ADVERTISEMENT

உத்தரகாண்ட் சுரங்க விபத்து; மீட்புப் பணி மீண்டும் தொடக்கம்

03:18 PM Nov 26, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி அருகே உள்ள சில்க்யாரா என்ற பகுதியில் அமைந்துள்ள யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கம் தோண்டும் பணி நடைபெற்று வந்தது. இந்த சூழலில் கடந்த 12 ஆம் தேதி (12/11/2023) காலை வழக்கம்போல் தொழிலாளர்கள் சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென எதிர்பாராத விதமாகச் சுரங்கப்பாதை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பணியில் இருந்த 41 தொழிலாளர்கள் சுரங்கத்தின் உள்ளே சிக்கினர். சுமார் 4.5 கி.மீ. நீளமுள்ள சுரங்கப் பாதையில் 150 மீட்டர் இடிந்து விழுந்து இந்த விபத்து நிகழ்ந்தது.

மீட்புப் பணிகளில் 15வது நாளாகத் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படைகள், தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர். சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்க சுரங்கத்தைத் துளையிடும் பணியின்போது ஆகர் இயந்திரத்தைத் தாங்கிக் கொண்டிருந்த கான்கிரீட் தளம் சேதமடைந்ததால் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டது. மேலும் துளையிடும் பகுதியில் இரும்புக் கம்பி இருப்பதால் துளையிடுவதில் சிக்கல் ஏற்பட்டு மீட்புப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

இந்நிலையில், மீட்புக் குழுவினர் ஆகர் இயந்திரத்தைக் கொண்டு துளையிடும் பணியில் தொடர்ந்து இடையூறு ஏற்பட்டுக் கொண்டே இருப்பதால், மாற்று வழியில் தொழிலாளர்களை மீட்பது குறித்து மீட்புக் குழுவினர் ஆலோசனை மேற்கொண்டனர். அதன்படி சுரங்கப்பாதை உள்ள மலையின் மேலே இருந்து கீழ்ப்பகுதி வரை செங்குத்தாகத் துளையிட்டு தொழிலாளர்களை மீட்கும் பணி மீண்டும் தொடங்கியுள்ளது. மலை மேலிருந்து இதுவரை 8 மீட்டர் வரை துளையிடப்பட்டுள்ளது என மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். அதே சமயத்தில் ஆகர் இயந்திரத்தின் பிளேடுகளை அகற்றும் பணிகள் மறுபுறம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT