Skip to main content

EPSக்கு எதிராகவும் OPSக்கு ஆதரவாகவும் சசி தரப்பு..! டெல்லி ஆடும் தேர்தல் ஆட்டம்! ராஜ்நாத் சிங்கை சந்தித்த சசிகலா தூதர்கள்!

SASIKALA

 

 

ஜெயலலிதா வீட்டிற்கு எதிரே சசிகலா வாங்கிய சொத்து, பினாமி சொத்து என வருமான வரித்துறை நோட்டீஸ் ஒட்டியது தமிழகத்தில் பல அரசியல் மாற்றங்களுக்கு வழிவகுத்துள்ளது.

 

சசிகலா, இளவரசி பங்குதாரர்களாக இருக்கும் ஹரிச்சந்தனா எஸ்டேட்ஸ் பிரைவேட் லிமிடெட் என்கிற கம்பெனிக்கு சொந்தமாக போயஸ்கார்டன், ஆலந்தூர், கொளப்பாக்கம், கூடுவாஞ்சேரி ஆகிய நான்கு இடங்களில் உள்ள சொத்துகளின் மீது வருமான வரித்துறை திடீரென நோட்டீஸ் ஒட்டியது. அத்துடன் அ.தி.மு.க.வின் ஐ.டி.விங் இந்த செய்தியை மீடியாக்களில் பரப்பியது. இது டி.டி.வி. தினகரன் அணியை டென்ஷன் ஆக்கியது.

 

ஜெயலலிதாவின் போயஸ் கார்டனுக்கு எதிரே சசிகலா வீடு கட்டுகிறார் என கடந்த மே மாதமே நக்கீரன் புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டது. ஆங்கில ஊடகங்கள் நக்கீரனின் செய்தியை எதிரொலித்தன. அந்த இடத்தில் கட்டிட வேலை நடந்து கொண்டிருக்கிறது. அந்த வேலைகளுக்கு பாதுகாப்பாக சசிகலாவின் உறவினர் கார்த்திகேயன் அங்கேயே தங்கியிருக்கிறார். அங்கு இருக்கும் வேலை ஆட்களிடமோ, கார்த்திகேயனிடமோ நோட்டீஸ் வழங்காமல் மீடியாக்களுக்கு தெரியப்படுத்திவிட்டு வருமான வரித்துறை அதிகாரியாக இருக்கும் திலீப் தலைமையில் நான்கு அதிகாரிகள் சசிகலா வீடு கட்டி வரும் இடத்தில் நோட்டீஸ் ஒட்டினர்.

 

eps

 

அறப்போர் இயக்கத்தின் தலைவரான ஜெயராமன், "சசிகலா கட்டி வரும் வீடு ஹரிச்சந்தனா எஸ்டேட்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்திற்கு சொந்தமானது. அந்த இடத்தை வாங்க தாதுமணல் கொள்ளையடிப்பவர் என ஏராளமான வழக்குகளை சந்திக்கும் வைகுண்டராஜனும், இராமச்சந்திரா மருத்துவமனை நிர்வாகியான வெங்கடாச்சலமும் கோடிக்கணக்கில் ஹரிச்சந்தனா எஸ்டேட் நிறுவனத்திற்கு கடன் கொடுத்தார்கள். அந்த பணத்தை வைத்துத்தான் சசிகலாவும் இளவரசியும் இந்த நிலத்தை வாங்கினார்கள். இது ஊழலா, லஞ்சமா? 1991-96 காலக்கட்டத்தில் ஜெயலலிதா செய்த ஊழல்களுக்கு சசிகலா இன்று வரை சிறையில் இருக்கிறார். அதற்கு பிறகு செய்த ஊழல் இது. இதற்கு எப்போது தண்டனை?'' என கேள்வி எழுப்பினார். இவையெல்லாம் சசிகலா தரப்பை கோபமடைய வைத்தது.

 

01.11.2016 அன்று சசிகலா பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது 1200 கோடி ரூபாய் சொத்து வாங்கினார் என 6 கம்பெனிகளின் சொத்துகளை பினாமி சொத்துகள் என வருமான வரித்துறை அறிவித்தது. அடுத்து டெல்லியில் உள்ள கோர்ட்டில் சசிகலா 25 கோடி ரூபாய் கட்டி வழக்கு போட்டார். இந்நிலையில், நோட்டீஸ் விவகாரத்தால் சசிகலாவின் கோபத்தை அறிந்த டி.டி.வி. தினகரன் அவரது வழக்கறிஞர் ராஜாசெந்தூர் பாண்டியை களத்தில் இறக்கினார்.

