
அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் உடனான கூட்டத்தில் பங்கேற்க அ.தி.மு.க. அலுவலகத்திற்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.
வரும் ஆகஸ்ட் 1- ஆம் தேதி திங்கள்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கூட்டம் நடைபெறவுள்ளது. தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம் மற்றும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் அட்டை இணைப்பு உள்ளிட்டவைத் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்படவுள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க.வின் தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகைக்கு கடிதம் அனுப்பியது தேர்தல் ஆணையம்.
அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இரண்டு அணிகளாக பிரிந்திருக்கும் நிலையில், அதன் சார்பில் யார் கலந்து கொள்வார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதனிடையே, தேர்தல் அதிகாரி தலைமையிலான கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி அணி சார்பில், பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் இன்பதுரை ஆகியோர் பங்கேற்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.