All religious worship; Honor to architects; Parliament Inauguration Events

தற்போது செயல்பட்டு வரும் நாடாளுமன்றக் கட்டடம் 96 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர்களால் 1927 ஆம் வருடம் கட்டி முடிக்கப்பட்டது. இந்நிலையில் நாடாளுமன்றக் கட்டடத்தின் கட்டுமானம், பாதுகாப்பு வசதிகள் குறைவு மற்றும் இட வசதி குறைவு காரணமாக புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கைகள் பல ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த நிலையில் புதிய கட்டடம் கட்டுவதற்கான திட்டத்திற்கு பிரதமர் மோடி கடந்த 2020 டிசம்பர் 10 ஆம் தேதி அடிக்கல் நாட்டினார்.

Advertisment

கட்டுமானப் பணிகள் முடிந்த நிலையில் புதிய நாடாளுமன்றக் கட்டடம் சவார்க்கர் பிறந்த தினமான இன்று (மே28) பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டது. பிரதமர் மோடி நாடாளுமன்றக் கட்டடத்தைத் திறந்து வைப்பதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்யப்பட்டது. புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை ஜனாதிபதி திறந்து வைக்க ஆணையிடக் கோரியும் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை திறக்க ஜனாதிபதியை அழைக்காததின் மூலம் அரசியல் சட்டத்தை மக்களவைச் செயலகம் மீறி விட்டதாகவும் அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் நரசிம்ஹா, மகேஸ்வரி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘புதிய நாடாளுமன்றக் கட்டட திறப்பு விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை’ எனச் சொல்லி வழக்கை தள்ளுபடி செய்தனர். அதேபோல், மனுதாரர் தான் தாக்கல் செய்த மனுவை திரும்பப் பெற்றார்.

Advertisment

இதனைத் தொடர்ந்து திறப்பு விழாவில் பங்கேற்பதாக 25 கட்சிகளும் திறப்பு விழாவை புறக்கணிப்பதாக 20 கட்சிகளும் அறிவித்தன. இந்நிலையில் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா முன்னிலையில், பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். சபாநாயகர் இருக்கை அருகே செங்கோலையும் நிறுவினார். கட்டடம் திறக்கப்பட்டதை அடுத்து, அங்கு அனைத்து மத குருமார்களின் முன்னிலையில் வழிபாடுகள் நடத்தப்பட்டது.மேலும் புதிய நாடாளுமன்றக் கட்டடப் பணியில் ஈடுபட்டவர்களுக்கு பிரதமர் மோடி சால்வை அணிவித்து கௌரவித்தார்.