 

ops

 

மீடியாக்களில் விளக்கம் அளித்த ராஜா செந்தூர் பாண்டியிடம் நாம் பேசியபோது, "ஒரு கம்பெனியில் ஒருவர் பங்குதாரராக இருக்கிறார் என்பதால் அந்த கம்பெனி வாங்கும் சொத்துகள் அவரது சொத்துகளாகிவிடாது. அதை பினாமி என்று யாராலும் கூறிவிட முடியாது. பினாமி சொத்து என்றால் யாருடைய பினாமி சொத்து என வருமான வரித்துறை கூறுகிறதோ, சசிகலா அவர்களிடம் விளக்கம் கேட்க வேண்டும். அப்படி எந்த விளக்கமும் சிறையில் இருக்கும் சசிகலாவிடம் கேட்கப்படவில்லை. முதலில், நோட்டீஸை சம்மந்தப்பட்டவர்களுக்கு கொடுக்க வேண்டும், அவரது விளக்கத்தை கேட்க வேண்டும். அந்த விளக்கத்திற்கு பிறகும் ஒரு குறிப்பிட்ட சொத்து பினாமி சொத்து என வருமான வரித்துறை அறிவிக்குமானால் அதுவே இறுதியாகிவிடாது. அதற்கு பிறகு மாஜிஸ்திரேட் நீதிமன்றங்கள் தொடங்கி சுப்ரீம் கோர்ட் வரை வழக்குகள் நடத்தலாம். அப்போதுதான் அந்த சொத்துப்பற்றி ஒரு இறுதியான முடிவுக்கு வரமுடியும். சம்மந்தப்பட்டவருக்கு தெரியாமல் அவரது சொத்தில் நோட்டீஸ் ஒட்டிய வருமானவரித்துறை அதிகாரி கோகுலின் செயல் கண்டிக்கத்தக்கது'' என்கிறார் வழக்கறிஞர் ராஜாசெந்தூர் பாண்டி.

 

rrrrr

 

போயஸ் கார்டனில் உள்ள சசிகலாவின் வீட்டில் நோட்டீஸ் ஒட்டிய அதிகாரிகளை அங்கிருக்கும் சசிகலாவின் ஆட்கள் படம் எடுத்தார்கள். நோட்டீஸ் ஒட்டிய நான்கு பேரில் இரண்டு பேர் சேலம் மாவட்டத்தை சேர்ந்த வருமானவரித்துறை அதிகாரிகள். அதில் ஒருவரின் தந்தை கடலூர் மாவட்ட அதிமுக நிர்வாகியாக இருக்கிறார் என கண்டுபிடித்திருக்கிறார்கள். எனவே இந்த நடவடிக்கை எடப்பாடி பழனிசாமி, சசிகலாவுக்கு எதிராக மேற்கொண்ட ஒரு நடவடிக்கை என்ற முடிவுக்கு சசிகலா வகையறாக்கள் வந்துள்ளனர். அவர்கள், சசிகலாவுடன் தொடர்பு வைத்துள்ள பாஜகவின் தலைவரான ராஜ்நாத் சிங்கை சந்தித்தார்கள். அமித்ஷா உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால் அமித்ஷாவின் பொறுப்பை ராஜ்நாத்சிங்தான் கவனித்துக்கொள்கிறார்.

 

ssssssss

 

அவரிடம், எஸ்.எம்.எஸ். என அழைக்கப்படும் சுனில், எடப்பாடி மகன் மிதுன், ஓய்வுபெற்ற உளவுத்துறை அதிகாரியான சத்தியமூர்த்தி ஆகியோர் இணைந்து சசிகலாவுக்கு எதிராக தமிழகத்தில் உள்ள வருமான வரித்துறை அதிகாரிகளை இயக்குகிறார்கள் என சசிகலா தரப்பு புகார் தெரிவித்தது. அவர்களிடம் பதில் அளித்த ராஜ்நாத் சிங், "எடப்பாடி சமீப காலமாக பாரதிய ஜனதாவுக்கு எதிராக செயல்படுகிறார். அவருடைய மகன் மிதுன் கரோனா ஊரடங்கு காலத்தில் கல்கத்தாவில் இருந்து ஒரு தனி விமானத்தில் 12 ஆயிரம் கோடி ரூபாய் எடுத்துக்கொண்டு போய் ஆப்பிரிக்காவின் மொசாம்பிக் நாட்டிலும், இந்தோனேஷியாவிலும் நிலக்கரி சுரங்கங்களை வாங்கினார். (இதை ஏற்கனவே நக்கீரன் ராங் காலில் வெளியிட்டிருந்தது).

 

இந்த தகவலை மத்திய உளவுத்துறை இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு பணத்தை முதலீடு செய்யும் ஹவாலா குழுக்களிடம் விசாரித்தது. அப்படி ஐந்து குழுக்கள் இந்தியாவில் இயங்குகின்றன. ஐந்து குழுக்களும் எடப்பாடி 12 ஆயிரம் கோடி ரூபாயை மொசாம்பிக்கிலும், இந்தோனேஷியாவிலும் முதலீடு செய்திருப்பதை உறுதிப்படுத்தின. அதன் பிறகு நாங்கள், எடப்பாடியையும், எடப்பாடிக்கு நெருக்கமான தங்கமணி, வேலுமணி ஆகிய இரு அமைச்சர்களையும் கண்காணிக்க ஆரம்பித்தோம். அவர்களைப் பற்றி ஆதாரத்தை திரட்ட ஆரம்பித்தோம். அதில் வேலுமணி மீது மொத்தம் 13 வழக்குகளை தொடரும் அளவிற்கு ஆதாரம் கிடைத்தது. தங்கமணி மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர்மீது தலா பத்து வழக்குகள் தொடருவதற்கான ஆதாரம் உள்ளது. எடப்பாடியின் உறவினர்கள் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது பெங்களூருவில் கட்டுக்கட்டாக 2000 ரூபாய் பணத்துடன் சிக்கினார்கள். அது தவிர கொடநாடு கொலை வழக்கு எடப்பாடியின் தலைக்கு மேல் கத்தியாக தொங்கிக்கொண்டிருக்கிறது. எடப்பாடியின் இந்த நடவடிக்கைகளால்தான் அ.தி.மு.க.வை ஓ.பி.எஸ்.ஸின் கண்ட்ரோலில் கொண்டுவர அவருக்கு சமீபத்தில் கொம்பு சீவி வைத்துள்ளோம். ஓ.பி.எஸ்.ஸூம் உற்சாகமாக எடப்பாடிக்கு எதிராக தீவிரமாக இயங்கி வருகிறார்.

 

rrrrr

 

இந்நிலையில்தான் சிறையில் இருந்து வெளிவரும் சசிகலாவும் ஓ.பி.எஸ்.ஸூம் ஒன்றாக சேர்ந்து எடப்பாடியின் ஆட்சிக்கு ஆபத்து விளைவிப்பார்கள் என கணக்குபோட்டு அவசர அவசரமாக ஊழல் வழக்கில் அரசின் சொத்தாக மாறிய ஜெயலலிதாவின் வீட்டை நினைவில்லமாக்க எடப்பாடி அரசாணை பிறப்பித்தார். அடுத்தகட்டமாக அந்த வீட்டிற்கு எதிரே சசிகலா கட்டி வரும் வீட்டிற்கு அவருக்கு தெரிந்த வருமான வரித்துறை அதிகாரிகளை அனுப்பி பிரச்சனை செய்திருக்கிறார்'' என தெளிவாக ராஜ்நாத் சிங் சசிகலாவுக்கு நெருக்கமான தொழிலதிபர்களிடம் பேசியிருக்கிறார்.

 

"தமிழக அரசியலில் தனிப்பெரும் சக்தியாகவும் ஒட்டுமொத்த அ.தி.மு.க.வில் தலைவராகவும் முதல்வர் வேட்பாளராகவும் வர எடப்பாடி  பழனிசாமி முயற்சி செய்கிறார். அதை பா.ஜ.க ஏற்காது. நாங்கள் முறியடிப்போம். விரைவில் எடப்பாடி மீதான மத்திய அரசின் வழக்கு தாக்குதலால் அவர் நிலைகுலைந்து போவார்'' என ராஜ்நாத் சிங், தன்னை சந்தித்த சசிகலா ஆதரவு தொழிலதிபர்களிடம் விளக்கியுள்ளார்.சசிகலாவின் சொந்த பந்தங்களில் விவேக்கின் அக்காவான கிருஷ்ணப்பிரியா பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது சசிகலா வாங்கிய சொத்துகள் தொடர்பாக ஒரு கடிதத்தை வைத்திருந்தார். அந்த கடிதத்தை கைப்பற்றிய வருமான வரித்துறை அதில் இருந்த 6 கம்பெனிகளின் கணக்கு வழக்குகளை சரிபார்த்து 1,650 கோடி ரூபாய் பினாமி சொத்துகள் சசிகலாவுக்கு இருக்கிறது என வழக்குப்போட்டது. அது தொடர்பான விசாரணைக்கு கிருஷ்ணப்பிரியா சென்றார்.

