ADVERTISEMENT

"இது பேரழிவுகளை ஏற்படுத்தும்" - மோடிக்கு ராகுல் காந்தி கடிதம்!

03:23 PM Apr 09, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்தியாவில் கரோனாவின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், மஹாராஷ்ட்ரா உள்ளிட்ட மாநிலங்கள், தடுப்பூசி பற்றாக்குறை இருப்பதாக கூறியுள்ளனர். மேலும் கரோனா தடுப்பூசி செலுத்தும் வயதை 18 வயதுக்கு குறைக்க வேண்டும் எனவும் சில மாநிலங்கள் கோரிக்கை விடுத்தன. இதுகுறித்து பிரதமர் தலைமையிலான கூட்டத்திலும் நேற்று (08.04.2021) ஆலோசிக்கப்பட்டது. இருப்பினும் பிரதமர் அக்கோரிக்கைகளை ஏற்க மறுத்தார்.

இந்தநிலையில் ராகுல் காந்தி, கரோனா தடுப்பூசி தொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர், கரோனா தடுப்பூசியை தேவையான அனைவருக்கும் உடனடியாக வழங்க வேண்டும் என கூறியுள்ளார். கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழில், பிரதமர் மோடியின் படம் இடம்பெறுவதை மறைமுகமாக சாடியுள்ள அவர், நமது கரோனா தடுப்பூசி திட்டம், தடுப்பூசி சான்றிதழில் தனிநபர் புகைப்படம் இடம்பெறுவதை தாண்டி, அதிகமான தடுப்பூசி செலுத்தப்படுவதை உறுதிபடுத்தும் இடத்திற்கு நகர வேண்டும் எனக் கூறியுள்ளார்.

மேலும் ராகுல் காந்தி, "நமது விஞ்ஞான சமூகம் மற்றும் தடுப்பூசி தயாரிப்பாளர்களின் முயற்சிகள், மத்திய அரசின் தவறான நடைமுறைபடுத்தலாலும், அசட்டையான தன்மையாலும் குறைவாக மதிப்பிடப்படுகின்றன. தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. மூன்று மாதங்களில் ஒரு சதவீத மக்களுக்குத்தான் முழுமையாக தடுப்பூசி செலுத்தியுள்ளோம். தற்போதைய வேகத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்டால், நாட்டின் 75 சதவீத மக்களுக்குத் தடுப்பூசியை செலுத்தி முடிக்க சில வருடங்கள் ஆகும். அது பேரழிவுகளை ஏற்படுத்துவதோடு, இந்தியப் பொருளாதாரத்தின் வேகத்தைக் கடுமையாக குறைக்கும். நமது நாட்டில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டிருக்கும் நிலையில், மத்திய அரசு ஏன் பெரிய அளவில் தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்ய அனுமதிக்கிறது என்பதற்கு தெளிவான காரணங்கள் இல்லை. 6 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன" என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், "மாநிலங்கள் தொடர்ந்து தடுப்பூசி பற்றாக்குறையை வெளிச்சம் போட்டு காட்டுகின்றன. அதற்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடம் இருந்து சுயகட்டுப்பாடு இல்லாத, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களைக் குறிவைக்கும் பேச்சுகளே கிடைக்கின்றன. அது நீங்கள் அவசியம் என்று வலியுறுத்திய கூட்டுறவு கூட்டாட்சி முறையை நீக்குகிறது" என கூறியுள்ளார். கரோனா தடுப்பூசி ஏற்றுமதிக்கு உடனடியாக தடைவிதிக்க வேண்டும் எனவும் ராகுல் காந்தி, கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT