ADVERTISEMENT

ஓபிஎஸ்க்கு கடிதம் போட்ட இபிஎஸ் தரப்பு

10:37 AM Feb 05, 2023 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், வேட்பாளர்களை அறிவித்தும் தள்ளாடி வருகிறது அதிமுக. எடப்பாடி அணி, ஓபிஎஸ் அணி எனப் பிரிந்து கிடக்கும் சூழ்நிலையில் பொதுக்குழு தொடர்பான வழக்கில் இபிஎஸ் தாக்கல் செய்திருந்த இடையீட்டு மனு மீது இரு தினங்கள் முன்பு தேர்தல் ஆணையம் பதிலளித்திருந்தது.

தொடர்ந்து நேற்று முன் தினம் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதில் தீர்ப்பளித்த நீதிபதிகள், “'ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வேட்பாளரை முன்னிறுத்துவதற்கான இடைக்கால ஏற்பாடாக ‘ஓபிஎஸ் தரப்பினரையும்’ உள்ளடக்கிய பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும். இது இடைக்கால ஏற்பாடு மட்டும் தான். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு மட்டுமே. பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பில் இந்த இடைக்கால உத்தரவு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.” எனக் கூறினர். இந்நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளராக தென்னரசு தேர்வு செய்யப்பட்டதற்கான ஒப்புதல் சுற்றறிக்கை படிவம் அதிமுக தலைமை அலுவலகத்தில் விநியோகம் செய்யப்பட்டது.

இந்த சுற்றறிக்கை படிவம் தங்களுக்கு இன்னும் வந்து சேரவில்லை என ஓபிஎஸ் தரப்பினர் நேற்று மாலை செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது, “இபிஎஸ் வகிக்கும் பொறுப்பை உச்சநீதிமன்றமும் அங்கீகரிக்கவில்லை. இந்த இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் வெற்றி பெற நானும் என் மீது பற்று கொண்ட அதிமுக தொண்டர்களும் பாடுபடுவோம் என்று ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். இரட்டை இலை சின்னத்தில் யார் நின்றாலும் அவர்களை ஆதரிக்கிறோம். பொதுக்குழு நியமிக்கும் வேட்பாளர் தான். ஆனால் அது குறித்து இன்னும் விவாதிக்கப்படவில்லை. அதற்கான அவகாசம் இன்னும் இருக்கிறது. வேட்பாளர் படிவத்தில் தென்னரசு என குறிப்பிடப்பட்டு இருப்பதாக சொல்கிறார்கள். அந்த படிவங்கள் இன்னும் வரவில்லை. நேரம் இல்லாததால் அறிக்கை வழியாக முடிவெடுக்க இருப்பதாக கேள்விப்பட்டோம். படிவங்கள் முதலில் வரட்டும். இடைத்தேர்தலில் எங்கள் வேட்பாளர் போட்டியா இல்லையா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். பொதுக்குழு முடிவெடுத்து அனுப்பிய பின் தான் இது குறித்து கூற வேண்டும்” எனக் கூறியிருந்தனர்.

இந்நிலையில் தற்போது பன்னீர்செல்வம் தரப்புக்கு படிவம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி. பிரபாகர் ஆகியோருக்கு படிவம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அப்படிவத்தில், ‘எடப்பாடி பழனிசாமி வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ தென்னரசுவை முன்மொழிந்துள்ளார். அவரை தேர்ந்தெடுக்க சம்மதம் எனில் ஒப்புதல் அளிக்கிறேன் என்றும் இணைக்கப்பட்டுள்ள வாக்குச்சீட்டில் வாக்களிக்க வேண்டும். வேறொரு வேட்பாளரை தேர்ந்தெடுக்க விருப்பம் இருந்தால் வாக்குச்சீட்டில் குறிப்பிட்ட இடத்தில் தெரிவித்து அதை 5.02.2023 அன்று இரவு 7 மணிக்குள் தலைமைக் கழகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT