ADVERTISEMENT

அடேங்கப்பா இப்படியும் ஒரு வழிப்பறியா... வாயைப் பிளக்க வைக்கும் ஃபாஸ்டாக் மோசடி!

08:50 AM Jun 25, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

மகாராஷ்டிராவின் புறநகர் பகுதியில் இரண்டு இளைஞர்கள் சொகுசு காரில் சென்று கொண்டிருந்த நிலையில் சிக்னலுக்காக கார் நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அப்பொழுது கார் நின்று கொண்டிருந்த பொழுது காரின் கண்ணாடியை மிகவும் அக்கறையுடன் சிறுவன் ஒருவன் துடைத்தான். அதன்பிறகு அந்த சிறுவனுக்கு காரில் இருந்த இரு இளைஞர்களும் 'டிப்ஸ்' கொடுத்துள்ளனர். அதன்பின் உடனடியாக கார் சிக்னலில் இருந்து புறப்பட்டது. சிறிது நேரம் கழித்து இரு இளைஞர்களும் காருக்காக வைக்கப்பட்டிருந்த 'ஃபாஸ்டாக்' வங்கி கணக்கை சோதனை செய்தபோது பணம் முழுவதும் காணாமல் போயிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எந்த ஒரு சுங்கச்சாவடியையும் கடக்காத நிலையில் எப்படி 'ஃபாஸ்டாக்' கணக்கில் உள்ள பணம் திருடுபோய் இருக்கும் என குழம்பி தவித்த அந்த இரு இளைஞர்களும் சிக்னலை கடந்த நேரத்தில்தான் பணம் காணாமல் போயுள்ளது என்பதை யூகித்தனர்.

இதற்காக காத்திருந்த அந்த இளைஞர்கள் இரு வாரம் கழித்து அதே சிக்னலுக்கு சென்றுள்ளனர். அப்பொழுதும் சிக்னலுக்காக கார் காத்திருந்த பொழுது மற்றொரு சிறுவன் அதேபோல் காரின் முகப்பு கண்ணாடியை மிகவும் அக்கறையுடன் துடைப்பது போல் துடைத்தான். அப்பொழுது கூர்ந்து கவனித்தபோது அச்சிறுவனின் கையிலிருந்த டிஜிட்டல் வாட்ச் போன்ற பொருள் கார் கண்ணாடியின் மீது ஒட்டப்பட்டிருந்த 'ஃபாஸ்டாக்' ஸ்டிக்கரை ஸ்கேன் செய்வதையும் அதிலிருந்து சிவப்பு நிற ஒளி வெளியாவதைக் கண்டு அதிர்ந்த இளைஞர்கள், அந்த சிறுவனை கூப்பிட்டு டிப்ஸ் தருவதாகக் கூறினர். அருகே வந்த சிறுவனிடம் 'இது என்ன ஸ்மார்ட் வாட்சா? என்ன விலை' என்று கேட்டதைத் தொடர்ந்து, அந்த சிறுவன் சுதாரித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தான். இந்த மொத்த நிகழ்வுகளையும் இந்த இளைஞர்கள் வீடியோவாக பதிவு செய்த நிலையில் அதனை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டனர். இப்படி ஒரு நூதனமான முறையில் 'ஃபாஸ்டாக்' கணக்கிலிருந்து பணம் திருடுவது தொடர்பான இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT