ADVERTISEMENT

ஓபிஎஸ் தரப்பில் பதிவான நான்கு வழக்குகள்; அனைத்திலும் வைக்கப்பட்ட வாதங்கள் என்ன?

03:26 PM Mar 22, 2023 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான தேதி கடந்த வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டு, சனிக்கிழமை இ.பி.எஸ். மனுத்தாக்கல் செய்தார். இ.பி.எஸ். மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ததால் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்ததும் அவர் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்படுவார் எனச் சொல்லப்பட்டது. இந்நிலையில், ‘அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும். இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்’ என சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு நீதிபதி முன்னிலையில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர், ஆர்.வைத்திலிங்கம் ஆகிய மூன்று பேர் சார்பிலும் தனித்தனியாக முறையீடு செய்யப்பட்டது.

இதனையடுத்து, பொறுப்பு நீதிபதி இந்த வழக்கை நீதிபதி குமரேஷ் பாபு விசாரிக்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து அவர் முன்னிலையில் முறையீடு செய்யப்பட்டது. அதனையேற்ற நீதிபதி குமரேஷ் பாபு இதை அவசர வழக்காக ஏற்று விசாரிப்பதாகத் தெரிவித்தார். விசாரணையில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி குமரேஷ்பாபு “தீர்மானம் தொடர்பான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த என்ன அவசியம்? பொதுச்செயலாளர் தேர்தலை நிறுத்த விரும்பவில்லை. அதிமுக பொதுச்செயலாளர் தொடர்பான வழக்கு மற்றும் பொதுக்குழு தொடர்பான வழக்கை வரும் 22ம் தேதி விசாரிக்கிறேன். அன்று தெலுங்கு வருடப் பிறப்பின் காரணமாக நீதிமன்றத்திற்கு விடுமுறை தான் என்றாலும், உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியிடம் அனுமதி வாங்கி அன்று முழுவதும் வழக்கை விசாரித்து 24ம் தேதி தீர்ப்பு வழங்குகிறேன். அதுவரை தேர்தல் நடைமுறையான வேட்புமனுத் தாக்கல், பரிசீலனை உள்ளிட்டவற்றை தொடரலாம். ஆனால், முடிவுகளை வெளியிடக்கூடாது” என்று உத்தரவிட்டார்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு முதலில் தங்களது தரப்பு வாதங்களை முன் வைத்தது. அதில், கட்சியின் உறுப்பினர்கள் பட்டியலை வெளியிட்டு பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட அனுமதித்தால் வழக்கை திரும்பப்பெறத் தயார். பொதுச்செயலாளர் பதவிக்காக போட்டியிடுவதற்கான நிபந்தனைகளை நீக்கினால் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடத் தயார் என்றும், தொண்டர்கள் முடிவெடுக்கட்டும் என வாதம் முன்வைக்கப்பட்டது. மக்களும் கட்சியினரும் விரும்புகின்றனர் எனக்கூறி பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வருகின்றனர். அதற்கு எந்த புள்ளிவிவரங்களும் இல்லை. பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வர கட்சியினர் இடையே எந்த கருத்துக்கணிப்பும் நடத்தவில்லை என ஓபிஎஸ் தரப்பில் இருந்து வாதங்கள் எடுத்து வைக்கப்பட்டன. அதிமுகவின் நிரந்தரப் பொதுச்செயலாளர் ஜெயலலிதாதான் என்று வாதங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் தற்போது ஓபிஎஸ் தரப்பினரால் வைக்கப்படும் வாதம் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து தங்களது வாதங்களை வைத்த முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மணி சங்கர், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதி ஆகிவிட்டது என்ற கேள்விக்கே இடமில்லை. முதலில் இரு பதவிகளையும் நிரப்பிய பிறகே ஒற்றைத் தலைமை குறித்து முடிவெடுக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.

ஜே.சி.டி. பிரபாகர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஸ்ரீராம், கட்சியில் இருந்து நீக்கும் முன் உரிய நடவடிக்கைகள் பின்பற்றப்படவில்லை. கட்சியில் இருந்து நீக்கும் முன் உரிய விளக்கமும் நோட்டீஸூம் அளிக்கப்படவில்லை. விளக்கமளிக்க அவகாசம் அளிக்கவில்லை. உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த 15 நாட்களுக்குள் உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளதால் நாங்கள் நீதிமன்றத்தை அணுகியதில் எந்த தாமதமும் இல்லை என வாதிடப்பட்டது. மேலும், ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது கட்சி விதிகளுக்கு எதிரானது என வாதிடப்பட்டது.

பொதுக்குழுவில் கட்சி நிர்வாகிகள் நீக்கப்பட்ட தீர்மானங்கள் உட்பட அனைத்து தீர்மானமும் கட்சியின் சட்ட விதியை பின்பற்றாமல் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் என்பதால் அந்த தீர்மானங்கள் அனைத்திற்கும் தடை விதிக்க வேண்டும் என்பதே ஓபிஎஸ் மற்றும் அவர்களது ஆதரவாளர்களான மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர், வைத்திலிங்கம் ஆகியோரது வாதமாக இருந்தது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT