ADVERTISEMENT

மீண்டும் உயிரிழப்பு: ஆளுநர் கேட்ட அறிக்கையும் மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கையும் - பரபரப்பில் புதுச்சேரி

05:46 PM Apr 03, 2023 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

நாடு முழுவதும் ப்ளூ காய்ச்சலின் பரவல் அதிகரித்துள்ளதோடு கொரோனா பாதிப்பும் அதிகரித்து வருகிறது. இதனை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வந்த நிலையில் அதன் விளைவாக மாநில அரசுகளுக்கு கடிதங்கள் வாயிலாக முன்னெச்சரிக்கையோடு நடவடிக்கைகள் எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். காரைக்காலில் மட்டும் கடந்த நான்கு நாட்களில் 20க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கொரோனா தொற்று காரணமாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது. காரைக்காலில் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு கொரோனா தொற்றால் ஒரு உயிரிழப்பு பதிவாகியுள்ளது.

காரைக்காலில் கொரோனோவால் பெண் இறந்த நிலையில், புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அம்மாநில சுகாதாரத்துறையிடம் அறிக்கை தரக் கோரியுள்ளதாகக் கூறியிருந்தார்.

இந்நிலையில் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காரைக்கால் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவல் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் பொருட்டு பொது இடங்களில் மக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும். மேலும், தியேட்டர், வணிக வளாகங்கள், மருத்துவமனை மற்றும் பொதுமக்கள் அதிக கூடும் இடங்களில் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளி கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT