
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் மறுபுறம் அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு தேர்தல் களத்தில் அதிமுகவை பின்னடையச் செய்துள்ளதாகப் பேச்சுக்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் அதிமுகவின் நிலை குறித்து தமிழக அமைச்சர் மனோ தங்கராஜிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''முதலில் இந்த இரண்டு பேரையும் பிரித்து வைத்திருப்பது யார் என்று பார்க்க வேண்டும். இரண்டு பேரையும் பிரித்து வைத்திருப்பது பாஜக தான். ஊரு ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பார்கள். அதுபோல் இவர்கள் இரண்டு பேரையும் பிரித்து அவர்கள் குளிர் காய்ந்து கொண்டிருக்கிறார்கள். அண்ணாவின் பெயரைத் தாங்கிக் கொண்டிருக்கின்ற ஒரு கட்சி, அவர்களுக்கு பிரச்சனை வருகின்ற நேரமெல்லாம் ஆரியர் கூட்டத்தைத் தேடிச் செல்வதும், வடநாட்டவர்கள் ஆதிக்கம் செலுத்துகின்ற கட்சியில் உதவி கேட்பது என்பதும் அவர்களுடைய இயலாமையைக் காட்டுகிறது. இது மிகவும் வருத்தம் அடையக்கூடிய விஷயம். மொத்தத்தில் இன்றைய தினம் அதிமுக முறையான தலைமை இல்லாமல் இருக்கிறது. கடந்த காலங்களில் திராவிட கொள்கைகளை அவர்கள் முறையாக கையாளாமல் இன்று தலைமையும் இல்லை, கொள்கையும் இல்லை. எந்த இலக்கும் இல்லாமல் தடுமாறிக் கொண்டிருக்கக் கூடிய சூழல் இருக்கிறது'' என்றார்.
பிபிசி ஆவணப்படம் குறித்த கேள்விக்கு, ''இது குறித்த உண்மை என்ன என்பதை பொதுமக்கள் தெரிந்து கொள்வதில் என்ன தவறு இருக்கிறது. விவாதத்திற்கு இதை விட்டுவிட்டு அரசும், அரசு சார்ந்த கட்டமைப்புகளும் பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அதுதான் முறையான ஜனநாயகம். ஆனால் பேசவே விட மாட்டேன் என்று சொன்னால் அவர்கள் முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போன்ற செயலாக இருக்கிறது'' என்றார்.
..