ADVERTISEMENT

வைரலாகும் வீடியோ... “நான் போலீசை தாக்கினேனா?” - வாகை சந்திரசேகர் ஆவேசம்!

10:27 AM Jun 29, 2020 | rajavel

ADVERTISEMENT

சுங்கச்சாவடியில் பணியில் இருந்த காவல்துறை அதிகாரியை மரியாதை குறைவாக பேசியதோடு, காவல்துறை அதிகாரியை தள்ளிவிடுகிறார் முன்னாள் எம்.பி. அர்ஜுனன். பதிலுக்கு காவல்துறை அதிகாரியும் அர்ஜுனனை தள்ளிவிடுகிறார். பின்னர் கோபமடைந்த அந்த அர்ஜுனன், காவல்துறை அதிகாரியை காலால் எட்டி உதைத்து தாக்கிய வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. இந்த வீடியோவில் காவல்துறையினரை மரியாதை குறைவாக பேசி, தாக்கியது 'நடிகர் வாகை சந்திரசேகர்' என பதிவிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அந்த வீடியோவுக்குக் கீழே, ''இந்தப் பதிவை போட்டவர் சந்திரசேகரை பார்க்கவில்லை. தி.மு.க.வை குற்றம் சொல்லும் நோக்கம் மட்டுமே இருக்கிறது என்றும் அது சந்திரசேகர் கிடையாது, தற்போது அவரது முகத்தையும், குரலையும் தமிழ் மக்கள் நன்றாக அறிவர், அது தெரிந்தும் இங்கு சிலர் ஒன்னும் தெரியாது போல் தி.மு.க.-வை திட்டி வருகிறார்கள். இது நாட்டுப் பற்று அல்ல. தி.மு.க. மீது உள்ள பகை'' என வாகை சந்திரசேகருக்கு ஆதரவாக பலர் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

மேலும், ''போலீஸ் இந்த மாதிரி ஆட்களை ஸ்டேஷனுக்கு ஏன் கொண்டுபோகவில்லை. இதே ஏழை எளிய மக்களாக இருந்தால் வேறு முறையில் இறங்கி இருப்பார்கள். போலீஸ்களுக்கு இது தேவைதான் ஒரு ஏப்பை சப்பை கிடைத்தால் எவ்வளவு ரவுடித்தனம் பண்ணுகிறீர்கள். இருந்தாலும் சட்டத்தை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கணும்'' என்றும் ''வீடியோவில் இருப்பது அ.தி.மு.க.-வின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜூனன்'' என்றும் பதிவுகள் நீண்டு கொண்டே போகிறது.

இதுதொடர்பாக நாம் நடிகர் வாகை சந்திரசேகரை தொடர்பு கொண்டபோது, “கரோனா வைரஸ் தொற்றால் மக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர். வேலை வாய்ப்பு இல்லாமல், குடும்பத்தை நடத்த வருமானம் இல்லாமல் அதிலிருந்து மீண்டு வர மக்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள். சாத்தான்குளம் சம்பவம் மனதை விட்டு நீங்காமல் உள்ளது. ஜெயராஜ் மனைவியும், பென்னிக்ஸ் தாயாருமான செல்வராணி, ஜெயராஜ் மகளின் அழுகுரல் இன்னும் மனதை விட்டு நீங்கவில்லை.

இதுபோன்ற அதிர்ச்சியான சம்பவங்களால் மக்கள் வேதனையில் இருக்கும்போது, இதனை ஒரு செய்தியாக ஆக்க நான் விரும்பவில்லை. என்னை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். என்னுடைய தொகுதியான வேளச்சேரி மக்கள் நன்கு அறிவார்கள். 40 ஆண்டுகாலமாக கலைத் துறையில் இருக்கிறேன். அரசியலில் தி.மு.க.-வில் இணைந்து ஒரே இயக்கத்தில் பணியாற்றி வருகிறேன். இதுபோன்ற செய்திகள், போலிப் பதிவுகள் என்னுடைய கலை வாழ்க்கையை, பொதுவாழ்க்கையை நிச்சயம் பாதிக்காது.

தி.மு.க. மீது இருக்கும் நல்ல பெயரை கெடுக்க இதுபோன்ற அவதூறுகளை சிலர் தொடர்ந்து பரப்புகிறார்கள். தி.மு.க. தலைவரும், தி.மு.க.-வினரும் சிறப்பாக பணியாற்றுவது அவர்களுக்கு பொறுக்கவில்லை. அரசியலில் நாகரீகமாக கருத்து தெரிவித்து, அதற்கு எதிர்க்கருத்துத் தெரிவித்து மோத வேண்டும். அதைவிட்டுவிட்டு இதுபோன்ற அவதூறுகளை பரப்பி தி.மு.க.-வுக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்று நினைக்கக்கூடாது. இது எனக்கு ஏற்பட்ட அவமானமாக பார்க்க மாட்டேன். தி.மு.க.-வை இழிவுப்படுத்தும் நோக்கில் செய்துள்ளார்கள். ஆகையால் தி.மு.க. தலைவரிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். நாங்கள் இதனை சட்டப்படி சந்திக்க உள்ளோம்” என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT