ADVERTISEMENT

சசிகலா குறித்து ரூபா சொன்ன அனைத்து புகாரும் உண்மையே..? - லீக் ஆன அறிக்கை!

03:46 PM Oct 09, 2019 | suthakar@nakkh…

வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்ந்த வழக்கில் 4 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு கடந்த 2017 ஆம் ஆண்டி பிப்ரவரி மாதம் 14 தேதி சிறை சென்ற சசிகலா கடந்த 32 மாதங்களாக பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். நன்னடத்தை காரணமாக சின்னம்மா சிறையில் இருந்து விரைவில் வெளிவருவார் என்று அமமுகவினர் நம்பிக்கை தெரிவித்து வந்த நிலையில், சசிகலா அவ்வாறு வெளிவருவதற்கு பெரிய சிக்கலை ஏற்படுத்திய சம்பவம் இன்று நடந்துள்ளது. அதாவது சசிகலா சிறை சென்ற சில மாதங்களில் அவருக்கு சிறையில் விதிமுறைகளை மீறி விசே‌ஷ சலுகைகள் அளிக்கப்படுவதாகவும், சிறை விதிகளை மீறி அவர் வெளியே சென்றதாகவும் பரபரப்பு புகார் எழுந்தது.

ADVERTISEMENT



இது தொடர்பாக அப்போதைய கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா திடீர் சோதனை நடத்தி விதி மீறல்களை கண்டுபிடித்தார். சசிகலாவுக்கு சலுகைகள் வழங்க கர்நாடக சிறைத்துறை டிஜிபி சத்யநாராயண ராவ் ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாகவும் டிஐஜி ரூபா குற்றம் சாட்டினார். இந்த புகார்கள் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையில் உயர்மட்டக் குழுவை அப்போதைய கர்நாடக அரசு நியமித்தது. அந்த குழு தனது விசாரணை அறிக்கையை தாக்கல் செய்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. அதில், சிறை விதிகளை சசிகலா மீறியது உண்மைதான் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT



அந்த அறிக்கையில் சசிகலா சிறையில் அடைக்கப்பட்டதும் 5 செல்களில் இருந்த கைதிகளை வெளியேற்றி அவருக்காக பிரத்யேக அறை ஒதுக்கப்பட்டதாகவும், சிறையில் சசிகலாவுக்காக தனியாக சமையல் செய்யப்பட்டது உண்மைதான் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் லீக் ஆகியுள்ளது. மேலும், சிறையில் இருந்து விதிகளை மீறி சசிகலா வெளியே சென்றது குறித்து காவல் அதிகாரி ரூபா கூறிய புகார்கள் உண்மைதான் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது. எனவே, சசிகலா நன்னடத்தை அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை ஆவதில் சிக்கல் உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த அறிக்கையை கர்நாடக மாநில அரசு எப்படி எடுத்துக்கொள்ள போகிறது என்ற எதிர்பார்ப்பு தற்போது எழுந்துள்ளது.


Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT