Skip to main content

"கலவரம் வர வேண்டுமென்று முதலமைச்சர் ஆசைப்படுகிறாரா?" - ஈஸ்வரன் கேள்வி

Published on 15/12/2020 | Edited on 15/12/2020
E.R.Eswaran

 

முதல்வர் பழனிசாமியின் அறிவிப்புக்கு பின்னர் வேளாளர் சாதிப் பெயர் கொண்ட சமுதாயங்களின் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகிறது. சாதி கலவரமாக மாறுவதற்கு முன் முதலமைச்சர் தலையிட்டுத் தீர்வு காண வேண்டும் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கூறியுள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏழு சமுதாயங்களை ஒன்றிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என்ற பெயர் கொண்டு அழைப்பதற்கு முதலமைச்சர் பரிந்துரைப்பதாக அறிவித்த நாளிலிருந்து தமிழகத்தில் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது. தொன்று தொட்டு வேளாளர் பெயர் கொண்ட மற்ற சமுதாயங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருந்த நிலையில் அனைத்து தரப்பினரையும் தமிழக முதலமைச்சர் அழைத்துப் பேசாமல் எடுத்த முடிவின் விளைவு ஆங்காங்கே தென்பட ஆரம்பித்திருக்கிறது. 

 

தமிழக முதலமைச்சரின் பரிந்துரைக்கு எதிர்ப்பு தெரிவித்து வேளாளர்கள் நடத்தும் போராட்டமானது உணர்வுப் பூர்வமானது. தமிழகமெங்கும் உள்ள வேளாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராட்டத்தை முன்னெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி நடத்தும் போராட்டங்களில் காவல்துறையைக் கொண்டு அதிகார அத்துமீறல்களையும் தமிழக அரசு நடத்தியிருக்கிறது. 

 

வேளாளர்களின் போராட்டம் அனைத்து பகுதிகளிலும் தீவிரமடைந்து வரும் நிலையில் இரு தரப்பினர்களுக்கும் இடையே கார் கண்ணாடி உடைப்பு சம்பவங்களால் மோதல் போக்கு ஏற்படும் நிலை உருவாகியிருக்கிறது. இந்த சூழல் தொடருமானால் தமிழகத்தில் மிகப்பெரிய சாதி  கலவரம்  வெடிக்க வாய்ப்பிருக்கிறது. 

 

வேளாளர் பெயர் பிரச்சினையில் சுமூகமான தீர்வையே  வேளாளர் பெயர் கொண்ட சமுதாய இயக்கங்கள் விரும்புகிறது. தங்கள் தரப்பு நியாயங்களைச் சொல்ல வேளாளர் சமுதாய இயக்கங்கள் ஒன்றிணைந்து தமிழக முதலமைச்சரை நேரில் சந்திக்க நேரம் கேட்டு கடந்த டிசம்பர் 10-ஆம் தேதி கடிதம் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் தமிழக முதலமைச்சர் இதுவரை வேளாளர் சமுதாய இயக்கங்களுக்கு நேரம் ஒதுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். 

 

இந்த தாமதத்தின் மூலம் இருதரப்புக்கும் மோதல் ஏற்பட்டு தமிழகத்தில் சாதி கலவரம் வர வேண்டுமென்று முதலமைச்சர் ஆசைப்படுகிறாரா? என்ற சந்தேகம் எழுகிறது. எனவே தமிழக முதலமைச்சர் வேளாளர் பெயர் பிரச்சினையின் வீரியத்தைப் புரிந்து கொண்டு உடனடியாக வேளாளர் சமுதாய இயக்கங்களை அழைத்து பேச்சுவார்த்தையின் மூலம் இந்த பிரச்சினைக்குத் தீர்வு காண முன்வர வேண்டும் எனக் கூறியுள்ளார். 
 

 

 

சார்ந்த செய்திகள்