/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/court4_0.jpg)
விழுப்புரம் நகரை ஒட்டியுள்ளது கிழக்கு சண்முகாபுரம் காலனி. இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சண்முகம். இவர் நகரின் விரிவாக்க பகுதிக்காக பல ஆண்டுகளுக்கு முன்பு, தனக்கு சொந்தமான கிழக்கு புதுச்சேரி சாலை அருகில் ஆறு ஏக்கர் 75 சென்ட் நிலத்தை,கடந்த 1991ஆம் ஆண்டில் தமிழக அரசு நில ஆர்ஜித சட்டத்தின்படி தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு வழங்கியுளளார்.
இதில் சண்முகத்தின் மகன் சிவானந்தம் என்பவருக்கு சேர வேண்டிய ஒரு ஏக்கர் 50 சென்ட் நிலத்திற்கு, ஒரு சதுர அடிக்கு எட்டு ரூபாய் பத்து பைசா என்று இழப்பீடு தொகை நிர்ணயிக்கப்பட்டு, மொத்தம் 4 லட்சத்து 55 ஆயிரத்து 332 ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளனர். இந்த தொகை அப்போதைய சந்தை மதிப்பை விட மிகவும் குறைவாக இருப்பதாகக் கூறி சிவானந்தம் விழுப்புரம் மாவட்ட முதன்மை சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் கடந்த 2018ஆம் ஆண்டு, சதுர அடிக்கு 500 ரூபாய் எனக் கணக்கிட்டு நிலம் கையகப்படுத்தப்பட்ட 1991ஆம் ஆண்டு முதல் அதற்கான வட்டியுடன் சேர்த்து மொத்த இழப்பீட்டுத் தொகையாக 39 கோடியே 36 லட்சத்து 59 ஆயிரத்து 337 வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அப்போது முதல் சிவானந்தத்திற்கு இழப்பீடு தொகை வழங்காமல், மாவட்ட ஆட்சியர் வீட்டு வசதி வாரிய அலுவலர் மற்றும் அதிகாரிகள் காலதாமதம் செய்து வந்துள்ளனர். இதனையடுத்து மனுதாரர் முருகானந்தம் நீதிமன்றத்தில் நீதிமன்ற கட்டளையை நிறைவேற்றக் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இதனையடுத்து அவருக்குரிய இழப்பீட்டுத் தொகையை மூன்று மாதத்திற்குள் நீதிமன்றத்தில் டெபாசிட் செய்ய வேண்டும் என்று கடந்த ஆண்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த தொகையை வழங்க மீண்டும் காலதாமதம் ஆகியுள்ளது. இந்த நிலையில், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வீட்டு வசதி வாரிய செயற்பொறியாளர் மற்றும் நிர்வாக அதிகாரி அலுவலகங்கள் ஆகியவற்றில் உள்ள அசையும் சொத்துக்களை ஜப்தி செய்யுமாறு கடந்த மார்ச் மாதம் 24ஆம் தேதி நீதிபதி மோனிகா உத்தரவிட்டுள்ளார். உத்தரவையடுத்து நேற்று (07/04/2021) காலை 11.00 மணிக்கு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பொருட்களை ஜப்தி செய்ய நீதிமன்ற ஊழியர்கள் சென்றனர்.
அவர்களைப் பார்த்த மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மோகன், வீட்டு வசதி வாரிய அதிகாரிகளையும் வரவழைத்துமூன்று தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தினர். இழப்பீட்டுத் தொகை வழங்ககால அவகாசம் வேண்டும் என்று கேட்டுக்கொண்டதன் பேரில், அதற்கு மூன்று தரப்பும் ஒப்புக்கொண்டதால் நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி நடவடிக்கையை தற்காலிகமாக கைவிட்டுச் சென்றுள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)