Skip to main content

உத்தரகாண்ட் சுரங்க விபத்து; மீட்புக் குழுவினர் தீவிர ஆலோசனை

Published on 25/11/2023 | Edited on 25/11/2023

 

Uttarakhand mine incident Rescue crews are strongly advised

 

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி அருகே உள்ள சில்க்யாரா என்ற பகுதியில் அமைந்துள்ள யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கம் தோண்டும் பணி நடைபெற்று வந்தது. இந்த சூழலில் கடந்த 12 ஆம் தேதி (12/11/2023) காலை வழக்கம்போல் தொழிலாளர்கள் சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென எதிர்பாராத விதமாகச் சுரங்கப்பாதை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பணியில் இருந்த 41 தொழிலாளர்கள் சுரங்கத்தின் உள்ளே சிக்கினர். சுமார் 4.5 கி.மீ. நீளமுள்ள சுரங்கப் பாதையில் 150 மீட்டர் இடிந்து விழுந்து இந்த விபத்து நிகழ்ந்தது.

 

மீட்புப் பணிகளில் 14வது நாளாகத் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படைகள், தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர். சுரங்கப்பாதை விபத்தில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களைப் பாதுகாப்பாக வெளியேற்றும் முயற்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும், சுரங்கப் பாதையில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களும் நேற்று முன்தினம் பிற்பகலுக்குள் மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்க சுரங்கத்தைத் துளையிடும் பணியின்போது ஆகர் இயந்திரத்தைத் தாங்கிக் கொண்டிருந்த கான்கிரீட் தளம் சேதமடைந்ததால் மீட்புப் பணியில் மீண்டும் தொய்வு ஏற்பட்டது. துளையிடும் பகுதியில் இரும்புக் கம்பி இருப்பதால் துளையிடுவதில் சிக்கல் ஏற்பட்டு மீட்புப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

 

இந்நிலையில் மீட்புக் குழுவினர் சுரங்கப் பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மாற்று வழியில் மீட்கத் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். ஆகர் இயந்திரத்தைக் கொண்டு துளையிடும் பணியில் தொடர்ந்து இடையூறு ஏற்பட்டுக் கொண்டே இருப்பதால், மாற்று வழியில் தொழிலாளர்களை மீட்பது குறித்து மீட்புக் குழுவினர் ஆலோசனை மேற்கொண்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சுரங்கப்பாதை உள்ள மலையின் மேலே இருந்து கீழ்ப்பகுதி வரை செங்குத்தாகத் துளையிட்டு மீட்புப் பணியைத் தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மலை மீது செல்வதற்காக புதிய பாதைகள் அமைக்கும் பணிக்காக நூற்றுக்கணக்கான ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை; மீட்பு பணிகள் தீவிரம்!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
A child who fell into a borehole; Rescue operations are intense

மத்திய பிரதேசம் மாநிலம் ரேவா என்ற மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் திறந்தவெளி ஆழ்துளைக் கிணறு ஒன்று அமைக்கட்டுள்ளது. இதில் 6 வயது குழந்தை ஒன்று நேற்று (12.04.2024) தவறி விழுந்தது. இந்த குழந்தையை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது குறித்து ரேவா மாவட்ட ஆட்சியர் பிரதிபா பால் கூறுகையில், “ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். ஆழ்துளைக் கிணற்றின் ஆழம் 70 அடி ஆகும். 50 அடி ஆழம் தோண்டிய பின் கேமரா மூலம் கிடைத்த தகவலின் படி குழந்தை 45 முதல் 50 அடி ஆழத்தில் சிக்கியிருக்கலாம் என தெரிய வருகிறது.  தேசிய பேரிடர் மீட்புப்படையினர் குழந்தையை மீட்க கிடைமட்டமாக சுரங்கம் தோண்டி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து ரேவா மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அனில் சோன்கர் கூறும்போது, “சிறுவனின் பெயர் மயூர். தனது நண்பர்களுடன் சேர்ந்து அறுவடை செய்த கோதுமை பயிரிடப்பட்ட வயல்வெளியில் விளையாடிக் கொண்டிருந்த போது, ஆழ்துளை கிணற்றில் விழுந்தான். மற்ற குழந்தைகள் அவருக்கு உதவ முயன்றனர். ஆனால் அவர்களால் முடியாததால்  உடனடியாக மயூருடைய பெற்றோருக்குத் தகவல் கொடுத்தனர். இது குறித்து எங்களுக்குத் தகவல் கிடைத்ததும் 3.30 மணியளவில் ஸ்டேஷன் பொறுப்பாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். மூத்த அதிகாரிகள் சம்பவ இடத்தில் உள்ளனர் மீட்புப் பணியில் 2 ஜேசிபிகள், கேமராமேன்கள் குழு ஈடுபட்டுள்ளது. மாநில பேரிடர் மீட்புக்குழு குழு பனாரஸில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

மேலும் மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் கூறுகையில், “இந்த சம்பவம் வருத்தமளிக்கிறது. மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்தில் உள்ளன. குழந்தையைக் காப்பாற்ற அரசு நிர்வாகம் அனைத்து முயற்சிகளையும் செய்யும். எம்எல்ஏ சித்தார்த் திவாரி அந்த இடத்தில் இருக்கிறார். குழந்தையை மீட்கும் முயற்சியில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை; மீட்பு பணிகள் தீவிரம்!

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
A child who fell into a borehole; Rescue operations are intense

கர்நாடகா மாநிலம் விஜயபுரா மாவட்டம் இண்டி தாலுகாவிற்கு உட்பட்ட லச்சியான் என்ற கிராமத்தில் விவசாயத்திற்கு 30 அடி ஆழ ஆழ்துளை கிணறு ஒன்று தோண்டப்பட்டுள்ளது.  மேலும் இந்த ஆழ்துளை கிணற்றின் மூடாமல் இருந்துள்ளது. இந்நிலையில் தான் சுமார் 1.5 வயது குழந்தை ஒன்று இந்த ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்துள்ளது.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் குழந்தையை ஆழ்துளைக் கிணற்றில் இருந்து மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். குழந்தைக்கு ஆக்சிஜன் வழங்கப்பட்டுள்ள நிலையில் அவரை உயிருடன் மீட்கப்பட பொதுமக்கள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர். குழந்தையை மீட்கும் பணி சுமார் 12 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது.

அதே சமயம் மருத்துவக் குழுவும், ஆம்புலன்ஸ் வாகனமும் சம்பவ இடத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் வெளியான முதற்கட்ட தகவலின் படி, ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த குழந்தையின் பெயர் சாத்விக் என்பதும், குழந்தையின் தந்தை ஆழ்துளை கிணற்றை தோண்டி மூடாமல் விட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.