 

ttv

 

கிருஷ்ணப்பிரியாவின் உளறல்தான் அந்த பினாமி சொத்துகளின் விவகாரத்திற்கு காரணம் என்பதால் சசிகலா தரப்பு வாய்மூடி மவுனமாக இருந்தது. அந்த பட்டியலில் ஹரிசந்தனா எஸ்டேட் பிரைவேட் லிமிடெட் வரவில்லை. திடீரென சசிகலா போயஸ் கார்டனில் கட்டி வரும் வீட்டின் உரிமையாளரான ஹரிசந்தனா எஸ்டேட் மீது வருமான வரித்துறை பாய்ந்திருப்பதற்கு அரசியல் காரணங்கள் இருக்கிறது என சசிகலா தரப்பு சந்தேகப்படுகிறது.

 

ராஜ்நாத் சிங்கை சந்தித்தபிறகு இதற்கு காரணம் எடப்பாடி பழனிசாமி என புரிந்து கொண்ட சசிகலா தரப்பு எடப்பாடிக்கு எதிராகவும் ஓ.பி.எஸ்.க்கு ஆதரவாகவும் களம் இறங்கப்போவதாக மன்னார்குடி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

இதைப்பற்றி நம்மிடம் பேசிய வருமான வரித்துறை அதிகாரிகள், "இது ஒரு வழக்கமான நடவடிக்கைதான். பினாமி சட்டப்படி ஒரு கம்பெனியில் டைரக்டராக உள்ள ஒருவர் வாங்கிய சொத்துகள் பற்றி வருமான வரித்துறை விளக்கம் கேட்கும். அவர்கள் கொடுக்கும் விளக்கம் சரியாக இல்லாவிட்டால் ஒரு குறிப்பிட்ட கம்பெனியின் சொத்துக்களை பினாமி சொத்துகள் என வருமான வரித்துறை முடிவு செய்து அதற்குரிய சட்ட ரீதியான நடவடிக்கைகளில் இறங்கும். அப்படி எடுக்கப்பட்ட நடவடிக்கைதான் போயஸ் கார்டனில் சசிகலா கட்டி வரும் வீட்டில் ஒட்டப்பட்ட நோட்டீஸ். இதற்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் எந்த சம்மந்தமும் இல்லை'' என்கிறார்கள்.

 

வருமான வரித்துறை நோட்டீஸ் ஒட்டப்பட்டதால் போயஸ் கார்டனில் அவருக்காக கட்டப்பட்டு வரும் வீட்டின்மீது சசிகலா அதிருப்தி அடைந்திருக்கிறார். எனவே அது கட்டி முடிக்கப்பட ஆறு மாத காலம் ஆகலாம் என்பதால் அவர் வழக்கமாக தங்கும் தி.நகர் பகுதியில் உள்ள இளவரசியின் வீட்டிற்கு அருகே ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்ட வீடு ஒன்றை வாங்க உத்தரவிட்டுள்ளார். ஜனவரி மாதம் சிறையில் இருந்து வெளியே வரும் வாய்ப்புள்ள அவர், போயஸ் கார்டன் வீட்டில் தங்கப்போவதில்லை. தி.நகரில் புதிதாக வாங்கிய வீட்டில் தங்கித்தான் தனது அரசியலை தொடங்க உள்ளார்.

 

இப்போதைக்கு எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கடும் கோபத்தில் இருக்கும் சசிகலா அடுத்த வாரம் சிறையில் டிடிவி தினகரனை சந்திக்கிறார். அதன் பிறகு அவரது அரசியல் அசைவுகள் ஒவ்வொன்றாக வெளிவரும். அதிமுகவில் கலகம் வெடிக்கும் என்கிறார்கள்.

 

அதேநேரத்தில் சசிகலாவிடம் இருந்து வரும் ஆபத்துகளை எதிர்கொள்ளவும் சசிகலாவுக்கு ஆதரவாக பாஜக திரும்புவதை தடுக்கவும் தங்கமணி, வேலுமணி ஆகியோரை டெல்லிக்கு அனுப்பி மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் மூலம் நரேந்திர மோடியை சந்திக்க ஏற்பாடு செய்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி என்கிறது அதிமுக வட்டாரம். 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்