Skip to main content

சுரங்கப்பாதை விபத்தில் சிக்கியவர்கள் வீடியோ வெளியீடு; தொழிலாளர்கள் வேதனை!

Published on 21/11/2023 | Edited on 21/11/2023

 

Video release of subway incident Workers suffer

 

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி அருகே உள்ள சில்க்யாரா என்ற பகுதியில் அமைந்துள்ள யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கம் தோண்டும் பணி நடைபெற்று வந்தது. இந்த சூழலில் கடந்த 12 ஆம் தேதி (12/11/2023) காலை வழக்கம்போல் தொழிலாளர்கள் சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென எதிர்பாராத விதமாகச் சுரங்கப்பாதை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி பணியில் இருந்த 41 தொழிலாளர்கள் சுரங்கத்தின் உள்ளே சிக்கினர். சுமார் 4.5 கி.மீ. நீளமுள்ள சுரங்கப் பாதையில் 150 மீட்டர் இடிந்து விழுந்து இந்த விபத்து நிகழ்ந்தது.

 

மீட்புப் பணிகளில் 10வது நாளாகத் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படைகள், தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் இதுவரை உயிரிழப்பு ஏதும் இல்லை எனக் கூறப்படுகிறது. அதே சமயம் சரிந்து விழுந்த பாறைகளைச் சிறிதளவு அகற்றிவிட்டுக் குழாய்கள் மூலம் சுரங்கத்தில் சிக்கியுள்ள 40 தொழிலாளர்களுக்கு ஆக்ஸிஜன் மற்றும் திரவ உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றது என்று தகவல்கள் வெளியாகி இருந்தன.

 

அதனைத் தொடர்ந்து இடிபாடுகளில் சிக்கியவர்களுக்கு முதல் முறையாகச் சூடான உணவு வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானது. அதன்படி, அங்கு சிக்கியுள்ள 41 தொழிலாளர்களுக்கு கிச்சடி, டால் உள்ளிட்ட உணவு வகைகள் தரப்பட்டதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் சுரங்கப் பாதை விபத்தில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களின் வீடியோ வெளியாகியுள்ளது. வாக்கி டாக்கி மூலம் தொழிலாளர்களுடன் மீட்புக் குழுவினர் பேசும் காட்சிகளும் வெளியிடப்பட்டுள்ளன. அதில், “சுரங்கப் பாதைக்குள் சிக்கி 10 நாட்கள் ஆகிவிட்டதால் தங்கள் நிலைமை மோசமாகிவிட்டது. எனவே தங்களை உடனடியாக மீட்க வேண்டும்” என விபத்தில் சிக்கிய தொழிலாளர்கள் தங்களது வேதனையைத் தெரிவித்துள்ளனர். மருத்துவ சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் கேமரா மூலம் இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

“லஞ்சம் லஞ்சம்... எதற்கெடுத்தாலும் லஞ்சம்..” - வீடியோ வெளியிட்டுக் குமுறும் இளைஞர்

Published on 02/07/2024 | Edited on 02/07/2024
man released video  bribes are taken for whatever  Tehsildar  office

நெல்லையைச் சேர்ந்த நபர் ஒருவர் கூட்டுப் பட்டாவில் பெயர் சேர்க்க தாசில்தார் அலுவலகம் சென்றிருக்கிறார். அங்கு அவரிடம் ஒரு லட்சம் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை நடக்கும் என்று அதிகாரிகள் கூறியதாகச் சொல்லப்படுகிறது.

இது தொடர்பாக அந்த நபர் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், “தமிழக முதல்வர் அவர்களே வருவாய்த் துறையில் நடக்கும் அநியாயத்தைப் பாருங்கள். எதற்கெடுத்தாலும் லஞ்சம்; லஞ்சம் இல்லாமல் தாசில்தார் அலுவலகத்திற்குள் கால் வைக்கவே முடியாது. அவ்வளவு லஞ்சம் தலை விரித்து ஆடுகிறது. பட்டாவில் சிறிய மாறுதல் செய்ய 50 ஆயிரம் கொடு, ஒரு லட்சம் கொடுன்னு கசக்கி பிழிகிறார்கள்.

நான் ஒரு கூட்டுப் பட்டாவில் பெயர் சேர்ப்பதற்காக விண்ணப்பித்திருந்தேன். அதற்கு ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தால் மாற்றித் தருகிறோம் என்கின்றனர். நான் பணம் எல்லாம் தரமாட்டேன்; என்னிடம் அனைத்து ஆவணங்களும் சரியாக இருக்கிறது என்று கேட்டதற்கு, நீ எங்க வேண்டுமானாலும் செல் என்கிறனர். 

இது தொடர்பாக ஏகப்பட்ட மனு கொடுத்து, ஒரு வருடமா நடையா நடந்துகிட்டு இருக்கிறேன். ஆனால் இதுவரை எந்த மனுவுக்கும் நடவடிக்கை எடுக்கவில்லை. ரூ.1 லட்சம் லஞ்சமாகக் கொடுத்திருந்தால் ஒரு மணி நேரத்தில் எல்லாவற்றையும் முடித்துக் கொடுத்திருப்பார்கள். தயவு செய்து லஞ்சத்தைச் சட்டமாக்குங்கள்; லஞ்சம் கொடுத்தால்தான் இது முடியும் என்று கூறிவிட்டீர்கள் என்றால், நான் லஞ்சம் கொடுத்துவிட்டுப் போய்விடுவேன். ஆனால் நீங்கள் லஞ்சம் கொடுத்தால் தவறு என்கிறீர்கள். ஆனால் லஞ்சம் கொடுக்காமல் வேலையே நடைபெறுவதில்லை.

முதல்வரே தயவு செய்து பதிவுத்துறை அல்லது வருவாய்த்துறை இரண்டில் எதாவது ஒன்றை மட்டும் வையுங்கள்; எங்களால் இரண்டையும் சமாளிக்க முடியவில்லை. கடன்வாங்கி இடத்தை வாங்குனா, இவர்களுக்கு லஞ்சம் கொடுத்து மாளமுடியவில்லை. லஞ்சத்தைச் சட்டமாக்குங்கள்; இல்லையென்றால் இவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள்” என மன வேதனையில் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. 

Next Story

“விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன்” - வீடியோ வெளியிட்ட பிரஜ்வல் ரேவண்ணா!

Published on 27/05/2024 | Edited on 27/05/2024
I will give full cooperation to the investigation" - Brajwal Revanna released the video

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் எழுந்தது. அதாவது தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களைப் பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காகப் பயன்படுத்திக் கொண்டதாகப் பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து இந்தப் புகார் குறித்துச் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

அதனைத் தொடர்ந்து, பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாடு தப்பிச் சென்றுள்ள நிலையில் அவருக்கு எதிராக விமான நிலையங்களுக்கு 2 வது லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. மேலும், வெளிநாடு தப்பிச் சென்றுள்ள பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்ய சிபிஐ ப்ளூ கார்னர் நோட்டீஸ் விடுக்கப்பட்டது. அதன்படி, பிரஜ்வல் ரேவண்ணாவைப் பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். இதற்கிடையே, பிரஜ்வல் ரேவண்ணா இந்தியா வந்து சரணடைய வேண்டும் என்று முன்னாள் பிரதமர் தேவகவுடா எச்சரிக்கை விடுத்திருந்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “இந்தத் தருணத்தில் என்னால் ஒன்றுதான் செய்ய முடியும். நான் பிரஜ்வாலை கடுமையாக எச்சரித்து, எங்கிருந்தோ திரும்பி வந்து போலீசில் சரணடையச் சொல்லலாம். அவர் தன்னை சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டும். இது நான் விடுக்கும் முறையீடு அல்ல, நான் விடுக்கும் எச்சரிக்கை.

இந்த எச்சரிக்கைக்குச் செவிசாய்க்காவிட்டால், எனது கோபத்தையும், அவரது குடும்பத்தினர் அனைவரின் கோபத்தையும் அவர் சந்திக்க நேரிடும். அவருக்கு எதிரான விசாரணையில் என்னிடமிருந்தோ அல்லது எனது குடும்ப உறுப்பினர்களிடம் இருந்தோ எந்தவிதமான தலையீடும் இருக்காது என்பதை உறுதிசெய்வேன் என்பதையும் நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். அவர் மீதான குற்றச்சாட்டுகளைச் சட்டம் கவனித்துக் கொள்ளும். ஆனால் குடும்பத்தினரின் பேச்சைக் கேட்காமல் இருப்பது அவர் மொத்தமாகத் தனிமைப்படுத்தப்படுவதை உறுதி செய்யும். என் மீது அவருக்கு மரியாதை இருந்தால், அவர் உடனடியாக திரும்ப வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் பிரஜ்வல் ரேவண்ணா மே 31 ஆம் தேதி எஸ்.ஐ.டி. முன்பு ஆஜராகி விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன் என்று வீடியோ ஒன்றை இன்று (27.05.2024) வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் கர்நாடக மக்கள் மற்றும் தனது குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.