பேசிய இந்த மண், மனிதர்களை அழிக்கக்கூடிய எந்த ராணுவத்தளவாட உற்பத்தியையும் ஏற்றுக்கொள்ளாது. நாங்கள் அமைதியை விருப்புகிறவர்கள், அமைதிக்கான அடையாளமாக இருக்கிறோம், அப்படியே இருந்துவிட்டு போகிறோம்.’’